`அம்மா! ஐ லவ் யூ. நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன். ப்ளீஸ் அம்மா! என்கிட்ட எப்படியாவது பேசுங்க. நீங்க நல்லா இருக்கீங்கனு நம்புறேன். அம்மா! ஞாபகம் வெச்சுக்கோங்க, என் வாழ்க்கைல எனக்குக் கிடைச்ச பெஸ்ட் நீங்கதான்.
“என் அம்மாகிட்ட கூட்டிட்டு போறாங்கன்னுதான் நெனச்சேன், ஆனா வேற ஒரு புது இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க”
“நான் பாத்ரூம் கழுவுனேன். கழிப்பறைக் குப்பைகள் நெறைஞ்ச அந்தப் பையை எடுத்துப் போடச் சொன்னாங்க. எல்லாருமே அந்த வேலைய செய்யணும்.”
“என் தம்பி அழுதுட்டு இருந்தான். அவன தூக்கி வைச்சு ஆறுதல் சொல்லணும்னு நினைச்சேன். ஆனா அவன தொடக் கூடாதுனு அங்க உள்ளவங்க என்ன கண்டிப்பா சொன்னாங்க”
“எனக்கு இன்னைக்குப் பிறந்தநாள். ஆனா, யாருமே விஷ் பண்ணல! அப்புறம் ஒருத்தர் கிட்ட எனக்கு இன்னிக்கு பிறந்தநாள்னு சொன்னேன். அவர் அமைதியா விஷ் சொல்லிட்டுப் போய்ட்டார், அவ்வளவுதான்! இங்க யாரும் யாருகிட்டயும் அன்பா பேசக்கூடாதாம்”
“எனக்கு இங்க இருக்க பிடிக்கல. ஆனா, ரெண்டு பேர் என்னைய பிடிச்சு இழுத்துட்டுப் போனாங்க. இப்பிடி பண்றதுக்கு அவங்களுக்கு எந்த உரிமையும் இல்லன்னு நான் சொன்னேன். அதுக்கு அவங்க இஷ்டப்பட்டதெல்லாம் செய்ய அவங்களுக்கு உரிமை இருக்குறதா சொன்னாங்க.”
இந்தக் குரல்கள் அமெரிக்காவை மட்டுமல்ல மொத்த உலகத்தையும் அழ வைக்கின்றன. யாரையும் தொட்டு பேசக் கூடாது. வீட்டு நினைவு வந்தால் அழக்கூடாது. மற்ற மனிதர்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது. இதுதான் அமெரிக்க எல்லையில் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகளைப் பாதுகாத்து அமெரிக்கா வைத்திருக்கும் மையத்தில் உள்ள விதிமுறைகள்.
பிறந்த நாட்டில் பல்வேறு கொடுமைகளைச் சந்தித்து, பல இன்னல்களைக் கடந்து, தாங்க முடியாத எத்தனையோ சூழல்களிலும் உயிர் பிழைத்து, புரியாத வன்முறைகளை மனங்களில் வாங்கி என அந்தக் குழந்தைகளை எத்தனையோ வலிகளைத் தாங்கிக்கொண்டு, மீண்டு வந்து, எல்லை தாண்டி நிற்க வைத்தது கூடவே பயணித்த அம்மா கொடுத்த தைரியமும், அணைப்பும்தான். ஆனால், எல்லை தாண்டியவுடன் தாயிடமிருந்து அந்தக் குழந்தைகள் பிரிக்கப்பட்டுவிட்டார்கள். வலி சுமந்த அந்தக் குழந்தைகளுக்கு அவர்களின் அம்மா வெறும் ஆறுதல் மட்டும் அல்ல, மொத்த உலகில் அவர்களை உயிராய் நேசிக்கும் ஒரே இதயம்.
எந்த இடத்தை அடைந்தால் எல்லா கஷ்டங்களும் போய் விடும் என்று அம்மா சொன்னாரோ, அந்த இடத்திலிருந்துதான் வாழ்வில் இதுவரை அனுபவிக்காத துயரத்தை அந்தக் குழந்தைகள் சுமக்கிறார்கள். அம்மாவைப் பிரிந்து அம்மாவின் பேரன்புக்காக ஏங்குகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் சாதாரணமான, அன்றாட வாழ்வில் எந்தப் பிரச்னைகளும் இல்லாத நாடுகளிலிருந்து வருவதில்லை. எத்தனையோ வன்முறைகளைச் சந்தித்து, எதுவும் புரியவில்லை ஆயினும், `நம் நாட்டில் இனிமேல் இருக்க முடியாது’ என்று மட்டும் புரிந்துகொண்டு தன் பெற்றோருடன் எல்லை தாண்டும் குழந்தைகள் அவர்கள். தன் அன்புக்குரிய எத்தனையோ விஷயங்களைத் தொலைத்து விட்டு, பிரியமானவர்களின் இழப்பைச் சகிக்கப் பழகிக்கொண்டு இருப்பவர்கள். அவர்களை மெதுமெதுவாய் அணைத்து, திரும்ப அதே சிரிப்புடன் விளையாடும் குழந்தைகளாக மாற்ற வேண்டிய நேரத்தில், இருந்த ஒரே உறவும் அவர்களிடமிருந்து பிரிக்கப்படுகிறது.
நேரம் தவறாது மணி ஒலித்ததும் காலை எழ வேண்டும், கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும், வரிசையில் நின்று உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், பாடம் கற்கச் செல்ல வேண்டும், எது வேண்டுமென்றாலும் வரிசையில் நின்று பெற வேண்டும், சொல்லப்படும் விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும், அழுவதைத் தவிர்க்க வேண்டும், சத்தம் போடக் கூடாது, கொடுக்கப்பட்ட கால அட்டவணைக்கு ஏற்ப வேலைகளை செய்து முடிக்க வேண்டும், மணி அடித்ததும் போய் உறங்கி விட வேண்டும். அமெரிக்காவில் எல்லை தாண்டும் குழந்தைகளுக்காகவே அமைக்கப்படும் இது போன்ற தடுப்புக் காவல் மையங்களில் குழந்தைகளின் வாழ்க்கை இதுதான். ஒவ்வொரு முறை, மற்ற மாகாணத்தில் உள்ள மையங்களுக்குக் குழந்தைகளை மாற்றும் போதும் தன் அம்மாவிடம்தான் தன்னை அழைத்துச் செல்கிறார்கள் என்று குழந்தைகள் நினைத்துக் கொள்கிறார்கள். பிறகுதான் `இல்லை, இந்த இடமும் முன்பு இருந்ததைப் போன்ற இடம்தான்’ என்று தெரிந்துகொள்கிறார்கள். இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் 11, 12 வயதுக் குழந்தைகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தம்பி, தங்கைகள் என 3 வயது குழந்தைகள் கூட இந்த மையங்களில் உண்டு. அதிபர் ட்ரம்ப் தன் சிறுவயதில் பல ஆண்டுகள் ராணுவப் பள்ளியில் படித்தவராம். அவருக்கு அங்குள்ள கண்டிப்பு பற்றி நன்கு தெரியும். அப்படியோர் இடம்தான் இப்போது அவரது ஆட்சியிலும் இந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
தாய் நாட்டை விட்டு எல்லை தாண்டும் குடும்பங்களை என்ன செய்வது என்ற கவலை எல்லா நாடுகளுக்குமே உண்டு. அமெரிக்க எல்லையைத் தொட்டு நிற்கும் இந்தக் குடும்பங்களை எப்படிப் பராமரிப்பது, எப்படி விதிகளை முறைப்படுத்துவது என்ற கவலை பெரும்பாலும் அமெரிக்கா அதிபர்கள் எல்லோருக்குமே உண்டு. இந்தப் பிரச்னையைச் சரி செய்வதாகக் கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற ட்ரம்ப் அறிவித்த ஜீரோ சகிப்புத்தன்மை கொள்கையானது வலுக்கட்டாயமாக குழந்தைகளை சட்ட விரோதமாக எல்லை தாண்டும் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கிறது. இடையில் நீதிமன்றம் தலையிட்டதால் தற்போது ஐந்து வயதுக்கும் குறைவான கிட்டத்தட்ட 100 குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களுடன் இணைத்திருக்கிறது அரசு. ஆனால், 2800-க்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோர்களைப் பிரிந்து வாழ்கிறார்கள். சில குழந்தைகள் `ஆதரவற்ற குழந்தைகளாக’ பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். எல்லோரும் தன் அம்மாவுக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.
சிறு குழந்தைகளின் வேதனையைத் தீர்க்க இந்த ஒரு விஷயம் மட்டும் தெரிந்தால் போதும். `எல்லைக் கோடுகள் நாடுகளுக்குத்தான், அன்புக்கு அல்ல’ அந்தக் குழந்தைகளின் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள். உங்கள் கூடாரத்துக்குள் அவர்கள் தேடுவது அன்பு இதனை எவ்வளவு டாலர் செலவழித்தாலும் உங்களால் தர இயலாது. எல்லைகள் நாடுகளைப் பிரிப்பதாய் நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், அவர்கள் எல்லைகள் நாடுகளை இணைக்கும் கோடுகள் என்கிறார்கள். அன்புக்குப் பிறகுதான் எல்லாமே. `அம்மா இங்க என்னால இருக்க முடியல’னு மனதுக்குள் ஒலிக்கும் குரல் கட்டாயம் அரசின் காதுகளை எட்டும்.