தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த 12 சிறுவர்களும் தங்கள் சந்தித்த இன்னல்களையும், முக்குளிப்பு வீரர்கள் தங்களை கண்டறிந்த ‘அற்புத தருணம்’ குறித்து முதல் முறையாகப் பேசியுள்ளனர்.
ஆங்கிலம் பேசத்தெரிந்த, அந்தக் கால்பந்து குழுவின் 14 வயதாகும் அதுல் சாம் எனும் சிறுவன், பிரிட்டன் முக்குளிப்பு நிபுணர்கள் தங்களைக் கண்டறிந்தபோது தங்களால் ‘ஹலோ’ மட்டுமே சொல்ல முடிந்தது என்று கூறியுள்ளார்.
அவர்களை மீட்ட தாய் கடற்படை குழுவினருடன் சியாங் ராயில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கால்பந்து சீருடையில் இருந்தனர்.
புதன்கிழமை அன்று மருத்துவமனையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முடிவுக்கு வந்து, அவர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
பாறைகளில் வடிந்த நீரை மட்டும் அருந்தி இரண்டு வாரங்களுக்கும் மேலாக அந்தக் குகைக்குள் தங்கியிருந்த அக்குழுவைச் சேர்ந்த ஒரு சிறுவன், “நீர் தூய்மையாக இருந்தது. உணவு எங்களிடம் இல்லை,” என்று கூறினார்.
தங்களின் இந்த இன்னல் மிக்க அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வோம் என்று அந்த சிறுவர்களில் சிலர் கூறினார்கள். இனிவரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் என்றும் எனது வாழ்வை இயன்றவரை முழுமையாக இனி வாழ்வேன் என்று ஒரு சிறுவன் கூறினார்.
அமைதியாகவும் வலிமையாகவும் இருக்க இந்த அனுபவம் கற்றுக்கொடுத்துள்ளது என்று இன்னொரு சிறுவன் தெரிவித்தார்.
இதுதான் அந்த சிறுவர்களின் ஒரே அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு என்று கூறியுள்ள சியாங் ராய் மாகாண ஆளுநர் பிரசோன் பிராஸ்துகான், இனிமேல் அவர்கள் ஊடகங்களிடம் பேச மாட்டார்கள் என்று கூறினார்.
அந்த சிறுவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் முன்கூட்டியே அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. அவற்றை ஒரு குழந்தைகளுக்கான உளவியல் நிபுணர் ஒருவர், ஆராய்ந்து தேர்வு செய்தார். அந்த சிறுவர்களுக்கு மன அழுத்தம் எதையும் உண்டாகாது என்று கருதப்பட்ட அந்த கேள்விகள் மட்டுமே அவர்களிடம் கேட்கப்பட்டன.
அந்தஸ் சிறுவர்களை சில காலம் மட்டுமே புத்த துறவிகளாக்கும் திட்டமும் உள்ளது. மோசமான அனுபவங்களுக்கு உள்ளன ஆண்களை சில காலம் துறவிகளாகும் வழக்கம் தாய்லாந்தில் உள்ளது.
அவர்கள் ஏன் அந்த குகைக்குள் சென்றார்கள்?
தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது துணை பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
அந்த சிறுவர்கள் அனைவரும் சைக்கிள் ஓட்டுவதில் அதிக விருப்பம் உள்ளவர்கள். அவர்களை சைக்கிளில் கால்பந்து மைதானம் செல்ல துணை பயிற்சியாளர் எக்கபோல் கூறியுள்ளார். அவர்கள் குகையை நோக்கி செல்வதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
அன்று சிறுவர்களில் ஒருவரான பீராபத் ‘நைட்’ சோம்பியெங்ஜாயின் பிறந்த நாள். அன்று அவர்கள் அனைவரும் ஒரு உள்ளூர் உணவு விடுதியில் 700 பாட் அளவுக்கு பணத்தை செலவிட்டுள்ளனர். அது அப்பகுதியில் ஒரு பெரிய தொகை.
எக்கபோல் மிகவும் அமைதியானவர் என்றும் அந்த குகைக்குள் செல்வது அந்த சிறுவர்களின் திட்டமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் அவர்களது பயிற்சியாளர் நொப்பரத் கந்தவோங்.
குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள், அரசை உஷார் படுத்தியதை அடுத்து அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது.