மின்னஞ்சல் பயன்பாட்டுக்கெனத் தவிர்க்க முடியாத விதிகளும் எழுதப்படாத விதிகளும் நிறைய இருக்கின்றன. அதிலும் அலுவல்ரீதியான பரிவர்த்தனை எனில், மின்னஞ்சல் விதிகளைத் தவறாமல் பின்பற்றுவது நல்லது. மின்னஞ்சலில் கோபத்தை வெளிப்படுத்துவது, ஆச்சரியக்குறிகளை அதிகம் பயன்படுத்துவது, ஒற்றை வரியில் பதில் அளிப்பது, உள்ளடக்கத்துக்குப் பொருத்தமான தலைப்பிடாமல் இருப்பது, ‘ரிப்ளை ஆல்’ வசதி மூலம் எல்லோருக்கும் பதில் அளிப்பது உள்ளிட்டவை மின்னஞ்சல் பயன்பாட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்.
இதேபோல, இரண்டு இணைப்புகளுக்கு மேல் அனுப்புவது, தனியே குறிப்பு இல்லாமல் அளவில் பெரிய கோப்புகளை இணைப்பாக அனுப்புவதும் மின்னஞ்சல் தவறுகளே. இந்தப் பட்டியலில் இமோஜிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏன் தெரியுமா?
மின்னஞ்சலில் இமோஜி
அலுவல்ரீதியிலான மின்னஞ்சல் பரிவர்த்தனையில், ஸ்மைலிகள் உள்ளிட்ட இமோஜிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அவசியம். வாட்ஸ்அப்பில் பகிரும்போதும் ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல் வெளியிடும்போதும் இமோஜிகளைப் பயன்படுத்துவது இயல்பு. மின்னஞ்சலில் இமோஜிக்குத் தடைபோடுவது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், அலுவல்ரீதியிலான மின்னஞ்சல்களில் இமோஜிகளைப் பயன்படுத்தும்போது, அதை அனுப்பியவர் செயல்திறன் குறைந்தவராகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு. மின்னஞ்சலில் இமோஜி பயன்பாடு தொடர்பாக கடந்த ஆண்டு ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. பணி சார்ந்த மின்னஞ்சல்களில் ஸ்மைலி போன்றவற்றைப் பயன்படுத்துவது மோசமான விளைவையே ஏற்படுத்தும் என்று ஆய்வு முடிவில் தெரிவித்தார்கள்.
பொதுவாக, இமோஜி மொழியில் ஸ்மைலி புன்னகையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஸ்மைலியைப் பயன்படுத்துவது இதமான உணர்வைக் குறிப்பதற்குப் பதில் பணியிட மின்னஞ்சல்களில், பாதகமான எண்ணத்தையே உண்டாக்குவதாக பென் குரியான் (Ben-Gurion) பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல, இத்தகைய மின்னஞ்சல்களைப் பெறுபவர்கள் ஆழமான பதில்களை அளிப்பதில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.
சகாவுக்கு இமோஜி
எனவே, புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களும் சரி, அலுவல்ரீதியில் புதியவர்களைத் தொடர்புகொள்பவர்களும் சரி, மின்னஞ்சலில் இமோஜியைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. இமோஜி பிரியர்களுக்கு இது கசப்பான செய்திதான். அதற்காக இமோஜிக்கு முழுவதுமாகத் தடை போட வேண்டும் என்றில்லை. மின்னஞ்சலில் எப்போது இமோஜிகளைப் பயன்படுத்தலாம் என்பதை அறிந்து பயன்படுத்தலாம்.
அலுவல்ரீதியிலான மின்னஞ்சல்களில் இமோஜி கூடாது என்றாலும், ஏற்கெனவே அறிமுகமான ஊழியர் என்றால், அல்லது நட்பான சகா என்றால், மின்னஞ்சலில் ஒரு ஸ்மைலியை சேர்த்துக்கொள்ளலாம். அதேநேரம் புதியவர்கள், மேலதிகாரிகள், வெளி நிறுவன அதிகாரிகள் ஆகியோருக்கான மின்னஞ்சல்களில் இமோஜிகளுக்கு இடமில்லை.
அதேபோல, சக ஊழியர் அல்லது ஜூனியர்களுக்கு நினைவூட்டல் மின்னஞ்சல் அனுப்பும்போது, கண்டிப்பான தகவல்களைத் தொழில் முறையாகத் தெரிவித்துவிட்டு, ஒரு ஸ்மைலியைச் சேர்த்து இதமான உணர்வை வெளிப்படுத்தலாம். சக ஊழியர்கள் வழக்கமான மின்னஞ்சல்களில் இமோஜிகளைப் பயன் படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தால், நீங்களும் தயங்காமல் இமோஜிகளைப் பயன்படுத்தலாம். அதற்காக ஒவ்வொரு மின்னஞ்சலிலும் இமோஜியை நுழைக்க வேண்டாம்.
ஸ்மைலி எப்போது தேவை?
அலுவலக மின்னஞ்சல்களில் எப்போதுமே சிக்கல் இல்லாத எளிமையான இமோஜிகளையே பயன்படுத்த வேண்டும். ஸ்மைலி போன்றவை ஓகே. இதற்கு என்ன அர்த்தம் எனப் புரியாமல் குழம்ப வைக்கும் இமோஜிகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ள இமோஜிகளை அனுப்பினால், வம்பில் மாட்டிக்கொள்ளவும்கூடும். பொதுவாக மூன்று விதமான சூழல்களில் இமோஜியைப் பயன்படுத்தலாம். கெடுவை அறிவுறுத்தும் மின்னஞ்சலை அனுப்பி வைக்கும்போது அல்லது விவாதத்தைத் தொடர்ந்து அனுப்பும் மின்னஞ்சலில் ஸ்மைலியைச் சேர்ப்பதன் மூலம் இதமான தன்மையை உணர்த்தலாம்.
மதியம் வெளியே சாப்பிடச் செல்லலாமா அல்லது நாளை மறு தினம் விடுமுறையா எனக் கேட்கும் மின்னஞ்சலில் இமோஜியைச் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றைவிட முக்கியமாக, அலுவலகத்துக்குப் புதிதாகப் பணிக்குச் சேர்ந்துள்ளவரை வரவேற்று அனுப்பும் மின்னஞ்சலிலும் இமோஜியைத் தாராளமாகச் சேர்த்து அவரை மனங்குளிரச் செய்யலாம். இதன்மூலம் நீங்கள் எளிதாக அணுகக்கூடியவர் எனும் செய்தியைக் குறிப்பால் உணர்த்தலாம்.