ஆஸ்திரேலியாவில் கொசுவால் கொசுவை ஒழிக்கும் நுட்பம்!

ஆஸ்திரேலியாவின் வடக்கு குவீன்ஸ்லாந்து பகுதியில், கொசுக்களை ஒழிக்கும் பெரிய அளவிலான பரிசோதனைக்கு, வெற்றி கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசு ஆராய்ச்சி அமைப்பும், ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகமும், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’டின் கொசுக்கள் ஒழிப்பு ஆராய்ச்சி அமைப்பான, ‘வெரிலி’யும் இந்த வெள்ளோட்டத்தை அண்மையில் மேற்கொண்டன.

ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை. எனவே, இனப்பெருக்கத் திறன் நீக்கப்பட்ட ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் ஏராளமாக உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வெரிலி உருவாக்கியது.

தவிர, ஆய்வகத்தில் உருவாகும் பெண் கொசுக்களிலிருந்து, ஆண் கொசுக்களை மட்டும் பிரித்தெடுக்க, ரோபோக்களை வெரிலி பயன்படுத்துகிறது.

எனவே, லட்சக்கணக்கான ஆண் கொசுக்களை, குவீன்ஸ்லாந்தின் காசோவரி கடற்கரையோர குடியிருப்புப் பகுதிகளில், ஆய்வாளர்கள் பறக்கவிட்டனர்.

இவை, ‘ஏடிஸ் எகிப்தி’ என்ற நோய் பரப்பும் பெண் கொசுக்களுடன் உறவு கொள்கின்றன. ஆனால், பெண் கொசுக்கள் கருத்தரித்து, முட்டையிடாது.

இதனால், வட குவீன்ஸ்லாந்து பகுதியில் ஏடிஸ் எகிப்தி கொசுக்கள் இனம் பெருகாமல், 80 சதவீத கொசுக்கள் குறைக்கப்பட்டுவிட்டதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மலடாக்கப்பட்ட ஆண் கொசுக்கள் மூலம் கொசுக்களை ஒழிக்கும் முறை, 50 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது தான்.ஆனால், ஆண் கொசுக்களை பெருமளவில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பமும், அவற்றை அதிக அளவில் பரப்பி வெற்றி கிடைத்திருப்பதும் இதுவே முதல் முறை.