தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் (ஜூன்) 23-ம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.
9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டு கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பசி மற்றும் உடல் சோர்வினால் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவர்களின் காணொளியை தாய்லாந்து அரசு வெளியிட்டது.
சிறுவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று அனைவரும் மருத்துவமனையில் இருந்து விடுப்பு செய்யப்படுகின்றனர். விடுப்பு செய்யப்பட்ட பிறகு, கால்பந்து பயிற்சியாளர் உட்பட சிறுவர்கள் அனைவரும் ஊடகங்களை சந்திப்பார்கள் என்று தாய்லாந்து அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்புக்கு பிறகு, உடனடியாக சிறுவர்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.