பிளாஸ்டிக்கை மட்கச் செய்யும் பாக்டீரியா!

குப்பை மேடுகளிலும், நீர்நிலைகளிலும் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி சீக்கிரம் மட்கிப் போகச் செய்வது? இதுதான், 21ஆம் நுாற்றாண்டின் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சவால்.

இந்த சவாலுக்கு, பிரிட்டனைச் சேர்ந்த போர்ட்ஸ்மவுட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு விடையை கண்டு பிடித்துள்ளனர்.

கடந்த, 2016ம் ஆண்டு ஜப்பானில் உள்ள குப்பை மேடுகளில் ஒரு புதுமையான பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. அது தானாகவே பிளாஸ்டிக்கை சிதைத்து மட்கச் செய்யும் திறனை பெற்றிருந்தது.

அந்த பாக்டீரியாவை பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். ஒரு சோதனையின்போது, அந்த பாக்டீரியா சுரக்கும் என்சைம்களுக்கு அதிக திறன் உண்டானது.

அதாவது, ஏற்கனவே சாதாரண பிளாஸ்டிக்குகளை மட்கச் செய்யும் திறன் கொண்ட அந்த பாக்டீரியா, ‘பெட்’ எனப்படும் பாலிஎத்திலின் டெரப்தாலேட் வகை பிளாஸ்டிக்கையும் சிதைக்கும் அளவுக்கு அடர்த்தியான என்சைமை சுரக்க ஆரம்பித்தது.

அந்த என்சைமால் சில நாட்களிலேயே, பிளாஸ்டிக்கை மட்கச் செய்ய முடிந்தது. இந்த கண்டுபிடிப்பால் உற்சாகமடைந்துள்ள விஞ்ஞானிகள், பெரிய அளவில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கு ஏற்றபடி, பாக்டீரியாக்களை எப்படி பயன்படுத்துவது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.