எந்த தடை ஏற்பட்டாலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக இணைப் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை அமுல்படுத்தினால் GSP வரிச்சலுகை இல்லாமல் போகுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த சலுகை இல்லாமல் போனலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரத்திற்கு துணையாக இருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காலி விளையாட்டரங்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்டிடங்களை அகற்ற இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பதிலளித்துள்ளார்.
விஷேட மேல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நடத்தி செல்வதற்கான இடம் புனர்நிர்மணம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கும் மத்தள விமான நிலையம் இந்தியாவிற்கும் வழங்குவது அரசியல் பிரச்சினைகள் ஏற்படாமல் சமநிலை படுத்துவதற்காகவே எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் அமைக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாகும். இருப்பினும் அதனை எவ்வித திட்டமும் இன்றி அமைத்ததே பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்க ஆரம்பித்திருந்தால் அது இப்போது மிகவும் வேலைப்பளு மிக்க துறைமுகமாக இருந்திருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டிருந்தால் அதன் வருமானம் சீனாவிற்கும் அதற்கான அந்நியச் செலாவணி இலங்கைகக்கும் கிடைத்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்திற்காக 26,500 மில்லியன் செலவழித்துள்ளதாகவும் விமான நிலையத்தை அமைத்த போதே சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றையும் அமைத்திருந்தால் விமானங்கள் அங்கு தரையிறக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.