வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.
வட மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் இன்று முடங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையிலேயே வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறாக அதன் செயற்பாடுகளை முடங்கவிடாது வட மாகாண சபையின் அமைச்சர் சபை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை என்ற விடயப் பரப்பில் விவாதித்து தீர்வொன்றைக் காண்பதற்காக மாகாண சபையின் விஷேட அமர்வு ஒன்று கடந்த 16.07.2018 அன்று கூட்டப்பட்டது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த அக் கூட்டத்தில் பங்குபற்றி அங்கு விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட விடயங்களிற்குத் தகுந்த பதிலளிக்காமல், கூட்டத்தையே புறக்கணிப்பு செய்துவிட்டு ஊடகங்களிற்கான பதிலென்று முதலமைச்சர் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றார்.
மாகாணத்தின் ஏறத்தாழ 12 இலட்சம் மக்களிற்கான மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ள இன்றைய நிலையில், அம் மக்களிற்கு நேர்மையுடனும் உண்மைத் தன்மையுடனும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு முதலமைச்சரிற்கு உண்டு.
ஊடகங்களின் கேள்விக்குப் பதில், வாரத்துக்கொரு கேள்வி என்று தானே கேள்வியைக் கேட்டு தானே பதிலிறுக்கிக் கொண்டிருக்காமல், எம்மால் எழுப்பப்படும் கேள்விகளிற்கு அவரினால் மக்களிற்கு நேர்மையானதும் உண்மைத்துவமானதுமான பதில் அளிக்க முடியுமாயின், அவரைப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றேன்.
தற்போது மாகாண சபையில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக மட்டுமல்ல, கடந்த நான்கு வருடம் ஒன்பது மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாட்டின் வினைத்திறனின்மை தொடர்பாகவும் மக்களிற்குப் பதிலளிக்கும் முகமாகவும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.