குடும்பமொன்று சமூகத்தில் பொருளாதார ரீதியிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேறிச்செல்வதற்காக தமது முழு முயற்சியையும் மேற்கொண்டு நகர்வுகளை முன்னெடுக்கும். அதில் வெற்றிபெறுகின்ற குடும்பங்களும் உள்ளன. முன்னேற்றமடையாத குடும்பங்களும் உள்ளன. எப்படியிருப்பினும் ஒரு குடும்பம் சமூகத்தில் ஒரு நல்ல வாழ்க்கைத்தரத்தை அடையவேண்டுமென்றால் கடின உழைப்புடன்கூடிய அர்ப்பணிப்பை வெளிக்காட்டவேண்டியது அவசியமாகும். ஆனால் அவ்வாறு அந்தக் குடும்பத்தினால் தனித்து அதனை செய்ய முடியாது.
அதற்கு மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற அரசாங்கமும் பக்கபலமாக இருக்கவேண்டும். அதேபோன்று பொருளாதார ரீதியிலும் சமூக பாதுகாப்பு ரீதியிலும் கடின உழைப்பின் மூலம் முன்னேற்றமடைந்து வருகின்ற குடும்பங்கள் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்டால் அரசாங்கம் உடனடியாக உதவி செய்து அவர்களை தூக்கிவிடுகின்றது. அது அவ்வாறு செய்யப்படவேண்டும். மக்களுக்கு இதுபோன்ற சவால்கள் வரும்போது அவர்களை பலப்படுத்துவதற்காகவே ஜனநாயக ரீதியில் மக்களால் அரசாங்கம் தெரிவுசெய்யப்படுகின்றது.
உதாரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யவேண்டிய உதவிகள், சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் செய்யவேண்டிய உதவிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் என்பனவற்றை இதில் குறிப்பிடலாம். எனினும் இவ்வாறானதொரு அனர்த்தத்திற்கு முகம்கொடுத்து 9 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை நிவாரணங்களைப் பெற முடியாது துன்பங்களை எதிர்கொள்கின்ற மக்கள் வடக்கு, கிழக்கில் உள்ளனர் என்பதே இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.
கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகள் பாரிய இழப்புக்களையும் பின்னடைவுகளையும் சந்தித்தன. கிட்டத்தட்ட 30 வருடங்கள் பொருளாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும் நாம் பின்னடைவுக்கு சென்றோம். எனினும் யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் எம்மால் மீண்டு வருவதற்கு கடினமாகவே உள்ளது. யுத்தத்தின் வடுக்களிலிருந்து இன்னும் மக்கள் மீளமுடியாது தவித்துக்கொண்டிருக்கின்றனர். யுத்தத்தின் கோர வடுக்கள் பாதிக்கப்பட்ட மக்களை வாட்டிவதைப்பதுடன் அவர்களை மீள் எழவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றது.
இந்த சூழலில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் யுத்தத்தின் வடுக்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அந்த வடுக்களிலிருந்து மீளக்கட்டியெழுப்பவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். குறிப்பாக அவர்களது சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைந்து தீர்வை வழங்கியிருக்கவேண்டும். ஆனால் இதுவரை அதற்கான முயற்சி ஒரு பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ள இந்த சூழலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண இழப்பீட்டை வழங்குவதற்கான இழப்பீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த இழப்பீட்டு அலுவலக சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விவாதம் நடத்தப்பட்டு அது சட்டமாகியபின்னர் இழப்பீடு வழங்கும் அலுவலகம் அமைக்கப்படும். தொடர்ந்து காணாமல்போனோர் குறித்து ஆராயும் அலுவலகம் உள்ளிட்ட அமைப்புக்கள் முன்வைக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும். இது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்பட்டது.
யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான நிவாரணங்கள் வழங்கப்படவேண்டியுள்ளன. அவர்கள் யாரென அடையாளம் காண முயற்சித்தல் அவசியமாகும். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் மற்றும் அதன் பின்னரும் காணாமல்போனவர்களின் உறவுகள் இன்று நிவாரண இழப்பீட்டை பெறவேண்டிய சூழலில் பாரிய துன்ப துயரங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோன்று யுத்தத்தின்போது கணவனை இழந்த பெண்கள், குடும்பத்தலைவிகளாக இன்று தமது குடும்பத்தை கொண்டுநடத்துவதில் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அத்துடன் தமது உறவுகளை இழந்த குடும்பங்கள் வாழ்க்கையை கொண்டுசெல்வதிலும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் ஏன் யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்தபோதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம் அமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு நாம் இதன் பின்னணியை ஆராயவேண்டியிருக்கின்றது.
யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவும் இதன்பின்னர் இதுபோன்ற ஒருமோதல் நிலைமை இந்தநாட்டில் உருவாகாமல் இருப்பதற்காக பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கிலும் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நிறுவப்பட்டது. சுமார் 6 மாதங்கள் நாடுமுழுவதும் அமர்வுகளை நடத்தி மக்களிடமிருந்தும் சாட்சியங்களை பெற்றுக்கொண்ட இந்த ஆணைக்குழு 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் தனது பரந்துபட்ட அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் காணப்பட்டன. எனினும் இதுவரை காலமும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை. இது தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்துப்பக்கங்களிலும் இருக்கின்றன.
எப்படியிருப்பினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விடயத்தில் மிகவும் அக்கறையாக செயற்பட்டு வந்தது. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு முதலாவது பிரேரணையை ஐ.நா. மனித உரிமைப்பேரவை இலங்கை தொடர்பாக நிறைவேற்றியது. அதில்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண இழப்பீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2013, 2014 ஆம் ஆண்டுகளிலும் ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. அவற்றிலும் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. எனினும் அதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதில் இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென்று ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணாமல்போனோர் குறித்து ஆராயும் அலுவலகம் ஒன்றும் அமைக்கப்படவேண்டுமென்றும் அந்த அலுவலகத்தின் பரிந்துரைகளின் பிரகாரம் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்றும் அதற்காக இழப்பீடு வழங்கும் அலுவலகம் அமைக்கப்படவேண்டுமென்றும் சர்வதேச சமூகத்தினாலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது இழப்பீட்டு அலுவலகம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாக 2019ஆம் ஆண்டுவரை மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலஅவகாசம் முடிவதற்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையிலேயே தற்போது இழப்பீட்டு அலுவலகம் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை விரைவாக விவாதத்திற்குட்படுத்தி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஆவனசெய்யவேண்டும். ஏற்கனவே 9 வருடகாலமாக இந்த பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கு போராடி வருகின்றனர். அவர்களை மேலும் வாட்டிவதைக்காமல் விரைவாக இழப்பீட்டு அலுவலகத்தை நிறுவி அந்த மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்.
இழப்பீட்டு அலுவலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பதில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகத்தின் பரிந்துரைகள் மிக முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றன. இந்த பரிந்துரைகளுக்கு அமைவாகவே காணாமல்போனோரின் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு இழப்பீடு வழங்கப்படவேண்டியுள்ளது.
ஒருமுறை இந்த இழப்பீட்டு விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த முன்னைய அரசாங்கத்தின் காணாமல்போனோர் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாவரையில் நிவாரணம் வழங்கப்படவேண்டுமென கருத்து வெளியிட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யுத்தத்தின் வடுக்களில் சிக்கி பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தனர். உறவுகள் மற்றும் உடமைகளை இழந்த இந்த மக்கள் யுத்தம் முடிந்ததன் பின்னர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டிருந்தனர். எனவே அவர்களுக்கு ஒருகுறிப்பிடத்தக்க அளவு நிவாரண நிதியை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக அவர்களின் இழப்புகளை ஈடுசெய்ய முடியாது. ஆனால் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை கொண்டுநடத்துவதற்கு நிவாரண இழப்பீடு என்பது மிகவும் முக்கியமானதாகும். அது தொடர்பில் சரியான முறையில் அவதானம் செலுத்தப்படவேண்டும்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்கொண்டுவரும் சிரமங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். யுத்தம் முடிந்தவுடனேயே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய இந்த நிவாரண இழப்பீட்டு விடயம் இதுவரைகாலம் தாமதமடைந்துள்ளமை தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்துவது அவசியம். எனவே தாமதமின்றி இழப்பீட்டு அலுவலகத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பது கட்டாயமாகும்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் எந்தவொரு விடயமும் இதுவரை முழுமையாக செய்யப்படவில்லை. விசேடமாக காணாமல்போனோர் விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. பொறுப்புக்கூறல் பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை. உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்படவில்லை. இவ்வாறு யுத்தத்தின் பின்னர் கடந்த 9 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் சாதகமான விடயங்கள் எதுவும் முழுமையாக இடம்பெற்றதாக கூற முடியாது. நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் இந்த விடயங்கள் விரைவாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் காணி விடுவிப்பில் மாத்திரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதே தவிர ஏனைய விடயங்கள் தாமதமாகிக்கொண்டே செல்கின்றன. தமக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் தென்னிலங்கையில் ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப காய்நகர்த்தலில் ஆர்வம் காட்டும் நல்லாட்சி அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விடயங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஆர்வம்காட்டுவதில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்த இழப்பீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் பாரிய எதிர்ப்புகள் இன்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கையை அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு இழப்பீட்டு அலுவலகம் உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டியது அவசியம் என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுறுத்த வேண்டும். அரசாங்கம் காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தையும் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நிறுவியது.
எனவே இழப்பீட்டு அலுவலக விடயத்தில் அரசாங்கம் அதன் தேவை குறித்து தெளிவுறுத்த வேண்டியது அவசியமாகும். சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த இழப்பீட்டு அலுவலகம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. எனவே தாமதப்படுத்தாமல் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். மக்கள் 9 வருடங்களாக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் இந்த அவலநிலைக்கு விடிவு காணவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இன்னும் காலத்தை கடத்தாமல் விரைந்து பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டி எதிர்காலம் தொடர்பில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இந்த இழப்பீடு வழங்கும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகமே இந்த இழப்பீட்டு அலுவலக விடயதானத்துக்கு பொறுப்பாக இருப்பதாக தெரிகிறது. எனவே அந்த அலுவலகம் இழப்பீடு வழங்கும் விடயத்தில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரொபட் அன்டனி