திறமை இருந்தால் ஜெயிக்கலாம். ஆனால் திறமை மட்டுமே போதுமா என்ன? உழைப்பும் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும் வெற்றிக்கு மிக மிக அவசியம். உழைத்தால் ஜெயிக்கலாம் என்பதற்கான உதாரணங்களில் முக்கியமானவர் கவிப்பேரரசு வைரமுத்து.
உழைப்பு, ஜெயித்தல் என்றெல்லாம் ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால் வடுகப்பட்டிக்காரரின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சொல்லவேண்டும். சொல்வதைத் தெளிவாகச் சொல்லவேண்டும். அதிலும் புதுமையாகவும் நளினமாகவும் சொல்லவேண்டும். இந்தப் பாட்டரசன் வைரமுத்துவின் பேனா, நவீன மையால் நிரப்பப்பட்டு நிரப்பப்பட்டு, காலி செய்யப்பட்டு, நிரப்பிக்கொண்டே இருக்கிற உழைப்புத் தேனி அவருடையது!
கருகரு நிறம், நெடுநெடு உயரம், அடர்த்தியான மீசை, கூர்மையான பார்வை. ஆனால் சிங்கம் போலான நடை. பேச்சு முழுதும் வெல்லத்தமிழ். வெல்லும் தமிழ்.
இதுவொரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இதுவொரு பொன்மாலைப் பொழுது
என்று பொன்மாலைப் பொழுதில் வைரமுத்துவின் சினிமா விடியல் தொடங்கியது. ஆனால் என்ன… அதன் பிறகு, சினிமாவுக்கான விடியல்களில் இவரின் பங்கும் உண்டு என்பதுதான் கவிஞரின் ராஜநடை வேகம்!
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
என்று சிந்தனையில் ஜாலம் காட்டியிருப்பார். இன்றைக்கும் மனதை போதையாக்கும் பாட்டு இது.
கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் காதலிக்கிறார்களோ இல்லையோ… ஆனால் காதலிப்பவர்கள் எல்லோரும் கவிதை எழுதுகிறார்கள்… என்று ஒருமுறை சொன்னார் கவிப்பேரரசு. உண்மைதான். அதில் இன்னொரு உண்மையும் உண்டு. வைரமுத்துவின் பாடல்களைக் கேட்டாலே, காதலிக்கத் தொடங்கிவிடுவார்கள். கவிதை எழுதவும் ஆரம்பித்துவிடுவார்கள்.
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
என்று பார்வையற்ற நாயகனின் குரலாகவும் சிந்தனையாகவும் களமாடிப் பாடியிருப்பார் வைரமுத்து.
அதிகாலைப் பொழுதில் இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? பொழுது ரம்மியமாகி விடும். இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அப்போது பொழுதே விடிந்துவிடும்.
அந்தப் பாடல்…
புத்தம்புது காலை
பொன்னிற வேளை….
பாடல் வரிகளும் அதை எந்த இடத்திலும் சேதாரம் செய்யாத இசையும் நம்மை என்னவோ செய்யும். படத்தின் காட்சிகள் பார்க்கப்படாமலேயே இத்தனை ஈர்ப்பைச் சம்பாதித்திருக்கிறதென்றால், அன்றைக்கு அலைகள் ஓய்வதில்லை படத்தில் இந்தப் பாடலைப் பார்த்திருந்தால், இன்னும் ஐம்பது நூறு நாள் ஓடியிருக்கும் என் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருப்பேன்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே – இங்கு
ஆனந்தக்கும்மிகள் கொட்டுங்களேன்
இங்கு ரெண்டு ஜாதிமல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலிலும் காதல் தொழுகை
தாமரை மொட்டுகள் கும்மி கொட்டவேண்டுமாம். ஜாதிமல்லி ரெண்டு காமன் பண்டிகையைக் கொண்டாடுகிறதாம். அதற்காக தப்பாகவெல்லாம் நினைத்துவிடாதீர்கள். கிட்டத்தட்ட, அதுவொரு பிரார்த்தனை போல என்று சொன்னதால், காதல் மீதும் காதலர்கள் மீதும் வைரமுத்துவின் மீதும் மிகப்பெரிய அபிமானமும் அன்பும் வந்தது ரசிகர்களுக்கு!
மழையை சக்கரவாகப் பறவை போல் குடித்திருப்பார் கவிப்பேரரசர்.
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே என்று காதல் சொல்லியிருப்பார்.
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பான் என்றொரு வரி.
தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வியர்க்கின்றது
என்று நுரைக்கநுரைக்க, இனிக்க இனிக்க காதல் தேனைத் தோய்த்துக் கொடுத்திருப்பார் வைரமுத்து.
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே! என்று ரசித்து ரசித்து நிலாவை அழைத்திருப்பார்.
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
என்று மேகத்தையும் மழையையும் சொன்ன விதம் அபாரம்.
காதல் என்றால் என்ன தெரியுமா?
விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே என்று காதலின் அர்த்தமும் அடர்த்தியும் சொல்ல வைரமுத்துவின் பேனா இளமை சொட்டச் சொட்ட இருக்கும். அதனால்தான்
என்னவளே அடி என்னவளே
என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அதனையும் மறந்துவிட்டேன் என்றும்
என் மேல் விழுந்த பனித்துளியே
இத்தனை காலம் எங்கிருந்தாய்
என்றும் இன்றைக்கும் காதலில் கசிந்தும் வீரத்தில் நிமிர்ந்துமாக இருப்பதுதான் வைரமுத்துவின் எழுத்துகள்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று (13.7.18). மனதார வாழ்த்துவோம் கவிஞரை!