தந்தையிடமிருந்து தங்கையை காப்பாற்றுவதற்காக சகோதரன் தனது உயிரை பணயம் வைத்து இறந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் ஜோன் எட்வேட்ஸ் என்ற நபர் தனது மகனையும் மகளையும் சுட்டுக்கொன்ற சம்பவம் சிட்னியில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
15 வயது ஜக் எட்வேட்ஸ் தனது தந்தையின் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து சகோதரியை காப்பற்றுவதற்காக உயிர்விட்டமை தற்போது தெரியவந்துள்ளது. தந்தை துப்பாக்கியுடன் தாயின் வீட்டிற்கு வந்த வேளை சிறுவன் தனது சகோதரியை காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளான்.
எனினும் தங்கையும் தன்னையும் தந்தையின் துப்பாக்கி சூட்டிலிருந்து காப்பாற்ற முடியாமல் சிறுவன் பலியாகியுள்ளான். தந்தைக்கும் தாய்க்கும் இடையிலான உறவில் காணப்பட்ட விரிசல் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளது. இதேவேளை இரு பிள்ளைகளை சுட்டுகொன்ற தந்தைக்கு அந்த கொலையை செய்வதற்கான துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
ஜோன் எட்வேர்ட்ஸ் இரண்டு துப்பாக்கிகளை கொள்வனவு செய்ததும் அதில் ஒன்றை கொலைக்கு பயன்படுத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த காலத்தில் வன்முறைகளிற்காக கைதுசெய்யப்பட்ட ஒருவரிற்கு எவ்வாறு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பிட்ட நபரிற்கு துப்பாக்கிகளை விற்பனை செய்தவர்கள் அவரின் கடந்த காலத்தை அலட்சியம் செய்துள்ளமையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.