65 ஆண்டு கால கொரிய போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – தென்கொரியாவை வலியுறுத்தும் வடகொரியா!

கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான உடன்படிக்கையை தீவிரமாக செயல்படுத்தும்படி தென்கொரியாவை வடகொரியா அரசு வலியுறுத்தி உள்ளது.

எலியும் பூனையுமாக இருந்த வடகொரியா, தென் கொரியா நாடுகளிடையே இருந்த போர்ப்பதற்றம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தணியத் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வந்து, இணக்கமாக செல்வற்கு வடகொரிய அதிபர் முன்வந்ததையடுத்து, ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இரு நாட்டு தலைவர்களிடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் முன் ஜே இன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது, 65 ஆண்டுகளாக நீடித்து வந்த கொரிய போரை முடிவுக்கு கொண்டு வரவும், கொரிய தீபகற்பத்தினை அணு ஆயுதமற்ற பிரதேசம் ஆக்கவும் உறுதி பூண்டனர்.

இந்நிலையில், கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஏப்ரல் மாதம் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என தென் கொரியா அரசாங்கத்தை வடகொரியா வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வடகொரிய இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடிய கடமை தென் கொரியாவுக்கு உள்ளதாகவும், இனியும் தாமதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.