தமிழ் மக்களையும் உலகத்தையும் ஏமாற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை எதிர்த்தும் அமர்வைப் புறக்கணித்தும் கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலர் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் மாவட்டம் தோறும் காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்து உரையாடிவரும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஏற்ப யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலை உறவினர்கள் முற்றாக புறக்கணித்தது மாத்திரமன்றி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.
காணாமல் போன தமது உறவுகளைத்தேடி மாதக்கணக்காக, வருடக்கணக்காக போராட்டங்களை நடத்திவரும் உறவுகள் தற்போது காணாமல் போனோர் அலுவலகத்துக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இறுதி யுத்தத்தின்போதும் அதன்பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை மீட்டுத்தருமாறு அல்லது கண்டுபிடித்து தருமாறு கடந்த பலவருடங்களாக குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின் உறவுகள் மாவட்டங்கள்தோறும், நகரங் கள் தோறும் பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த உறவுகள் கடந்த பல மாதங்களாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக போராட்டங்களை தொடர்ச்சி யாக நடத்தி வருவதைக் காணலாம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான காரியாலயத்தை பிராந்திய ரீதியாக அல்லது மாவட்டம்தோறும் நிறுவி உண்மையான தகவல்களை சரியான நபர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்குரிய செயற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலைப்பட்டியலைத் தயாரித்து இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற உண்மைத்தன்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். அவ்வாறு பகிரங்கப்படுத்துவதன் மூலமே உறவினர்களுடைய ரணத்தை ஆற வைக்க முடியும். நடந்து போன விடயங்களுக்காக பகிரங்க மன்னிப்பையோ உண்மை நிலையை ெவளிப்படுத்துவதன் மூலமே காணாமல் ஆக்கப்பட்டவாகளின் உற வுகளை சாந்தியடைய வைக்க முடியுமென்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாகும்.
யுத்தம் நடைபெற்ற வேளையிலும் அது முடிவுக்கு கொண்டுவந்தபின்னும் பெரும்பாலான இளைஞர்கள், யுவதிகள் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு ெவளியேயும் கைது செய்யப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். வழிமறிப்புக்கடத்தல், வெள்ளை வேன் கடத்தல், பயணம் செல்லும் வேளை கடத்தல், வீடு புகுந்து கடத்தல், சோதனை சாவடியில்வைத்து கடத்தல், சோதிப்புக்கு அழைத்து கடத்தல், இராணுவ முகாமுக்கு அழைத்து காணாமல் போனவர்கள் என கடத்தப்பட்ட வகைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்களென தகவல்கள் தெரிவிக்கின்றன. உறவினர்களின் வாக்குமூலங்கள் மூலமும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
இறுதி யுத்தத்தின்போது வெள்ளைக்கொடியேந்தி சரணடைந்தவர்கள் தவிர சாதாரணமாக சரணடைந்தவர்கள் உறவினர்களால் நேரடியாகவே இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களாவர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதிலும் இதுவரை ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு குறிப்பாக இந்திய இராணுவம் வடகிழக்கில் நிலைதரித்த காலத்திலும் அதுவெளியேறியதன் பின்னும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மாவட்டங்கள் தோறும் இயக்கப் பட்ட பிரஜைகள் குழுக்கள் மற்றும் மனிதவுரிமை ஆணைக்குழு, செஞ்சிலுவைச்சங்கம், பொலிஸ் நிலையங்கள், மத ஸ்தாபனங்கள் தோறும் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்க மைய கடந்த 30 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக வும் எழுத்து மூல வாய்மூல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது பற்றியும் பிரஸ்தாபிக்கப்படுகிறது.
2009ஆம் ஆண்டு யுத்தத்துக்குப்பின்னரான காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அதிகம் சுட்டிக்காட்டப்பட்டபோதிலும் அதற்கு முந்திய கால நிைலமைகளிலும் பெருந் தொகையான இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்களென்ற தகவல்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் நடத்தப்படுகிற போராட்ட கால குறிப்புக்களிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
இதில் கவலைதருகின்ற விடயம் யாதெனில் ஒரு குடும்பத்தில் மூன்றுக்கு மேற்பட்ட சகோதரர்கள், சகோதரிகள், தந்தை, மகன், மகள் என்ற குடும்ப கிளைகளே காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் பரிதாப சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சில தாய்மார் தமது 3 ஆண்பிள்ளைகளையும் தங்கள் கணவன் மாரையும் பதைக்கப்பதைக்க பறிகொடுத்துவிட்டு அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்களா இல்லையா என்பதை அறிய முடியாமல் கண்ணீர்மல்க காத்திருப்பதும் சில மனைவியர் தமது கணவன் உயிருடன் இருக்கிறார் என்ற அபரிமிதமான நம்பிக்கையுடன் கழுத்தில் தொங்கும் தாலியை இன்னும் பூஜித்து வருவதாகவும் தொடர்கதைகள் நீண்டுகொண்டே போகின்றன.
மட்டக்களப்பில் கடந்த இரு வருடங்களுக்கு முன் நடந்த காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆணைக்குழு விசாரணையின்போது மகன் ஒருவன் அம்மா, அப்பா உட்பட குடும்பத்தில் 10 பேர் காணாமல் போயுள்ள னர் என சாட்சியம் அளித்திருந்ததும் எனது மகன் உட்பட 5 மாணவர்களை மட்டு.நகர் பொலிஸாரே அழைத்து சென்றனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட கொழும்பிலுள்ள 4ஆவது மாடிக்கும் எனது பிள்ளைகளைத்தேடி சென்று வந்துள்ளேன். இதுவரை எனது பிள்ளைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையென ஒரு தாயும் கூறியிருப்பதுபோல் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கூறும் சோகக் கதைகள் அதிகம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக வடகிழக்கில் பல போராட்டங்கள் முன்னெடுக் கப்பட்டு வருவதற்கப்பால் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஸ்தாபனத்தின் கவனத்துக்கும் இந்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும் நிலையான நீதியை அல்லது உண்மையை உறவினர்களால் அறிய முடியாமலேயே உள்ளது.
கடந்த வருடம் ஐ.பி.சி. தமிழ் செய்திச் சேவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் நடத்திய விசேட நேர்காணலின்போது அதிர்ச்சியான தகவலொன்றை அவர் தெரிவித்திருந்தார். 04.06. 2017 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையில் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றி அரசாங்கமே கண்டறிய வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில் அப்படி எவரையும் முகாம்களில் மறைத்து வைத்திருப்பதாகத் தெரியவில்லை. முன்னைய கால ஆட்சியின்போது கடமையாற்றிய இராணுவத்தினரின் கொடுந்தன்மைக்கேற்ப அவர்கள் கூட்டிச்செல்லப்பட்டோ கடத்திச்செல்லப்பட்டோ கொலை செய்யப்பட்டிருக்கலாம். இவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்ற சந்தேகத்தை சந்திரிகா தனது நேர்காணலில் தெரிவித்திருந்தார். இக் கருத்தானது பல விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டபோதிலும் அவரின் பகிரங்கமான கருத்தில் உண்மையிருப்பதாகவே நம்பப்படுகிறது. இதற்கு காரணம் கடந்த வருடம் சம்பூருக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஒரு கருத்தைத்தெரிவித்திருந்தார்.
“காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்துத் தரவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை ஜனாதிபதி வெளிப்படுத்துகின்றார் இல்லை என என் மீதும் எனது அரசாங்கத்தின் மீதும் குறை கூறுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கிருக்கிறார்கள் என எனக்கும் தெரிவியுங்கள். நானும் உங்களோடு வந்து தேடுகிறேன். அவர்கள் இருக்கும் இடங்களைக் காட்டுங்கள் நான் வந்து விடுவிக்கிறேன்” என ஜனாதிபதி கூறியிருந்தார். ஜனாதிபதி பதவியேற்று இரண்டுவருடங்கள் பூர்த்தியாகிய நிலையில் அவர் இக்கரு த்தை பட்டவர்த்தனமாக தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால பதவியேற்ற காலத்திலிருந்து கூறிவருகிற ஒரு விடயம், தனது நாட்டு இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கவோ சர்வதேச விசாரணைக்கோ சர்வதேச நீதிபதிகளின் வருகைக்கோ இடமளிக்கப்போவதில்லை. அத்துடன் இந்நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லையென அவர் அடித்து கூறிவருவது நாடறிந்த விடயம். இவ்வாறு இருக்கும்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவர் எவ்வகைத் தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமென்பது தெளிவாக்கப்பட்ட விடயமாகும். இதுமட்டுமன்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் விளங்கும் ஒருவருக்கு சகல தகவல்களும் தெரிவிக்கப்படாமலிருக்க முடியாது என்பதும் சாதாரண பாமரனாலும் விளங்கிக்கொள்ளக்கூடிய விடயமாகும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும் அவர்தம் உறவினர்களால் தொடர்ந் தேர்ச்சியாகவும் காலம் தவறாமலும் மாவட்டங்கள்தோறும் நடத்தப்பட்டு வருகிற நிலையில் இவ்விவகாரம் ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்ச்சிநிரலாக கொண்டுவரப்பட்டதற்கு அமையவே முன்னாள் ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வந்திருந்தார். அவர் பிரதேசம் – பிரதேசமாக சென்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் மனித உரிமை ஆர்வலர்களையும் சந்தித்து உரையாடியது மாத்திரமன்றி தனது காரசாரமான அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்.அவரின் விஜயத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தலைநகரில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தபோதிலும் முன்னைய அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் தடைவிதிக்கப்பட்டது. அத் தடைகளையெல்லாம் மீறி உறவினர் நவநீதம்பிள்ளையை சந்தித்து தமது உறவுகளை மீட்டுத்தருமாறு அழுது புலம்பி கோரிக்கைகளை விடுத்திருந்தனர். துரதிர்ஷ்டவசமாக அவரது இளைப்பாறுகை மற்றும் புதிய அரசாங்கத்தின் வருகை என்பன அவர்களது கோரிக்கைகளுக்கு பலம் ேசர்க்க முடியாத சூழ்நிலையையே உருவாக்கித் தந்தது.
அன்றைய ஆட்சிக்காலமானது எல்லாவற்றையுமே மூடிமறைக்கும் பல்வேறு தந்திரோபாயங்களை செய்தது என்பதற்கான ஆதாரமே அந்த அரசாங்க காலத்தில் உண்டாக்கப்பட்ட ஆணைக்குழுக்களாகும்.அவை பரணகம ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழுவென நியமிக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டும் அதற்கு பிற்பட்ட கால த்திலும் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்களை விசாரணை செய்து அறி க்கை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவே உடலாகம ஆணைக்குழு. இவ் ஆணைக்குழு வடகிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசாரணை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது
1990ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம்வரை இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்களான காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவேண்டுமென்ற நியதிக்கு அமைய உரு வாக்கப்பட்ட ஆணைக்குழுவே பரணகம ஆணைக் குழுவாகும்.இந்த ஆணைக்குழுக்கள் அரசு க்கு விசுவாசமாகவே விசாரணைகளை நடத்தி அந்த அறிக்கைகள் முன்னைய அரசாங்கத்தினால் கிடப்பில் போடப்பட்டிருந்தன. ஆனால் இந்த அறிக்கைகளை இன்றைய அரசாங்கத் தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாராளு மன்றில் சமாப்பித்து அறிக்கையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். அறிக்கைகள் காரசாரம் கொண்டதாக இல்லாவிட்டாலும் அந்த அறிக்கையில் விதந்துரைக்கப்பட்ட விடயங்களுக்கு என்ன நடந்தது? பழையபடி “வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை”போல எல்லாமே மீண்டும் முடக்கிவைக்கப்பட்டன.
பரணகம அறிக்கை காணாமல் போனோர் தொடர்பாக ஒருசில உண்மைகளை ெவளிச்சத்துக்கு கொண்டுவந்தபோதிலும் நல்லாட்சி அரசாங்கம் அந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களுக்கு நடவடிக்கை எடுக்கத் துணியவில்லை. நல்லாட்சி அரசாங்கமென்றும் தேசிய அரசாங்கமென்றும் கூறிக்கொள்ளும் இன்றைய அரசாங்கத்தின் தலைமைப்பதவியை வகிப்போர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசத்தையும் உறவுகளையும் ஏமாற்றும் வகையிலேயே மேற்படி காணாமல் ஆக்கப்பட்டோர் காரியாலயத்தை அமைத்து “கண்கட்டு வித்தை” காட்டப்பார்க்கிறது என் பது உறவுகளின் குற்றச்சாட்டாக காணப்படுகிறது.
அரசால் அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் அதிகாரிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் கலந்துரையாடுவதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறபோதிலும் அக் காரியாலயம் தொடர்பில் அவநம்பிக்கை கொண்ட நிலையில் அதிகாரிகள் காணாமல் போனோர் அலுவலகத்தின் வருங்கால செயற்பாடுகள் தொடர்பிலும் உண்மைத்தன்மை தொடர்பிலும் விளக்கம் அளித்தபோதிலும் அதை ஏற்றுக்கொள்ளாத உறவுகள் தங்கள் உறவுகளை மீட்டுத்தருமாறு தமது எதிர்ப்பை சாத்வீகமான முறையிலும் ஜனநாயக பண்புகளுக்கு அமைய தெரிவித்திருந்தனர்.
அரசினால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அலுவலகத்தினால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இது ஒரு ஏமாற்று வித்தையென்றும் வெளிப்படையாகவே தெரிவித்தனர். எமது உறவுகளை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி காலத்துக்கு காலம் ஆணைக்குழுக்களை அமைத்து எம்மை தொடர்ந்து ஏமாற்றாதீர்கள். இந்த ஆணைக்குழுவே இறுதி ஆணைக்குழுவாக இருக்கவேண்டும். எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்தவேண்டும்.எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என எச்சரித்த நிலையிலேயே அவர்கள் மேற்படி அதிகாரிகள் முன் அழுது புலம்பிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் காலம் தொடக்கம் அரசாங்கம் முறையான விசாரணையை நடத்தவோ அல்லது உண்மை நிலைகளை தெரிவிக்கவோ முயற்சிகளை மேற்கொள்ளவில்லையென்பதே உறவினரின் குற்றச்சாட்டாக இருந்து வந்துள்ளது. கடந்த வருடம் ஆனி மாதமளவில் வடகிழக்கில் பரவலாக, குறிப்பாக கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டபோது இப்பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக இருவார கால அவகாசம் கோரப்பட்டபோதிலும் வெறும் சந்திப்புக்களும் பேச்சுவார்த்தைகளும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டனவே தவிர ஆரோக்கியமன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டுக்களையும் உறவுகள் முன்கொண்டுவந்திருந்த னர். நாட்களும் மாதங்களும் வருடங்களை கடக்கின்றனவே தவிர காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு காணப்படவில்லையென்பது பொதுவாகவே பேசப்படுகிற உண்மை.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற வகையில் இறுதியுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிறைந்த காலத்தில் சரணடைந்தவர்கள், உறவினர்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்துக்கு முன்னைய காலப் பகுதியிலும் – பின்னைய காலப்பகுதியிலும் கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என ஏராளமான இளைஞர்கள், யுவதிகள் தொடர்பாக அரசாங்கம் உண்மைத்தன் மையை வெளிக்கொண்டுவருவதன் மூலமே இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக்கொண்டுவரமுடியும். இதற்கு முடிவுகாணப்படவேண்டுமாயின் உண்மைத்தன்மை சொல்லப்படவேண்டும். ஆனால் இதனால் ஏற்படவுள்ள எதிர்விளைவுகள் பற்றி அரசாங்கம் அதிக அக்கறை கொண்டிருப்பதனாலேயே உண் மையை சொல்வதில் மூடிமறைப்புக்களும் தயக்கமும் காட்டப்படுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் நிறுவப்பட்ட ஆணைக்குழுக்கள், அதன் அறிக்கைகள் அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழு ஆகி யவற்றுக்கு உண்மை நிலை தெரி யாமலில்ைல. இன்னும் கூறப்போனால் உறவினர்களால் மனித உரிமை அமைப்புக்களுக்கு ஒப்படைக் கப்பட்ட தகவல்கள்மூலம் பெருமளவில் உண்மை நிலையை அறியக்கூடியதாக இருக்கின்ற போதிலும் ஏன் இந்த தகவல் களை தெரியப்படுத்த அரசாங்கம் தயக்கம் காட்டிவருகிறதென்பது அறியப்படாத புதி ராகவேயுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை யும் தலைவர்களையும் முன்னாள் ஆட்சியா ளர்களையும் பாதுகாக்கும் நோக்கில் இன் றைய ஆட்சியாளர்கள் மூடிமறைக்கப் பார்க் கிறார்களே தவிர வெளிச்சத்துக்குக் கொண்டு வர தயக்கம் காட்டுவதற்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது என்பது உறவினரின் கருத் தாகும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் பிரச்சினைகளும் இவ்வாறு இருக்கிறபோது இதற்கு சமாந்திரமாக எடுக்கப்படவேண்டிய பல்வேறு முயற்சிகள் தொடர்பில் அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லையென்பது தமிழ்மக்கள் மற்றும் தலைமைகளின் குற்றச்சாட்டுக்களாகும். உதாரணமாக 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நிரந்தர அரசியல் தீர்வை கொண்டுவருவதற்கு முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்வோமென கூறியிருந்த போதிலும் அவ்விவகாரம் தொடர்பில் இழுத்தடிப் புக்களையே மேற்கொண்டு வருகிறது. அதே போலவே அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வருவதற்கு தயக்கம் காட்டிவருகிறது. இதேபோலவே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் காலத்தைக்கடத்திவிட்டு ேதர்தலுக்கான தீவிர வேட்டையில் இந்த அரசாங்கம் இறங்கியுள்ளது என்ற அதிருப்தியான கருத்துக்களே தமிழ் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறதென்பதை யாரும் மறுத லிக்க முடியாது. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்படவேண்டுமாயின் அரசாங்கம் இதயசுத்தியுடன் நடந்துகொள்ளவேண்டும். காணாமல் போனோர் விவகாரத்துக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும்.உறவுகளின் அவலங்கள், அதிருப்திகள் தொடர்பில் உண்மைத்தன்மையுடன் நடந்து கொள்வதுடன் திறந்த பகிரங்கமான விசாரணைமுறை கொண்டுவரப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுவது மாத்திரமன்றி உறவுகளுக்கு உரிய பரிகாரமும் காணப்பட வேண்டுமென்பதே யதார்த்த போக்காக இருக்கமுடியும்.
திருமலை நவம்