திட்டமிடப்படாத கிரவல் அகழ்வும் திட்டமிட்டே அழிக்கப்படும் வன்னிக் காடுகளும்!

எவனொருவன் திட்டமிடாமல் செயற்படுகின்றானோ அவன் திட்டமிட்டே தோல்வியை தழுவிக்கொள்கிறான் என்பது ஒரு பழமொழி. இது அனைத்து வகையான செயற்பாடுகளுக்கும் பொருந்தும். மிக முக்கியமாக அபிவிருத்தி பணிகளின் போது சிறந்த திட்டமிடல் அவசியம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் இது கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் வன்னியின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் போது இந்த திட்டமிடலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும்பும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அபிவிருத்திக்கான கிரவல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றபோது பல ஆயிரக்கணக்கான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இச் செயற்பாடுகள் இன்று மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சூழலின் முக்கியத்துவம் உணராமல் ஒரு சிலரின் சுயநலன்களுக்காக நாட்டின் பொதுநலன் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மனிதனை சுற்றியுள்ள அனைத்து அம்சங்களும் சூழல் எனக்கொள்ள முடியும். எனவே அந்த அனைத்து அம்சங்களும் மனித வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதனை முதலில் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். பௌதீக சூழல் அல்லது இயற்கை சூழல் மற்றும் பண்பாட்டுச் சூழல் என இரண்டு வகையாக சூழலை பிரித்து பார்க்கின்றனர்.

இதில் பண்பாட்டுச் சூழல் மனிதனால் உருவாக்கப்படுவது. இயற்கை சூழல் மனிதனுக்கு கிடைத்தது. இந்த இயற்கை சூழலை மனித இனத்தின் வாழ்வுக்கு பயன்படுத்தும் போது அதன் முக்கியத்துவம் கருதி சிறந்த திட்டமிடல்களை மேற்கொண்டு பயன்படுத்த வேண்டும் என்பதே இன்றைய சூழலியலாளர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. இயற்கை சூழலிலிருந்து வளங்களை பெறுகின்ற போது மீள உருவாகும் வளம், மீள உருவாக்க முடியாத வளம் என்ற வகையிலும் வளங்கள் காணப்படுகின்றன. மீள உருவாகும் வளங்களில் சில நீண்ட காலத்தின் பின் மீள உருவாகும் வளங்களாகவும் சில குறுகிய காலங்களில் மீள உருவாகும் வளங்களாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக கடலில் இருந்து மீன்வளத்தை பெறுகின்ற போது அந்த மீன் வளம் குறுகிய காலத்தில் மீளவும் உருவாகும் வளமாக காணப்படுகிறது. ஆனால் காடுகளில் இருந்து மரங்களையும், கிரவல் போன்ற கனிய வளங்களையும் பெறுகின்ற போது அவை மிக மிக நீண்ட காலத்தின் பின்பே மீள உருவாகும் வளங்களாக காணப்படுகின்றன.

எனவே இந்த நிலையில் உள்ள வளங்களை மனித இனத்தின் பயன்பாட்டிற்கு பெறுகின்ற போது மிக மிக நேர்த்தியான சிறந்த திட்டமிடல் மூலம் பெறுவது கட்டாயமாகும் இல்லையெனில் அதன் பாதிப்புகள் மீண்டும் மனித குலத்தை திருப்பி தாக்கும். இந்த தாக்கம் மனிதன் இயற்கை சூழலில் இருந்து தான் பெற்ற வளத்தை கொண்டு பெற்ற பயனை விட இந்த பாதிப்பு பல மடங்காக காணப்படும். இதனை நாம் இன்று எம் கண் முன்னே கண்டும் வருகின்றோம்.

இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் வன்னியில் நிலவிய காலநிலைக்கும் தற்போது நிலவுகின்ற காலநிலைக்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் சீராக கிடைக்கப்பெறுகின்ற மாரி மழை இல்லை, அதிக வெப்பம் நிலவுகிறது. 15 தொடக்கம் 20 அடி வரைக்குள் காணப்பட்ட நிலத்தடி நீர் தற்போது முப்பது நாற்பது அடிக்கு மேல் காணப்படுகிறது. பயிர்செய்கைகளில் போதுமான விளைச்சல் இல்லை, சூழலில் காணப்பட்ட பல்லிண உயிரினங்களை காணமுடியவில்லை. மனிதனுக்கு ஏற்பட்டுள்ள நோய்த்தாக்கம் என சூழலை மனிதன் திட்டமிடால் பயன்படுத்தியதன் விளைவால் ஏற்பட்ட பாதிப்புக்களை கூறிக்கொண்டே போகலாம். மனிதனால் இயற்கையின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய குழப்பமே இந்த நிலைமைக்கு காரணம்.

இதன் காரணமாக தற்போது அபிவிருத்தி பற்றிப் பேசப்படுகின்ற போது அதில் சுற்றுச் சூழல் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அபிவிருத்திக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான சிக்கலான தன்மை பற்றி அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. இருப்பினும் அரசியல் பொருளாதார சமூக காரணிகளால் அதன் அழுத்தங்களால் அபிவிருத்தி மேலோங்கி நிற்க சுற்றுச் சூழல் காரணிகள் பின்தள்ளப்படுகிறது. இந்த சந்தர்ப்பங்களில் மனிதனால் மனிதனுக்கு குழி தோண்டப்படுகிறது. இதுவே தற்போது வன்னியெங்கும் இடம்பெற்று வருகிறது.

யுத்தத்தின் பாதிப்புக்களை அதிகம் சுமந்த வடக்கில் அதிலும் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா வடக்கு போன்ற பிரதேசங்களில் அதிகளவில் உட்கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்கின்ற போது அதிகளவு இயற்கை வளங்களை பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் இங்கேதான் பிரச்சினையே ஏற்படுகிறது.

அபிவிருத்திக்காக இயற்கை வளங்களை பெறுகின்ற போது அங்கே முறையான திட்டமிடல் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. சூழலியலாளர்கள் தொடர்ந்தும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றார்கள் ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், திணைக்களங்களும் அதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை. குறிப்பாக வீதி மற்றும் ஏனைய அபிவிருத்தி பணிகளுக்காக கிரவல் அகழப்படுகின்ற போது ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்படுகின்றன. ஒன்றை பெறுகின்ற போது இன்னொன்றை இழப்பது தவிர்க்க முடியாது என்றாலும் திட்டமிடலும் மாற்று திட்டங்களும் அவசியமானதாக வலுயுறுத்தப்படுவது இங்கே கவனத்தில் எடுக்கப்படுவில்லை.

பல ஓப்பந்தகாரர்கள் கிரவல் அகழ்வின் போது இயற்கை பற்றி சிறிதளவும் சிந்திப்பதாக தெரியவில்லை, அவர்களின் முழு நோக்கமும் கிரவல் அகழ்வு மாத்திரமே இதுவே இன்று பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கொக்காவில், புத்துவெட்டுவான், இராமநாதபுரம் கல்மடு அக்கராயன், கல்லியங்காடு, கனகராயன்குளம், போன்ற இடங்களில் பாரியளவில் கிரவல் அகழப்பட்டு வருகிறது. இதில் கொக்காவில் மற்றும் கல்மடு போன்ற பிரதேசங்களில் பாரியளவில் கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிரவல் அகழ்வு ஓப்பந்தங்களை பெற்றிருப்பவர்கள் வடக்கிற்கு வெளியே உள்ளவர்கள். அத்தோடு இந்த ஒப்பந்தங்களை பெற்றிருப்பவர்கள் இதனோடு சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பெருமளவு நிதியை இலஞ்சமாக வழங்கியே வழங்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாக கிரவலை அகழ்ந்து வருகின்றார்கள் எனவும் பொது மக்கள் தரப்பால் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றன. இதனாலும் காடுகளின் நிலைமை கவலைக்கிடமாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இலங்கை பொறுத்தவரை வன்னிக்காடுகள் இலங்கையின் வனவளத்தில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. இந்தக் காடுகளில் பல வருடங்கள் பழமைவாய்ந்த பெறுமதியான மரங்கள் காணப்படுகின்றன. முதிரை,பாலை, கருங்காலி, போன்ற பெறுமதிமிக்க மரங்கள் வன்னிக் காடுகளின் சிறப்பம்சம். ஆனால் தற்போது இந்த மரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டு வருகிறது. கிரவல் அகழ்வு மேற்கொள்பவர்களால் ஒரு புறமும், திட்டமிட்டு சட்டவிரோத மரங்கள் கடத்துபவர்களின் மறுபுறமும் என மரங்கள் வெட்டப்படுகின்றன.

ஏற்கனவே யுத்தப் பாதிப்புக்களால் அழிக்கப்பட்ட வன்னியின் காடுகள் தற்போது அபிவிருத்தியின் பெயராலும் சட்டவிரோத செயற்பாடுகளாலும் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமை சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் கவலையினையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக கிரவல் அகழப்படுகின்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற காட்டு மரங்களை சுற்றி கிரவலை அகழந்த பின் அந்த மரங்கள் இன்றோ நாளையோ விழுந்துவிடும் அபாய நிலையில் காணப்படுகிறது. இவ்வாறு ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில்; கிரவல் அகழப்படுகின்ற போது அந்த பிரதேசத்தில் உள்ள அனைத்து பெறுமதிவாய்ந்த மரங்களும் அழிக்கப்படுகிறது. சொல்லப் போனால் அந்தப் பிரதேசம் பாலைவனம் போன்று மாறிவருகிறது. இங்கே படங்களில் காட்டப்பட்டுள்ளது போன்று பல ஆயிரக்கணக்கான மரங்கள் தொங்கிகொண்டிருக்கின்றன.

எனவேதான் இதற்கான மாற்று திட்டங்களை சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.முக்கியமாக முறுகண்டி தொடக்கம் கொக்காவில் வரை ஏ9 வீதியின் மேற்கு பக்கம் வீதியில் இருந்து நோக்கினால் அடர்ந்த காடுகள் இருப்பது போலவே காணப்படும் ஆனால் சற்று சில மீற்றர்கள் இறங்கிச் சென்றால் உள்ளே பாரியளவில் கிடங்குகளும் அந்தரத்தில் தொங்கிகொண்டிருக்கும் மரங்களையும் காணமுடியும். இந்த நிலைமையினை பார்க்கின்ற சூழல் மீது அக்கறை கொண்டவர்கள் அழுவார்கள்.

அபிவிருத்திக்காக கிரவல் அகழப்படுவதனை தவிர்க்க முடியாது ஆனால் அந்த கிரவலை கொண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியால் கிடைக்கும் நன்மையை விட கிரவல் அகழ்வினால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்றால் இந்த இடத்தில் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். ஜந்தாறு வருடங்களுக்கு முன் கிரவல் அகழப்பட்ட இடங்களும் இப்போதும் வெட்டவெளியாக இருக்கிறது. இங்கே அடர்த்தியான காடுகள் இருந்த இடம். ஆனால் அந்த சுவடே இல்லாமல் இருக்கிறது. இந்த இடங்களில் மீள வனமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் கிளிநொச்சி அக்கராயனில் ஒரு பகுதியில் 2009 க்கு முன்னரும் மீள்குடியேற்றத்தின் ஆரம்பத்திலும் கிரவல் அகழப்பட்ட பிரதேசங்களில் மீள் வனமாக்கல் திட்டத்தின் மூலம் மரங்கள் நாட்டப்பட்டது போன்று தற்போது கிரவல் அகழப்படுகின்ற அகழப்பட்ட பிரதேசங்களிலும் மீள் வனமாக்கல் திட்டத்தை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஒரு அபிவிருத்தி திட்டம் வரையப்படும் போதே அந்த திட்டத்தில் மீள வனமாக்கல் செயற்றிட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளும் வகையில் அபிவிருத்தியின் திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் அதனை அரசு சட்டமூலம் உறுதிப்படுத்தவேண்டும். அத்தோடு சட்டவிரோத மரம் கடத்தல்காரர்களுக்கு கடுமையான தண்டனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லை எனில் இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு வன்னிக்காடுகளும் காணாமல் போய்விடும்.

ஒவ்வாரு மனிதனும் இயற்கையை நேசிக்கின்ற மனிதனாக மாறவேண்டும், சூழல் பற்றிய கல்வியும், விழிப்புணரவும் ஏற்படுத்த வேண்டும், இது காலத்தின் கட்டாயம்.

மு.தமிழ்ச்செல்வன்