வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களிலும் பிழையான செய்திகள் வெளியிடப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்கள் மத்தியில், இராணுவம் தொடர்பிலான தவரான அபிப்ராயம் ஏற்படுவதாகவும் அவர் ஊடகங்ளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் இராணுவம் நிர்வாகக் கடமைகளுக்கு அப்பால் பல்வேறு அபிவிருத்தி மற்றும் சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளது. பிரதானமாக நிர்வாக கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினர்களை அகற்றி அவர்களை வேறு கடமைகளுக்காக ஈடுபடுத்தி இராணுவத்தினரது சேவைகளை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளோம்” என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இராணுவ முகாமிலிருக்கும் கூடுதலான படையினர் அவசர இயற்கை அனர்த்தங்களின்போதும், நாட்டை கட்டியெழுப்புவதற்குமான பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முகாம்கள் மூடப்படுவதாகவும், பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் வடக்கு கிழக்கில் ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன” எனவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்நிலையில், “தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படப்போவது இல்லை. இராணுவ முகாம்கள் மூடப்படமாட்டாது என்பதை வலியுறுத்துகிறோம். படையினர் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் சில அரசியல்வாதிகளாலும், ஊடகங்கள் மூலமாகவும் இராணுவத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வெளியாகும் கருத்துக்களை நம்பவேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal