கிளைமோர் பின்னணியிலேயே கர்ப்பிணி பெண்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கோரியது!

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூடை, புலிக்கொடி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரை கைது செய்யவே மே மாதம் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலத்தில் குழந்தை பெறும் நிலையில் இருந்த கர்ப்பவதிகளின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி தகவல்களை கோரி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினருக்கு அனுப்பிய கடித்தத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவின் ஊடாக நடைபெற்று வரும் விசாரணை சம்பந்தமாக கிளிநொச்சி சுகாதார சேவை காரியாலயத்திற்குரிய பிரதேசங்களில் இருந்த கர்ப்பிணி பெண்களில் 2018.05.25 தொடக்கம் 2018.05.30 ஆம் திகதி வரை உள்ள காலங்களில் குழந்தை பெற்றெடுப்பதாக .இருந்த பெண்களின் பெயர் முகவரி, அவரின் கணவரின் பெயர் முகவரி குழந்தை பெற்றெடுப்பதற்கு வழங்கப்பட்ட திகதி போன்ற விபரங்களை மிக விரைவாக தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஒட்டுசுட்டான் வழியாக புதுக்குடியிருப்புக்கு செல்லும் வழியில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கிளைமோர் மற்றும் புலிகளின் சீரூமை புலிக்கொடி போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். இது தொடர்பில் ஆறுபேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தோடு தொடர்புபட்டவர் என பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகப்படும் நபர் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் அவரது மனைவி மேற்படி காலப்பகுதியில் குழந்தை பிரசவிக்க இருந்தார் என்ற தகவலுக்கமையவுமே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இந்த தகவல்களை கோரியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.