செம்மணியில் மீண்டும் மனித புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். செம்மணி – நாயனர்மார்கட்டுப்பகுதியில் நீர்பாசன திணைக்களம் அமைத்து வரும் நிலக்கீழ் நீர் தொட்டிக்காக மண் அகழ்வினை மேற்கொண்ட போது அதில் ஒர் பகுதியில் இருந்து மனித எலும்பு எச்சங்கள் வெளிப்பட்டிருந்தன.

குறித்த மனித எச்சங்கள் தொடர்பாக யாழ். காவல் துறை அறிவிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை காவல் துறை யாழ். நீதிவான் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர். இதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். நீதிவான் சின்னத்துரை சதீஸ்கரன் அங்கு அகழப்பட்ட மண்ணினையும் முழுமையாக பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து இன்றைய தினம் காலை சம்பவ இடத்திற்கு சட்ட வைத்திய அதிகாரி மயூரதன், யாழ். காவல் துறை நிலைய குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறை ஆகியோர் முன்னிலையில் இவ் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.