இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற தீலிபன் என்ற இலங்கை தமிழரை திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
இவ்வருட ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளிற்கான தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட இவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த நிலையில் அவர் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை தீலிபனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான புகலிட தொழில் விசாவை வழங்கிய அதிகாரிகள் பின்னர் தந்தையை நாடு கடத்தியுள்ளனர்.
தீலிபன் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதால் அவர் தனது குடும்பத்தை நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
செவ் என அழைக்கப்படும் விசாவை தாய்க்கும் குழந்தைக்கும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ள போதிலும் இந்த விசா குடும்பங்கள் மீள்இணைவதற்கு அனுமதிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீலிபனின் மனைவி தனது கணவரை அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் அழைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆதரவாளர்கள் திலீபனின் மனைவிக்கு உயிராபத்து உள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளதால் அவர் இலங்கை திரும்பிசெல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி யுத்தத்தில் தீலிபனின் அவரது தந்தையும் சகோதரரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தான் கடத்தப்பட்டு சித்திரவதை செய்ய்பபட்டதாக அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் திலீபன் தெரிவித்திருந்தார்.