வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்ய அவுஸ்திரேலியா பயணமான குற்றப் புலனாய்வுக் குழு!

ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களக் குழு ஒன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவல் துறை பரிசோதகர் மற்றும் உபகாவல் துறை பரிசோதகர் ஆகியோர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் ஒருவாரம் தங்கியிருந்து மெல்போர்னில் உள்ள ஊடகவியலாளர் கீத் நொயரிடம் வாக்கு மூலம் பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கீத்நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், இராணுவ தலைமை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற அமல் கருணாசேகர உட்பட சில இராணுவ புலனாய்வாளர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார் தெஹிவளையில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.