வில்லி வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்! – த்ரிஷா

‘திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை’ என த்ரிஷா பேட்டி அளித்துள்ளார்.

த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கொடி’. தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தை, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து ‘மோகினி’ ரிலீஸாக இருக்கிறது. மாதேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. அவரிடம் உரையாடியதில் இருந்து…

‘மோகினி’ படத்தில் உங்களுடைய கேரக்டர் என்ன?

முதன்முறையாக வைஷ்ணவி, மோகினி என இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன். ஒரு வேடம், இன்னொரு வேடத்துக்கு அப்படியே எதிர்மறையாக இருக்கும். வைஷ்ணவி, ரொம்ப சிம்பிளான பெண். சாதாரணமாக இருப்பார். முதன்முறையாக லண்டன் செல்வார். மோகினி, பயங்கர ஸ்ட்ராங்கான பெண். நல்ல விஷயங்களுக்காக சண்டை போடுகிற ஆள். இப்படி இரண்டு வெவ்வேறான வேடங்களில் நடிப்பது ரொம்ப ரொம்ப சவாலாக இருந்தது. உடல் மொழி, ஆடைகள், தோற்றம் என எல்லாவற்றிலும் இரண்டு வேடங்களை வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. எனவே, இந்தப் படம் எல்லாருக்கும் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். கமர்ஷியல் படங்களுக்கான ரொமான்ஸ், ஆக்‌ஷன், காமெடி என எல்லாவிதமான அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும். இதுக்கு முன்னாடி சில படங்களில் எனக்கு ஆக்‌ஷன் காட்சிகள் இருந்திருக்கின்றன. ஆனால், இவ்வளவு சண்டை போட்டது முதன்முதலில் இந்தப் படத்துக்குத்தான். எந்த முன்முடிவும் இல்லாமல், குடும்பத்தோடு தியேட்டருக்குச் சென்று படம் பாருங்கள்.

90 சதவீத படத்தை லண்டனில் படமாக்க வேண்டிய அவசியம் என்ன?

லண்டனில் தான் படம் நடப்பதாகக் கதை எழுதியிருந்தார் மாதேஷ். சமையற்கலை நிபுணரான வைஷ்ணவி, வேலைக்காக லண்டன் செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. வைஷ்ணவி – மோகினி இடையிலான தொடர்பு ஏற்படுவதே அங்குதான்.

ஹீரோயினை முன்னிலைப்படுத்திய படங்கள் தற்போது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகின்றன. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். இந்த மாற்றம், ஹீரோயின்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். வித்தியாசமான வேடங்கள், கதைகளை முயற்சித்துப் பார்க்கலாம். ரசிகர்களும் அதற்கு ஆதரவு தருவார்கள் என்று நினைக்கிறேன்.

உங்களுடைய படங்களிலேயே சிறந்த 5 படங்கள் எதுவென்று சொல்ல முடியுமா?

கில்லி

சாமி

விண்ணைத் தாண்டி வருவாயா

கொடி

அபியும் நானும்

இதுவரை நீங்கள் நடிக்காத, இனிமேல் நடிக்க விரும்பும் கேரக்டர் எது?

வில்லி வேடம் எனக்குக் கொஞ்சம் சவாலாக இருக்கும். ‘கொடி’ பண்ணும்போது தயக்கத்துடன் தான் பண்ணேன். ‘நீங்கள் ஒரு ஸ்டாராக இருக்கும்போது ஏன் இந்த மாதிரி வேடத்தில் நடிக்கிறீர்கள்?’ என்றுகூட சிலர் கேட்டனர். ஆனால், எப்போதும் எனக்குப் பிடித்த படமாக ‘கொடி’ இருக்கும். அதனால், வில்லி வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்புறம், பீரியட் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

‘கொடி’யில் அரசியல்வாதியாக நடித்த அனுபவம் குறித்து…

‘கொடி’யில் என்னுடைய கேரக்டர் வில்லத்தனமானது. அந்த கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. என் மனதில் ரிஸ்க் வைத்துக் கொண்டுதான் அந்தப் படத்தில் நடித்தேன். அதை சந்தோஷமான சவால் என்று சொல்லலாம்.

சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவது அதிகமாகி வருகிறதே…

இந்த மாதிரி விஷயங்களைக் கேள்விப்படும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். கல்வியும் விழிப்புணர்வும் மிக மிக அவசியம். ஒரு நடிகையாக என்னால் என்ன முடியுமோ, அதை நான் செய்ய முயற்சிக்கிறேன்.

உங்கள் படங்கள் வெளியாவதில் இவ்வளவு இடைவெளி ஏன்?

உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அதுவாக ஏற்பட்ட இடைவெளி தான். நானாகத் திட்டமிட்டு எந்த இடைவெளியையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சில படங்கள் தாமதமாகி விட்டன. ‘மோகினி’ ஷூட்டிங் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷனில் அதிக வேலை இருந்ததால், ரிலீஸாக இத்தனை நாட்களாகி விட்டன. இதுபோலத்தான் ஒவ்வொரு படமும். எதுவாக இருந்தாலும், அதை நான் நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன். அதேபோல் தற்போது அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. அதையும் நான் திட்டமிடவில்லை. தானாக எல்லாமே நடக்கிறது.

தற்போது என்னென்ன படங்கள் உங்கள் கைவசம் இருக்கிறது?

‘பரமபதம்’ என்றொரு படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘சதுரங்க வேட்டை 2’, ‘96’ இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன.

நயன்தாராவைப் போல் நீங்களும் சொந்தமாகப் படம் தயாரிப்பீர்களா?

இப்போதைக்கு இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் தயாரிக்கலாம். படம் தயாரிப்பது என்பது மிகப்பெரிய ரிஸ்க். அந்த நம்பிக்கை இப்போது இல்லை.

நடிப்பு தவிர்த்து த்ரிஷாவின் விருப்பங்கள் என்னென்ன?

பயணம் போவதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். விளையாடுவது கூட பிடிக்கும். அதையும் நான் ஒருபக்கம் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், எந்த நேரத்தில் என்ன தேவையோ அல்லது பிடிக்கிறதோ, அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

புதிய இயக்குநர்களின் படங்களில் நடிப்பீர்களா?

கண்டிப்பாக நடிப்பேன். நிறைய அறிமுக இயக்குநர்களின் படங்களில் ஏற்கெனவே நடித்திருக்கிறேன். கதையை மட்டும்தான் முதலில் நான் நம்புவேன். கதை பிடித்திருந்தால் மட்டுமே மற்ற விஷயங்களைப் பார்ப்பேன். அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவது எனக்குப் பிடிக்கும். ஏனென்றால், சாதிக்க வேண்டுமென அவர்களிடம் ஒரு ஃபயர் இருக்கும்.

மாடலிங்கில் இருந்துதான் சினிமாவுக்கு வந்தீர்கள். இப்போதும் மாடலிங்கில் ஆசை இருக்கிறதா?

மனதைத் தொட்டு சொன்னால், மாடலிங்கில் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. விளம்பரப் படங்களில் நடிப்பது பிடிக்கும். ஆனால், இந்த ராம்ப் வாக் போன்ற விஷயங்களில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதற்காக அதைத் தவறென்று சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கவில்லை, அவ்வளவு தான். அதேசமயம், மாடலிங் இல்லையென்றால் நான் இங்கு இருந்திருக்க முடியாது. அதுதான் எனக்கான கதவுகளைத் திறந்து வைத்தது.

நீங்கள் நிறைய சாப்பிடுவீர்கள் எனத் தெரியும். ஆனால், இந்த உடல்வாகை எப்படிக் கடைப்பிடிக்கிறீர்கள்?

அதுக்குக் காரணம் மரபணுக்கள் தான். நல்லா சாப்பிடுவேன், அதே அளவுக்கு நல்லா உடற்பயிற்சியும் செய்வேன். நடிகைகளுக்கு இந்த விஷயத்தில் பொறுப்புணர்வு அதிகம். ஏனென்றால் மக்கள் உங்களைத் தினமும் பார்க்கின்றனர். திரையில் நீங்கள் அழகாகத் தெரிய வேண்டும். அப்புறம், என்னை நானே நன்றாக கவனித்துக் கொள்வேன்.