ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் சிறப்பு சலுகைகளை மறுத்துள்ளார்.
லண்டனில் சட்டவிரோதமாக வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது.
லண்டனில் தங்கியிருந்த இருவரும் கடந்த 13-ம் திகதி பாகிஸ்தான் திரும்பினர். லாகூர் விமான நிலையத்தில் அவர்களை போலீஸார் கைது செய்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைத்தனர். சிறையில் சிறப்பு வசதிகளை கோரி நவாஸ் ஷெரீப் விண்ணப்பம் அளித்தார். அதன்பேரில் அவருக்கு பி வகுப்புக்கான சலுகைகள் வழங்கப்பட்டன. ஒரு தரைவிரிப்பு, டேபிள், சேர், சீலிங் பேன், 21 அங்குல டிவி, நாளிதழ் உள்ளிட்டவை அவரது சொந்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், நவாஸின் மகள் மரியம் சிறப்பு சலுகைகளை ஏற்க மறுத்துள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், “சிறையில் சிறப்பு சலுகைகளைப் பெறும் வாய்ப்பை ஏற்க மனமில்லை” என்று தெரிவித்துள்ளார்.