”பிஞ்சுக் கால்களின் முதல் நடையை என்னால் பார்க்க முடியவில்லை”!-டென்னிஸ் தேவதை

விம்பிள்டன் இறுதிப்போட்டி மீண்டும் ஓர் எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் செரினா மீது வைத்திருக்கிறது உலகம். 36 வயதில், குழந்தை பிறந்த பத்து மாதத்தில், 24-வது கிராண்ட் ஸ்லாமை வெல்ல களமிறங்குகிறார் டென்னிஸ் தேவதை.

”பிஞ்சுக் கால்களின் முதல் நடையை என்னால் பார்க்க முடியவில்லை. மீண்டும் களத்தில் என்னை நிரூபிப்பதற்காக பயிற்சியில் இருக்கிறேன். மழலையின் நடையைக்கூட பார்க்கமுடியாத தாயாகிவிட்டேன். என்னால் அழாமல் இருக்க முடியவில்லை” – நாளை விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஏஞ்சலிக் கெர்பருடன்  விளையாட இருக்கும் செரினா வில்லியம்ஸ் பதிவிட்டிருக்கும் வார்த்தைகள்தான் இவை. எப்போதும்போல சறுக்கித்தள்ளவைக்கும் நெகட்டிவ் கமென்ட்டுகள் வந்தாலும், work – life பேலன்ஸுக்காக உழைக்கும்… உழைத்துக்கொண்டேயிருக்கும் சாம்பியன் பெண்களின் ப்ரியங்கள், செரினாவுக்கு குவிந்துகொண்டே இருக்கின்றன.

23 கிராண்ட் ஸ்லாம்கள், 4 ஒலிம்பிக் தங்கங்கள், 85 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை… என உலகமே கொண்டாடும் டென்னிஸ் உலகின் உச்ச நட்சத்திரம், செரினா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியன் ஓப்பன் சாம்பியன் பட்டத்தை வென்ற சில வாரங்களுக்குப் பிறகு, ‘ஸ்னாப்சாட்’ சமூக வலைதளத்தில் தன் வயிற்றின் படத்தைப் போட்டு, ’20 வாரங்கள்’ என எழுதியிருந்தார் செரீனா. அதன்பிறகுதான் ரெடிட் இணையதளத்தின் நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுக்கும், செரினாவுக்கும் குழந்தை பிறக்க இருக்கிறது என செய்திகள் வந்தன. கடந்த ஆண்டு செப்டம்பரில், பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் செரினா. மகளுக்கு அலெக்ஸிஸ் ஒலிம்பியா எனப் பெயரிட்டார்.

serena williamsதன்மூலம், தன்னை நம்பி ஓர் உயிர் பிறந்திருக்கும்போது, செரினா தன் அன்னைக்கு இப்படியொரு கடிதம் எழுதினார்.

நான் பார்த்த உறுதியான, நம்பிக்கையான பெண்களில் நீயும் ஒருத்தி. நான் என் குழந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஓ மை காட்… ஆமாம், இப்போது நானும் ஒரு தாய். அவள் என்னைப் போன்ற கால்களும் கைகளும் கொண்டிருக்கிறாள். நான் கொண்டிருக்கும் வலுவான, உறுதியான, சக்திவாய்ந்த கைகளும் உடலும் அவளுக்கும் இருக்கின்றன. 15 வயதிலிருந்து இன்று வரை நான் சந்தித்துக்கொண்டிருக்கும் எல்லாவற்றையும் இவளும் சந்திக்க நேரிட்டால், நான் எப்படி அதை எதிர்கொள்ளப்போகிறேன் எனத் தெரியவில்லை அம்மா.

வெளித்தோற்றம் வலுவாக இருப்பதால், நான் `ஆண்’ என அடையாளப்படுத்தப்பட்டேன். நான் வெற்றிபெறுவதற்காக ஊக்கமருந்துகள் பயன்படுத்துவதாகவும் அவதூறு பரப்பினார்கள். மேட்ச் ஃபிக்ஸிங் செய்வதாக ஊடகங்கள் யூகங்களை எழுதின. பெரும்பாலான பெண்களைவிட நான் பலமாக இருப்பதால், என்னைப் பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் சேர்க்கக் கூடாது என்றார்கள். நான் எதற்கும் பதில் சொல்லவில்லை அம்மா. நான் கடுமையாக உழைத்தேன். என் உருவத் தோற்றத்துக்காக நான் பெருமைப்படுகிறேன்.  ஆனால், கறுப்புப் பெண் ஒருத்தியின் பலத்தை உணராத இந்த ஆண்களின் உலகை நீ எப்படி கடந்து வந்தாய் அம்மா..?”

தன் குழந்தை சந்திக்கப்போகும் பிரச்னைகளை நினைத்து குழப்பம்கொள்கிறார் செரினா. ஆனால், அந்தக் குழந்தை பிறப்பதற்கு முன்பே இனவெறித் தாக்குதலின் கோரப் பசிக்கு ஆளாகிவிட்டது.

சில மாதங்களுக்கு முன்பு, ருமேனிய நாட்டின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் இலீ நாஸ்டேசிடம் செரினாவின் கர்ப்பம் பற்றிக் கேள்வி கேட்கப்பட, அதற்கு அந்த 75 வயது பிரபலம் சொன்ன பதில், `’அது என்ன நிறத்தில் பிறக்கிறது எனப் பார்ப்போம். பாலில் சாக்லேட் கலந்ததுபோல இருக்கலாம்” என்றார். தன் அன்னையின் முகத்தைக்கூட கண்டிராத ஒரு சிசுவின்மீது இந்த உலகம் நிறவெறியைக் கக்குகிறது என்றால், அது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. தன் கருத்துக்கு அந்த மனிதன் மன்னிப்புக் கேட்டார். ஆனால், அந்த வார்த்தைகள், இந்த முற்போக்குச் சமூகத்தின் பிற்போக்கு மனங்களில் பட்டுப் பிரதிபலித்துக்கொண்டுதானே இருக்கும்.

கடந்த ஆண்டு, ஊக்கமருந்துச் சோதனையில் ஷரபோவா சிக்கிய சமயத்திலும், செரினா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்குக் காரணம், அவரது ஃபிட்னெஸ். ஏன், ஒரு பெண் ஃபிட்டாக இருக்கவே கூடாதா? வெள்ளைத்தோலும், ஜீரோ சைஸ் தேகமும் உடையவர்களை மட்டுமே பெண்களாகப் பார்ப்பதற்குப் பழகிவரும் சமூகம் எவ்வளவு ஆபத்தானது! இப்படி கட்டம்கட்டி இலக்கணம் கற்பிக்கும் உலகில், மகள்களைப் பெறும் அம்மாக்களின் மனம் என்னவெல்லாம் யோசிக்கும்… எப்படியெல்லாம் குழம்பும்!

”சில பெண்கள் இப்படியும் இருப்பார்கள் என்று உலகுக்கு உணர்த்தியதற்காக நான் பெருமைப்படுகிறேன் அம்மா. நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வெள்ளையாக, கறுப்பாக, உயரமாக, குள்ளமாக எனப் பல உருவ வேற்றுமைகளுடன் பிறந்திருக்கிறோம். ஆனால், நாம் பெண்களே. அதனால் நமக்குப் பெருமையே. 

நீ கம்பீரமானவள். உன்னைப்போலவே நானும் இருக்க விரும்புகிறேன். அப்படி இருக்க முயல்கிறேன். ஆனால், கடவுள் இன்னும் சில பரீட்சைகள் வைத்திருக்கிறார்.

இன்னும் நிறைய தூரம் பயணப்பட வேண்டியிருக்கிறது அம்மா. இருந்தாலும் உனக்கு நன்றி. என் முன் இருக்கும் இந்தச் சவால்களை எதிர்கொள்ள, முன்மாதிரியாய் நிற்கும் உனக்கு நன்றி. நீ எனக்குக் கற்றுக்கொடுத்தவற்றையே நானும் என் மகள் அலெக்சிஸ் ஒலிம்பியாவுக்கும் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். நீ கொண்டிருந்த மனோபலத்தை நானும் கொண்டிருக்க வேண்டும். எனக்கு நீ தொடர்ந்து உதவுவாய் என உத்தரவாதம் கொடு. நான் உன்னைப்போல சக்தி வாய்ந்தவளாகவும், அன்பானவளாகவும்  இருக்கிறேனா எனத் தெரியவில்லை. கூடியவிரைவில் அதை அடைவேன் என நம்புகிறேன். உன்னை மிகவும் நேசிக்கிறேன்.”

நீ சுமந்த ஐவருள் இளையவள்,
– செரினா

என்று தன் தாய்க்கு எழுதிய அந்தக் கடிதத்தை முடித்திருப்பார் செரினா வில்லியம்ஸ்.

செரினா வில்லியம்ஸ்

விம்பிள்டன் இறுதிப்போட்டி மீண்டும் ஓர் எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் செரினா மீது வைத்திருக்கிறது உலகம். 36 வயதில், குழந்தை பிறந்த பத்து மாதத்தில், 24-வது கிராண்ட் ஸ்லாமை வெல்ல களமிறங்குகிறார் டென்னிஸ் தேவதை. இந்த முறை அவர் வெல்லலாம், வெல்லாமலும் போகலாம். ஆனால், இனரீதியாக, பாலினரீதியாகப் பல கொடும்நாக்குகளை, பார்வைகளை எதிர்கொண்ட செரினா, எப்போதுமே சாம்பியன்தான். சாம்பியன்கள், சில நேரங்களில் தோற்கலாம். அங்கேயே தேங்கிவிடுவதில்லை. உண்மையில், இந்த முறை அவர் வொர்க்கிங் மதர்களின் ஹீரோ. பத்துப் பொதிகளை முதுகில் சுமந்துகொண்டு, அசுர வேகத்துடன் மோதும் அழகுத்திமிர் இது.

நீங்கள் வாழ, விளையாடக் காத்திருக்கும் எல்லா களங்களிலும் வெற்றிபெற வாழ்த்துகள் செரினா. அலெக்சிஸ் ஒலிம்பியா, உங்களுக்கு அன்பெனும் மையில், தாயின் உருவில் `அன்புள்ள அம்மாவுக்கு’ என ஒரு பெரும் கடிதம் எழுதக் காத்திருக்கிறாள்.