‘பெண் குழந்தை சாமிக்குச் சமம்’ என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. சென்னை, அயனாவரத்தில் 12 சிறுமி 22 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறையைச் சார்ந்த பலரும் இதுகுறித்து வேதனை தெரிவித்துவரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இதுபோன்ற சம்பவங்கள் பெண்ணுக்கு நடந்தாலே தாங்க முடியாது, குழந்தை அது. எவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே… கொடூரமா கொலை பண்ணாலுமே பத்தாதுனு தோணுது. தண்டனை வலுவாக இருக்க வேண்டும், பயமுறுத்த வேண்டும். உட்கார்ந்து பேசுவதற்கு நேரம் இல்லை.
நான் என் மனைவியிடம் கூடச் சொன்னேன், ‘பெண் குழந்தை பெற்ற பிறகுதான் காயப்போடுகிற துணி கூட கலர்ஃபுல்லாக இருக்கிறது’ என்று. பெண்கள்தான் இந்தப் பூமிக்குச் சொந்தமானவர்கள். அவர்களால்தான் பூமி பெரிதாகிறது; வளர்கிறது. கமிட்மென்ட்ஸ் அவர்களால் தான் நடைபெறுகிறது. வாழ்க்கையை அவர்கள்தான் பிடித்து இழுக்கிறார்கள்.
வாழ்க்கையை வாழச் சொல்லித் தருவதும், அழகாக்குவதும் பெண்கள்தான். பெண் இல்லாமல் எதுவும் இல்லை. பெண் குழந்தை சாமிக்குச் சமம். பெண்களே சாமி தான். குற்றவாளிகளை உட்காரவைத்து ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம் எனத் தெரியவில்லை. இதை ஏன் தள்ளிப் போடுறீங்க?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஜய் சேதுபதி.