கறுப்பு யூலை இனப்படுகொலையின் குறியீடுட்டுச் சின்னமாய் இக்கறுப்பு வெள்ளை நிழற்படம் அமைகிறது. கொழும்பு மாநகரில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்ட வேளை ஒரு சிங்கள அன்பரினால் எடுக்கப்பட்ட நிழற்படம் இது. கீர்த்தி பாலசூரிய என்ற எனது சிங்கள நண்பர் 12 நிழற்படங்கள் அடங்கிய கறுப்பு-வெள்ளை நிழற்பட சுருளை என்னிடம் சேர்ப்பித்தார். அந்த படங்களில் ஒன்றுதான் மேற்படி நிகழ்படமாகும்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் செயலாளாராக இருந்த நண்பர் கீர்த்தி பாலசூரியாவும் அவரது அமைப்பும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையும், விடுதலைக்கான போராட்டத்தையும் வெளிப்படையாக ஆதரித்து செயற்பட்டனர். அத்தகைய கொள்கைவயப்பட்ட சிங்கள நபரினாற்தான் இப்படத்தினை எடுக்க முடிந்தது. அந்த இனப்படுகொலை தீ எரியும் சூழலில் ஒரு தமிழனால் இத்தகைய படத்தை எடுத்திருக்க முடியாது. இவ்வகையில் பாலசூர்யாவின் பணி ஒரு முக்கிய வரலாற்று ஆவணம் ஒன்றை தமிழருக்கு வழங்கியது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் அடையாளச் சின்னமாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட இந்த நிழற்படம் அமைகிறது.
கறுப்பு யூலையும், முள்ளிவாய்க்காலும் ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரித்துப் பார்க்கப்பட முடியாதவை. இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலில் இவை இரண்டும் முன்பின்னான அத்தியாயங்கள். சிங்கள அரசியலில் தமிழினப்படுகொலை என்பது ஓர் அரசியற் கலாச்சாரம். அது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தருமம். அதாவது இனப்படுகொலை என்பது அவர்களது அரசியலில் ஒரு தர்மமாக உள்ளது.
1983 யூலை 11ஆம் தேதி லண்டன் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தன அளித்த நேர்காணலில் தமிழர்கள் பற்றிய கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்தார்.
“யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்களைப் பற்றி இப்போது நாம் சிந்திக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ, அவர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியோ சிந்திக்க முடியாது” என அந்த பதில் அமைந்தது. இங்கு அவர் “யாழ்ப்பாண மக்கள்” என்று குறிப்பிடுவது தமிழர்களை யாகும்.
இது கறுப்பு யுலை இனப்படுகொலை நிகழ்வதற்கு 12 நாட்களுக்கு முன் ஜனாதிபதி ஜெயவர்த்தன வெளியிட்ட ஓர் இனப்படுகொலைக்கான பிரகடனமாகும்.
இப்படி இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்த தூண்டிய ஓர் இனப்படுகொலை குற்றவாளிதான் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இது இவருக்குமட்டும் பொருந்தும் ஒரு விடயமல்ல. இது சிங்கள அரசின் தெளிவான தீர்மானத்தின் கீழ் ஓர் இனஅழிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட ஓர் அங்கமாகும்.
1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் இனப்படுகொலை கலகம் வெடித்த போது 17ஆம் தேதி மாலை இலங்கை வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு அப்போது பிரதமர் பதவியில் இருந்தவாறு ஜெயவர்த்தன ஆற்றிய உரையின் போது “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற போர்ப்பிரகடனத்தை நிராயுதபாணியான தமிழ் மக்கள் மீது விடுத்தார். இதன்பின்பு அப்படுகொலை கலவரம் நாடுதழுவிய வகையில் மேலும் தீயென பரவியது.
டச்சு கடற்படை தளபதிக்கு எதிராக கண்டி மன்னன் விமலதர்ம சூரியன் அனுப்பிய “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற போர் அறைகூவலை வரலாற்றில் இருந்து தேர்ந்தெடுத்து தமிழ் மக்களை ஓர் அந்நிய படைபோல் கருதி தமிழ் மக்களுக்கு எதிரான இந்த போர் அறிவித்தலை அப்போது ஜெயவர்த்தன விடுத்தார். எனவே இனப்படுகொலை செய்வது என்பது அவர்களது ஓர் அரசியல் கொள்கையாக வடிவம் பெற்றிருக்கிறது.
1995ஆம் ஆண்டு யூலை மாதம் நாவாலி தேவாலயத்தில் தங்கியிருந்த அகதிகள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன. குறைந்த 125 சடலங்கள் அடையாளங்காணப்பட்டன. இதைவிட அடையாளங் காணப்படாத கொல்லப்பட்டோரினதும், காயப்பட்டோரினதும் தொகை வேறு. இச்சம்பவம் நிகழ்ந்த அரை மணிநேரத்திற்குள் அவ்விடத்திற்கு என்னால் செல்ல முடிந்தது. இரத்த சகதியும், அழுகுரலும், துயரமும் அச்சூலை நிரப்பியிருந்தன. புறவைகள் மற்றும் பிராணிகள் எதனையும் அந்தச் சூழலில் காணமுடியவில்லை. குண்டுவீச்சு கந்தக மணமும், இரத்த வாடையும் காற்றோடு கலந்திருந்தன. கூடவே அழுகுரல்களும் அதனோடு இணைந்திருந்தன.
இந்த குண்டுவீச்சு சம்பவத்தை நான் அறிந்ததும் அதற்காக தான் துயரப்பட்டதாகவும், கோபப்பட்டு இராணுவத்தினர் மீது கடும் வார்த்தைகளை பிரயோகித்ததாகும் அன்றைய ஜனாதிபதி சந்திரக பண்டாரநாயக்க பின்னாட்களில் தெரிவித்திருந்தார். அப்படியாயின் அந்த படுகொலைக்கு பொறுப்பான எந்தொரு அதிகாரிமீதும் அவர் பதவியில் இருந்த அந்த வேளையில் அதுவும் முப்படைகளின் தளபதி என்ற அதிகாரத்துடன் இருந்த அந்த வேளையில் ஏன் அவ்வாறு செய்யவில்லை.
பின்னாட்களில் அரசியல் நோக்கிற்காக தமிழ் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்கு இப்படித்தான் வேதனைப்பட்டதாகவும், படையினர் மீது கோபப்பட்டதாகவும் கயிறுவிடும் செய்தியை அறிவித்தார். இங்கு இதன் பின்புங்கூட அதாவது 1995இன் பிற்பகுதியில் செம்மணி படுகொலையின் கதாநாயகியாக அவர் காட்சியளித்ததையும் மறைக்க முடியாது. 600க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் வீடுவீடாக இராணுவத்தால் பிடிக்கப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதான குற்றச்சாட்டு அவர் மீது இன்னும் நிலுவையில் உள்ளது.
இங்கு இனப்படுகொலை என்பது சிங்கள அரசினதும், சிங்கள ஆட்சியாளர்களினதும் கொள்கை என்பதை இவை மேலும் நிருபிக்கின்றன. இந்த படுகொலை பட்டியலின் இறுதி வடிவமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அமைந்தது. இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஆளும் கட்சி மட்டுமன்றி எதிர்க்கட்சியும் ஆதரவாகவே இருந்தது. அத்துடன் இப்படுகொலைக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதிக்கு சிறிசேன- ரணில் – சந்திரிகாவின் நல்லாட்சி அரசாங்கம் பீல்டு மார்ஷல் பட்டம் கொடுத்து மேலும் அவரை கௌரவித்திருக்கிறது.
மேலும் ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் இந்து ஆலங்கள் மீது குண்டுவீச்சுகள் பரவலாக நிகழ்ந்துள்ளன.
பாடசாலைகள் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுவீச்சுக்கள் நிகழ்ந்தன. குழந்தைகள் பரவலாக படுகொலைக்குள்ளானார்கள்.
பாலச்சந்திரன்
பேபி சுப்பிரமணியத்தின் ஒரே மகள் சிறுமி அறிவுமதி.
ஆயிரக்கணக்கில் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெயர் தெரியாத அளவிற்கு அவர்களின் பட்டியல் உண்டு. இராணுவத்திடம் சரணடைந்த சிறுவன் பாலச்சந்திரன் அவர்களின் கையில் உணவு உட்கொள்ளும் ஓரு படமும் பின்பு 3 மீட்டர் இடைவெளியில் வைத்து அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட படமும் கிடைத்துள்ளன.
பேபி சுப்பிரமணியமும், அவரது துணைவியார் ரத்தினாவும் அவர்களது 8 வயது புதல்வி அறிவுமதியும் இராணுவத்திடம் ஒன்றாக சரணடைந்தனர். இதில் மூவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் என்பது அநேகமாக கொல்லப்பட்டோரே ஆவர். உயிருடன் சரணடைந்த ஒரு சிறுமியை படுகொலை செய்யப்பட்டிருப்பது என்பது ஒருபோது வரலாற்றில் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும்.
20ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஹிட்லர் உருவாக்கிய இனப்படுகொலை தேசியவாதத்தை “இராட்சத தேசியவாதம் – Monster Nationalism” ” என்று வரலாற்றில் அழைப்பர். அவ்வாறே 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் செர்பிய தலைவன் மிலோசவிக்கின் இனப்படுகொலை தேசியவாத்தையும் இந்த வரிசையில் அழைப்பர். சிங்கள பௌத்த தேசியவாதமும் இந்த வரிசையில் ஒன்றாக வரலாற்றில் இணைந்து கொள்கிறது எனத் தெரிகிறது.
1983 கறுப்பு யூலையின் போது நிர்வாணமாக்கப்பட்டு சிங்கள காடையர்களினால் படுகொலை தாக்குதலுக்கு உள்ளாகும் பெயர் தெரியாத அந்த தமிழ் மகன் தொடக்கம் இராணுவத்தின் கையில் நிர்வாணமாக கைதியாக இருக்கும் இசைப்பிரியா பாலியல் வல்லுறவுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட காட்சிவரை அனைத்தும் ஓர் இனப்படுகொலையின் தொடர்ச்சிகளே.
அதாவது பல்வேறு இனப்படுகொலை கலவரங்களும் இந்த வகையைச் சார்ந்த தொடர் வரலாற்றுப் பக்கங்களாயினும் கறுப்பு யூலை இதில் ஒரு தலையாய அத்தியாயமாகும்.
அமைதியாக தெற்கில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களை பெட்ரோல் குண்டுகள் கொண்டும், மற்றும் கூரிய ஆயுதங்கள் கொண்டும், தீ வைப்புக்களை மேற்கொண்டும் இனப்படுகொலையை சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள காடையர்கள் வாயிலாக அரங்கேற்றினர். இதன் மூலம் தெற்கில் தமிழர்கள் உயிர், உடமைகள், வாழ்விடங்கள் அழிக்கப்பட்ட நிலையில் இன அழிப்பிற்கு உள்ளாகி அங்கு தமது இருப்பை முற்றிலும் இழந்தனர்.
இதுவரை அதற்கான குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ, அதற்கான நட்டஈடுகளை வழங்கோ, வருத்தம் தெரிவிக்கவோ எந்தொரு ஆட்சியாளரும் நடைமுறையில் முன்வரவில்லை. இந்த இனப்படுகொலை அரசியல் தலைவர்களால் காடையர்கள் பரிமாணத்தில் நிகழ்த்தப்பட்ட ஒன்றாக அமையும் அதேவேளை தமிழ் வாழும் அவர்களது தாயகமான வடக்கு-கிழக்குப் பகுதியில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட இராணுவத்தின் வாயிலாக அடுத்தகட்ட இனஅழிப்பின் உச்சமாக முள்ளிவாய்க்கால் அமைந்தது.
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு என்பது Hot War வடிவத்தைச் சார்ந்தது. நல்லிணக்கம் என்பதும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இன்னொரு நீட்ச்சியாகும். அதாவதுHot War பெற்ற வெற்றியை “நல்லிணக்கம்” என்ற இன்னொரு யுத்தத்ததால் நிலைநிறுத்தி ஸ்தாபிதம் செய்கிறார்கள். முள்ளிவாய்;க்கால் யுத்தத்தின் முடிவென்பது ஆயுத ரீதியான இடையூறோ தடைகளோயின்றி தமிழ் மக்களை அழிப்பதற்கான ஓர் அனுமதி பத்திரமாகும்.
இரண்டாம் உலக மகாயுத்தத்தை “ Hot War” என்றும் அந்த யுத்தத்தின் நீட்சியான அடுத்த கட்டத்தை “பனிப்போர் – ” Cold War”என்றும் வரலாற்றில் அழைக்கின்றனர். இத்தகைய யுத்த பரிமாணங்களில் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான நல்லிணக்க யுத்தமாகும்.
இனப்படுகொலையில் வெற்றி பெற்றவர் தோற்கடிக்கப்பட்ட மக்கள் மீது தமது வெற்றியை நிலைநிறுத்துவதற்கான ஒரு வடிவமாக நல்லிணக்க யுத்தத்தை தேர்ந்தெடுத்தார்கள். அதில் தமிழ்த் தலைவர்களையும் தம்முடன் கூட்டுச்சேர்த்து தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு யுத்தத்தை தூரநோக்குப் பார்வையுடன் சிங்கள ஆட்சியாளர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
எனவே கறுப்பு யூலை, முள்ளிவாய்க்கால், நல்லிணக்க ஆட்சியும் ஒரு முழுநீள இனப்படுகொலை போக்கின் தொடர் அத்தியாயங்களாகும். இங்கு வரலாற்றை சரிவர புரிந்து கொண்டு புதிய சிந்தனையுடன் இவற்றை எதிர்கொள்ள தயாரில்லாதுவிட்டால் தமிழினம் மீட்சிபெற வாய்ப்பிருக்காது.
இராமநாதன் முதல் சம்பந்தன் வரை வாதாட்ட அரசியல், வழக்காடு அரசியல், சத்தியாகிரக சாத்வீக அரசியல், ஆயுதப் போராட்ட அரசியல், நல்லிணக்க அரசியல் என அனைத்திலும் தமிழர்களை பெரிதும் தோற்கடித்து வெற்றிவாகை சூடுவதில் சிங்களத் தலைவர்கள் தமக்கிருக்கும் அரசியல் இராஜதந்திர ஆளுமையை இதுவரை நிரூபித்துள்ளார்கள்.
“துன்பத்தை மறந்தாலும், துன்பம் தந்த படிப்பினையை மறக்கமாட்டான் புத்திசாலி” என்ற சாணக்கியனின் வாக்கியத்தை இங்கு மீண்டும் மீண்டும் அழுத்தமாக அழுத்தமாக நினைவுகூற வேண்டியது அவசியம்.
கறுப்பு யூலையில் இருந்து நல்லிணக்கம் வரை உள்ள அனைத்து வரலாற்று படிப்பினைகளையும் கருத்தில் எடுத்து ஒரு புதிய சிந்தனையை தமிழினம் வடிவமைத்துக் கொள்ளுமாறு தமிழர்களின் மேற்படி துயர்தோய்ந்த வரலாறு தமிழ் மக்களுக்கு கட்டளையிடுகிறது. இதற்கு திறந்த மனதுடனும், விடுதலை உணர்வுடனும் மனதை முதலில் தயாராக்க வேண்டும். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். கசப்பே ஆயினும் நோயை அறிந்து அதற்குப் பொருத்தமான மருந்தை தேர்ந்தெடுத்து உட்கொண்டாக வேண்டும்.
மு.திருநாவுக்கரசு