மனித இனமே கலப்பு இனம்தான்! பிறகு எப்படிப் பிரிக்கமுடியும்?

ஹொமோ இரக்டஸ் இனத்திலிருந்து மற்ற இரண்டு இனங்கள் தோன்றி 5 லட்சம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த இரண்டு இனங்களும் மனிதர்களைப் போன்றதொரு தோற்றம்.

150 ஆண்டுகளுக்குமுன் டார்வின் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” என்ற புத்தகத்தில் மனித இனத்தின் வளர்ச்சி பல்வேறு கிளைகளைக் கொண்ட ஒரு மரத்தைப் போன்றதென்று கூறியிருந்தார். அவரது கூற்றின்படி மனித இனம் பொதுவான ஓர் இனத்திலிருந்து பிரிந்த பல்வேறு கிளை உயிரினங்களாகும்.

“ஹோமோ இரக்டஸ்” (Homo erectus) என்ற பொது மூதாதையிலிருந்து நியாண்டர்தால் (Neanderthal) மற்றும் ஹோமோ சேபியன்களான (Homosapiens) தற்கால மனிதர்கள் என்று இருவேறு வகை மனித இனங்கள் தோன்றியதற்கான தொல்லெச்ச ஆதாரங்கள் கிடைத்தபின் நாம் அவரது கூற்றின் உண்மைத்தன்மையைச் சிறிது அழுத்தமாகவே ஏற்றுக்கொண்டிருப்போம்.

ஹொமோ இரக்டஸ் இனத்திலிருந்து மற்ற இரண்டு இனங்கள் தோன்றி 5 லட்சம் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த இரண்டு இனங்களும் மனிதர்களைப் போன்றதொரு தோற்றம் கொள்ளத் தொடங்கியது 3 லட்சம் வருடங்களுக்கு முன்புதான். மனிதர் (அதாவது தற்கால மனிதர்) போன்ற தோற்றத்தை அடைவதற்கே அவர்களுக்கு 2 லட்சம் வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அதிலும் தற்போதைய மனிதர்கள் ஆப்பிரிக்காவின் ஏதோவொரு பகுதியில் வாழ்ந்த மூதாதையர்களின் வழித்தோன்றல்களாகப் பார்க்கப்படுகிறார்கள். சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கிடைத்த பல்வேறு மண்டையோடுகளையும், கல் ஆயுதங்களையும் உலகின் மற்ற பகுதிகளில் கிடைத்தவற்றோடு ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தார்கள்.

தற்போதைய மனித இனத்தின் உருவ அமைப்பிலிருக்கும் மூக்கு, தாடை, சிறிய உருளையான தலை போன்ற அனைத்து அம்சங்களும் ஓர் இனத்திடமே இருக்கவில்லை. ஒரு பகுதியில் கிடைத்த மண்டையோட்டின் தலைப்பகுதி நீளமாகவும், வேறொரு பகுதியில் தலை உருளையாகவும் இருந்துள்ளது. அதேபோல் தாடை சிறியதாக ஓர் இடத்திலும் அகலமாகக் கோரப்பற்களோடு வேறோர் பகுதியிலும் வாழ்ந்துள்ளனர்.

இவர்களை ஆறுகளும், அடர்ந்த காடுகளும் பிரித்து வைத்திருந்தன. காலப்போக்கில் அந்தத் தடைகளைக் கடக்கப் பழகிய பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு கலப்பினத்தை உருவாக்கியிருக்க வேண்டும். அதுவே தற்போதைய மனித இனமாக உருவெடுத்திருக்கிறது. சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்வரையிலுமே தற்போதைய மனித இனத்தின் அனைத்து அம்சங்களும் வெவ்வேறு மனித மண்டையோடுகளின் ஒவ்வோர் அம்சமாக இருந்துள்ளது. 40,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அந்த அம்சங்கள் அனைத்தும் ஓர் உருவத்தின் மொத்த அம்சங்களாக மாற்றமடையத் தொடங்கின.

பரிணாம வளர்ச்சி ஒரேயடியாக ஒரே சமயத்தில் அனைத்து மாற்றங்களையும் நிகழ்த்தி விடுவதில்லை. அவை சிறிது சிறிதாக நடைபெறும். ஆப்பிரிக்கப் பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த மனித இனங்கள் அனைவருக்குள்ளும் ஒரே சமயத்தில் தொடர்பு ஏற்பட்டிருக்காது. ஏதோவொரு சமயத்தில் ஒவ்வொருவராக அல்லது தொடர்பு ஏற்பட்டுப் புதிதாகப் பரிணாம வளர்ச்சியடைந்த புதியதோர் இனத்தோடு பழைய இனம் என்று பல்வேறு வகைகளில் அந்த இனக் கலப்பு நடைபெற்றிருக்கும். அதுவே தற்போதைய மனிதர்களின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டது.

இதை முதலில் ஒரு கற்பனைக் கோட்பாடாகவே ஆராய்ச்சியாளர்கள் வகுத்தார்கள். காலப்போக்கில் நடைபெற்ற ஆய்வுகள் அவர்களின் கோட்பாடுகளைச் சரியென்று நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்களை அள்ளிக்கொடுக்கத் தொடங்கின. அப்படிக் கிடைத்தவைதாம்  ஆய்வுகளில் முக்கியப் பங்கு வகித்த ஆதிகால மனிதர்களின் மண்டையோட்டுப் படிமங்கள். அவற்றைப் போலவே ஆதிமனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்களும் கிடைத்துள்ளன. அதில் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரையிலுமான ஆயுதங்களை 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய ஆயுதங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். அதன்மூலம் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் பயன்படுத்திய ஆயுதங்களின் அமைப்பு மிக நேர்த்தியாகவும் சரியான பிடிப்புகளோடும் அமைக்கப்பட்டிருந்ததோடு அவற்றை வேட்டைக்குப் பயன்படுத்துவதைவிட விவசாயத்துக்குப் பயன்படுத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்தகால ஆய்வுகளின்படி அதுவே விவசாயத்தின்மீது மனித இனம் ஈடுபடத் தொடங்கிய காலகட்டமென்று தெளிவாகத் தெரிகிறது. அத்தோடு அந்த ஆயுதங்களின் அமைப்பே அதைக் கையாண்ட உடலின் தோற்றத்தைச் சிறிது புலப்படுத்தும். அதன் மூலமும், 1 லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னர் கல் ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனத்திலிருந்த பல்வேறு இனங்கள் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் கல் ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனத்தில் சில இனங்களாகக் குறைந்துவிட்டது. அதற்கு அவர்களுக்குள் நிகழ்ந்த இனக்கலப்பே காரணம். அத்தோடு அந்த இனக்கலப்பே தற்போதைய மனிதர்களைப் பல்வேறு ஆற்றல்களுடன் சிறந்த உயிரினமாகப் பரிணாம வளர்ச்சியடைய வைத்துள்ளதென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல ஆதிகால மனித இனங்களின் கலப்பினமே தற்கால மனித இனம். நமது மூக்கு ஓர் இனத்துக்குச் சொந்தமானது. நமது தாடை, பற்கள் அனைத்தும் வெவ்வேறு இனத்துக்குச் சொந்தமானது. இவ்வாறு பல்வேறு இனங்களில் கலப்பினமான மனித இனம் தற்போது பல இனக்குழுக்களாகப் பிரிந்து நின்று வன்முறைகளைக் கிளப்பிக் கொண்டிருப்பது வேதனைக்குரியது. வரலாற்றைக் காவியங்களிலும் புராணங்களிலும் தேடுவதை நிறுத்திவிட்டு, அறிவியல் பூர்வமாக நமது மூதாதையர்களைத் தேடத் தொடங்கினால் தெரிந்துவிடும் உண்மையில் நாம் யாரென்பது. அதுவே தற்போதைய உலகப் பிரிவினைகளைக் களைவதற்கும் மனித இனத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கவும் சரியான தீர்வாக அமையும். மனித இனமே கலப்பு இனம்தான். பிறகு எப்படிப் பிரிக்கமுடியும், ஓர் இனம் மற்றொன்றைவிடப் புனிதமானதென்று?