பா. அகிலனின் அரசியல் மொழி!- சேரன்

பா. அகிலன் கவிதைகள் கீதா சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘Then There Were No Witnesses’ எனும் தலைப்பில் இருமொழிப் பதிப்பாகவும் கூடவே அகிலனின் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும் ஜுன்17 அன்று கனடாவில் வெளியிடப்பட்டது. நிகழ்வில் Then There Were No Witnesses பற்றி நாவலாசிரியர் ஷியாம் செல்வதுரை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளில் எழுதும் கவிஞர் இந்திரன் அமிர்தநாயகம், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான நீத்ரா ரொட்ரிகோ, நூலை வெளியிட்ட மவ்ந்ன்ஸி பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் நூர்ஜஹான் அஸீஸ் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாற்றினர்.

‘அம்மை’ தொகுப்பைப் பற்றியும் அகிலனின் இதர கவிதைகள் பற்றியும் எஸ்.கே. விக்கினேஸ்வரன் தமிழில் உரையாற்றினார்.

இந்திரன் அமிர்தநாயகம், நீரஜா ரமணி, தர்ஷினி வரப்பிரகாசம், தர்சன் சிவகுருநாதன், அபிஷேக் சுகுமாரன் ஆகியோர் கவிதைகளை வாசித்தார்கள். பாடகரும் இசையமைப்பாளருமான வர்ண ராமேஸ்வரன் அகிலனின் கவிதைகளை இசைத்தார்.

நிகழ்வில் எஸ்.கே.விக்கினேஸ்வரன்அகிலன் கவிதைகளைப் பற்றி ஆற்றிய உரையின் சுருக்கம் கீழே உள்ளது.

 

அகிலனுடைய அரசியல், அவரது மொழி, மொழியை அவர் பயன்படுத்துகிற பாங்கு என்பவற்றால் எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர்.

1990ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், சரிநிகர் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு அதன் நான்காவது இதழைக் கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்த நேரம். அந்த இதழில் பிரசுரிக்கவென இரண்டு கவிதைகளை நண்பர் போல் கொண்டுவந்து தந்தார். குறிப்பிட்ட சம்பவத்தின் காரணமாகத் தம்முள் எழுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இரண்டு இளைஞர்கள் எழுதிய கவிதைகள் அவை என்று அவற்றைக் கொண்டுவந்து தரும்போது சொல்லியிருந்தார். கவிதைகள் இரண்டும் அந்த சரிநிகர் இதழில், ’வாழ்வு எழுதல்’ என்ற தலைப்பில் வெளியாகின. இந்தத் தலைப்பைக் கவிஞர் சேரன் இட்டிருந்தார். அந்த இரண்டு இளைஞர்களும் இன்று ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில், குறிப்பாக கவிதை தொடர்பாகப் பேசப்படும்போது, புறமொதுக்கிவிட முடியாதவர்களாக தமது அரசியல், தமது மொழி, தமது சொல்லும் முறை என்பவற்றால் தனித்துவம் கொண்ட கவிஞர்களாக அறியப்படுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் பா.அகிலன். மற்றவர் தேவ அபிரா என அறியப்படும் புவனேந்திரன் (இந்திரன்). இந்திரனை எனக்கு முன்பே தெரிந்திருந்தபோதும், பா.அகிலன் என்ற பெயர் அந்தக் கவிதையுடன் சேர்ந்துதான் எனக்கு அறிமுகமாகிறது. இந்த இரண்டு கவிஞர்களும் தமது கவிதைத் தொகுப்புக்காகக் கனடா இலக்கியத் தோட்டத்தின் பரிசிலைப் பெற்றவர்கள் என்பது ஒரு மேலதிகத் தகவல்.

அவரது முதலாவது தொகுப்பான ‘பதுங்குகுழி நாட்கள்’ (2000) வெளிவந்தபோது, “அகிலனது கவிதைகளில், அனுபவங்களின் கொடூரம் புதிய பாஷையை, புதிய சொல்முறையைச் சிருஷ்டித்துள்ளதைக் காணலாம்,” என வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். ஆனால் ஒரு கவிஞர் மற்றவரிடத்திருந்து தனித்துவமாகத் தெரிவதற்கு அவரது மொழி, அவர் அதைச் சொல்லும் முறை மட்டும் காரணமாக இருந்தால் போதாது. அவரது அரசியல், அதில் அவரது கவனம் குவியும் இடம் என்பவையும் கூட முக்கியமானவை; அவை துல்லியமாக ஒருவரின் தனித்துவத்தை அடையாளம்காண உதவுகின்றன.

அந்த வகையில்அகிலனின் முதலாவது தொகுப்பான ‘பதுங்கு குழி நாட்கள்’ ஈழத்தமிழ் கவியுலகில் அகிலனையும் அவரது தனித்துவத்தையும் வெளிப்படையாகப் பதிவு செய்தது என்று சொல்லலாம். 90களின் ஈழத்தமிழர் வாழ்வின் துயரங்களையும் வாழ்வதற்காக அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பதிவு செய்த இந்தத் தொகுப்பினூடாக அவர் தான் நிற்கும் தளத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.

‘உணர்ச்சிகளின் கொதிநிலையில் சொற்கள் சினைப்படுகையில் கவிதைகள் உருவாகின்றன.

அதர்க்கங்களின் தர்க்கமே அவற்றின் இருப்பின் அடிப்படை. சொற்களின் உள்ளோடும் மௌனத்தில்தான் கவிதையின் அனுபவமும் அர்த்தமும் உள்ளன. படைப்பென்பது முதலிலும் முடிவிலும் அனுபவங்களின் எல்லையற்ற சாத்தியம்தான்’ என்று அந்த நூலில் அறிவிக்கும்போதே அவர் தனது சொல்லும் முறை, தான் பயன்படுத்தும் மொழி என்பவை பற்றிய தனது தற்றெளிவையும் அரசியலையும் வெளிப்படுத்தியிருந்தார்.

அதன் பின்னர் ‘சரமகவிகள்’(2010) வெளிவந்தது. இது இன்னொரு படி மேலே சென்று யுத்தத்தின் அவலத்தை அவரது பார்வையில் வெளிப்படுத்தும் தொகுப்பாக அமைந்தது.

இப்போது வெளிவந்துள்ள ‘அம்மை’ கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்தது. ‘காணாமற் போனாள்? ‘மழை’ என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலிற்கு ‘அம்மை’ என்று, ‘காணாமற் போனாள்’ என்ற முதலாவது பகுப்பிலுள்ள ஒரு கவிதையின் தலைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நூலிலுள்ள ஒரு கவிதையின் தலைப்பே நூலுக்கு வழங்கப்பட்டிருப்பினும் முழுத்தொகுப்புக்குமான பொருத்தமான தலைப்பாகவே அது அமைகின்றது என்பது நூலைப் படிக்கும்போது தெளிவாகிறது.

அது மட்டுமல்லாமல், அதுவே கடந்த காலத்தின், நிகழ்ந்த யுத்தத்தின் அவலங்களை அகிலன் காண்கிற குறியீட்டுச் சொல்லாகவும் இருக்கிறது. இதுதான் இந்தத் தொகுப்பின் தனித்துவத்துக்கும் முக்கியத்துவத்துக்கும் மிகவும் அடிப்படையான காரணமாகவும் அமைகிறது.

ஈழத்தில் நடந்து முடிந்த யுத்தத்தினையும் அதற்குக் காரணமான அரசியலையும் யுத்தத்தின் விளைவுகளையும் பற்றிய புனைவுகள், வரலாறுகள், அனுபவக் கட்டுரைகள்,புகைப்பட, காணொளி ஆதாரங்களைக் கொண்ட ஆவணங்கள் என்று நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் வந்துவிட்டன. இன்னமும் வந்துகொண்டிருக்கின்றன.

அவற்றிலே அரசியல் ஒடுக்குமுறை, ஜனநாயக – மனித உரிமைகளின் மறுப்பு, அவற்றுக்கெதிரான வீரம் செறிந்த போராட்டம், தியாகம், துரோகம், சகோதரப் படுகொலை, யுத்தத்தின் இழப்புகள், சர்வதேச அரசுகளின் சதிகள் என்று எல்லா விடயங்களும் பேசப்பட்டுள்ளன.

இன்னமும் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றும் தமக்குரிய அரசியலையும் அதற்கான ஆதாரங்களையும் அதைச் சொல்வதற்குரிய மொழியையும் வடிவத்தையும் கொண்டு வெளிப்பட்டு வருகின்றன; ஆயினும் பெருமளவில் இவற்றில் எவையும் எந்தவொரு குறிப்பான அம்சத்தை மட்டும் எடுத்து அதன் ஆழத்தை விளக்கும் மையமான பொருளைக் கண்டடைந்து அதை மொழிவதன் மூலமாக, சொல்ல வந்த பொருளின் தாக்கத்தையும் அதன் பிரம்மாண்டத்தையும் பற்றி உணரவும் உணர்த்தவும் முயன்றதாகச் சொல்ல முடியாது.

இதனால்தான் அகிலனது பார்வையும், யுத்தத்தையும் அதன் அவலத்தையும் பற்றிப் பேசும் அவரது மொழியும், சொல்ல எடுத்துள்ள முறையும் இவை எல்லாவற்றிலுமிருந்து அவரைத் தனித்துவமானவராக வெளிக்காட்டுகின்றன.

அகிலன் போரின் கொடுமைகளைச் சம்பவங்களாக விவரிக்கவில்லை. அது எவ்வாறு ஒரு சிறுமியை, ஒரு மனைவியை, ஒரு தாயைப் பாதிக்கிறது என்பதைக் காட்சிப் படிமங்களாகவும் உணர்வுச் சித்திரங்களாகவும் கூறுவதன் மூலமாக அந்த விளைவுகளின் உக்கிரத்தை மிகவும் ஆழமாக வாசகர் மனத்தில் பதிய வைக்கிறார்.

மனித மரணங்களும் இழப்புகளும் அவலங்களும் யுத்தகாலத்தில் வெறும் பட்டியலிடும் எண்ணிக்கை விவகாரமாக மாறிவிட்டுள்ள சூழலில் அந்த விபரங்கள் தரும் உணர்வுநிலையை விட இழப்பின் துயரை வெளிப்படுத்தும் சித்திரம் ஆழமான உணர்வுநிலையைத் தருகின்றது. அகிலன் நடந்து முடிந்த யுத்தத்தின் அவலத்தைப் பேசுவதற்கான மிகப் பொருத்தமான குறியீடாகப் பெண்ணையே கருதுகின்றார். இதுதான் அவர் சொல்லும் முறையில் மற்றெல்லாரையும் விட தனித்துவமானவர் என்று கருத வைக்கிறது. அவரது தொகுப்பிலுள்ள ஏறக்குறைய அனைத்துக் கவிதைகளும் பெண்ணின் உணர்வு, நம்பிக்கை, உறுதி, தெளிவு என்று ஏதாவதொன்றுடன் இணைந்த கவிதைகளாகவே உள்ளன.

சரிநிகரிற்கு 1990 இல் அவரால் அனுப்பப்பட்டிருந்த கவிதை ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வன்முறையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அகிலன் கவிதை எழுதத் தொடங்கிய காலத்தில் வெளிப்பட்ட அவரது பார்வையின் இன்றைய வளர்ச்சி, பெண்ணை யுத்தத்தால் பேரிழப்பை எதிர்கொண்ட ஒரு சமூகத்துக்குக் குறியீடாக வைத்திருக்கிறது. யுத்தம் எவ்வளவு மோசமானது என்பதை அறிந்தும் உணர்ந்தும் கொண்ட அவரது பார்வை அந்த அவலத்தைப் பெண்ணின் நிலையூடாக வெளிப்படுத்துகையில், அது முன்னெப்போதுமில்லாத வீச்சுடன் ஆழமான தாக்கத்தைத் தருவதுமாக அமைந்துவிடுகிறது. எல்லா வலிகளுக்குமான பொதுமைக் குறியீடாகப் பெண் மாறுகையில் அகிலனின் பார்வையில் அவள் ‘அம்மை’யாகிறாள்.

அம்மை என்ற கவிதை இப்படி வருகிறது. செய்தி என்னவோ சின்னதுதான். ஆனால் அது சொல்லும் முறையாலும் மொழியாலும், சூழலின் யதார்த்தம் பற்றிய பெரும் அதிர்வை அது வாசகர் மனத்தில் ஏற்படுத்திவிடுகிறது:

ஒரு வீடு

சிறுகக் கட்டியது

பல்லாயிரம் நூல்கள்:

வீட்டை மூடிப் பரந்தது

ஒரேயொரு புதல்வன்

பல வருடங்கள் கழித்த பின்னால் தோன்றியவன்

வெற்றிடம்

ஒரு முதிய தந்தையிடம் கடந்த காலத்தை முழுதாய் எடுத்து

நோயாளிக் குழந்தையாக்கியபோது

புதிதாய் நட்டுப் பூத்த தோட்டத்துச் செடிகளுக்குள்

அவன் புதிராய்ப் போனான்

தாதியும் தாயும் ஆனாள் மனையாள்

புன்னகைக்குள் அவள் கண்ணீர் வற்றிக் கல்லாயிற்று.

வயோதிகம் கூனிய முதுகில் நியதி சுருண்டழுத்த

செடிச் சிறு பூக்களும் காலைப் பறவைகளும்

தெம்பைத் தந்தன அவளுக்கு.

ஒருநாள் திரும்பி வர இருக்கும் புதல்வனுக்காய்

கதைகளை அடைகாத்தாள்

கனவுகள் கண்டாள்

காத்திருந்தாள்

அவன் நினைவு அவள் மூச்சாயிருந்தது

அவனிறந்து

அவனிறந்த இடத்து மண்ணிறந்து

மண்ணிறந்த செய்திகளிறந்து

வருடங்கள் பலவாயிற்று என்பதை யார் அவளுக்குச் சொல்வது

அகிலனின் இந்தப் பார்வை அவருக்கு இன்னொரு விடயத்தையும் சிந்திக்கத் தூண்டுகிறது. எல்லா யுத்தங்களின் போதிலும் பெண்ணின் நிலை இப்படித்தான் இருக்குமா என்ற தேடலில், உறவுகளின் இழப்பால் வரும் அவலத்தை அவர் உலகப்பொதுமையாக்கி அவை அனைத்தையும் பெண்ணைக் குறியீடாகக் கொண்டு நோக்கத் தொடங்குகிறார். இது அவரை, வியாகுலமாதா, அன்ரிகனி, சாவித்திரி, உத்தரை, சுபத்திரை, சுதேசனா என்று பல்வேறு இலக்கியப் பாத்திரங்களையும் மறுவாசிப்புச் செய்ய வைக்கிறது.

இது அகிலனின் ஒரு பக்கமாக இருக்கும் அதே வேளை, மழை என்ற பகுதிக்குள் வரும் கவிதைகளூடாக அவர் இன்னொரு புறம் தன்னுள்ளே தன்னைத் தேடும் சித்தர் மனநிலையில் நின்று இயங்குவதைக் காணலாம். இதிலடங்கிய கவிதைகளூடாக, தத்துவார்த்த விசாரணைகளை எழுப்பும் கவித்துவ வெளிப்பாட்டில் பெண்ணைத் தானாக, பிறனாக, எல்லாமாகக் காணும் தன்மை வெறும் அவலத்தை மட்டுமல்ல உலகத்தின் அனைத்தையுமே பெண்ணை அடிப்படையாகக் கொண்டே வெளிப்படுத்திவிட முடியும் என்றும் காட்டுகிறார். மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் என்றான் பாரதி. மந்திரம் என்றால் செட்டான சொற்களாலான ஆனால் ஆழமான பொருளும் தொனியும் கொண்ட மொழி என்று சொல்லலாம். இந்த மொழி தமிழ்மொழி மரபில் சித்தர்களிடம் இருந்தது. பாரதி கூட நானுமொரு சித்தனப்பா என்று கூறினான். சொற்களில் மட்டுமல்ல சொற்களின் இடைவெளிகள், அவை ஏற்படுத்தும் மௌனம் என்பவை எல்லாம் சேர்ந்துதான் கவிதையின் அனுபவம் என்று கூறும் அகிலனின் வரிகள் அவரைச் சித்த மனநிலையில் நிலைகொள்ளச் செய்கிறது. இது தத்துவ விசாரங்களை அவாவும் மனத்தைப் பிரபஞ்ச முழுமைக்கும் அசையவிடுகிறது. ‘நானுமில்லை நீயுமில்லை எனில் தேகக் கோதுடைத்து திரண்ட எண்ணவெளி நின்றவர் யார்?’ என்று கேள்வி எழுப்புகிறது.

எப்படி ‘பதுங்குகுழி நாட்கள்’ சரம கவிதைகளுக்கான அடிப்படைகளைக் கொண்டிருந்ததோ அல்லது சரம கவிதைகள் ‘அம்மை’க்கான அடிப்படைகளைக் கொண்டிருந்ததோ அவ்வாறே, அவரது அடுத்த பத்தாண்டுகளில் வரவிருக்கும் கவிதைகளுக்கு, இதுவே தொடக்கப்புள்ளியாக அமையும் என்று எனது வாசிப்பு உணர்த்துகிறது.

“நான் கவிதைகள் எழுதுகிறேன், ஆனால் கவிஞனல்ல” என்று இலக்கியத் தோட்ட விருது வழங்கலின் பின்னான ஏற்புரையில் குறிப்பிட்ட அகிலனின் பேச்சைக் கேட்டபோது எனக்கு எல்லோரும் நினைப்பதுபோல் அது வெறும் அவையடக்கத்துக்காக அவர் சொல்வதாக எனக்குத் தெரியவில்லை. கவிதை பற்றியும் வாழ்வு பற்றியும் தொடர்ச்சியான தேடலும் விசாரணைகளும் மேற்கொள்ளும் ஒருவருக்கு இருக்கக்கூடிய புரிந்துகொள்ளலின் அடியாக வெளிவந்த கருத்துத்தான் அதுவென நான் கருதுகிறேன்.

அகிலன் தன்னைக் கவிஞன் என்று ஒப்புக்கொள்கிற ஒரு நாளில், கவிஞர் என்றால் யார் என்று முழுமையாகப் பேசப்படும் ஒரு நாளில், எம்மத்தியில் இருக்கக் கூடிய கவிஞர்களின் எண்ணிக்கையை நாங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம் என நினைக்கிறேன்.

நன்றி-காலச்சுவடு