தாய்லாந்துக் குகையில் சிக்கியவர்களை மீட்ட வீரர்கள், பொதுமக்களின் பாராட்டு மழையில் நனைந்துவருகின்றனர். ஆனால், ‘குகையில் இருந்த சிறுவர்களில் ஒருவன், அனைவருக்குமே ஹீரோவாகத் திகழ்ந்துள்ளான்’ என்கின்றனர் மீட்புப்படை வீரர்கள்.
தாய்லாந்துக் குகைக்குள் சென்ற 13 சிறுவர்கள் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இந்தச் சிறுவர்களை மீட்கும் பணியில் பல்வேறு சிரமங்களைத் தாண்டி சாதித்தனர் மீட்புப்படை வீரர்கள். 18 நாள்களாக நீடித்த கடும் போராட்டத்தின் பயனாக, அனைத்து சிறுவர்களையும் வெளியில் கொண்டுவந்துவிட்டனர். இந்தப் பணியின்போது, குகைக்குள் சிக்கிய ஒரு சிறுவன் மீட்பு படையினருக்கு மிகவும் உதவியதாக, தாய்லாந்து கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுல் சாம் என்ற 14 வயது சிறுவனைப் பற்றித்தான் சமூக வலைதளங்களில் விவாதம் நடந்துவருகிறது. இந்தச் சிறுவன் ஆங்கிலம், தாய், புர்மீஸ், மாண்டரின், மற்றும் வா (மியான்மர்-சீன எல்லையில் பேசப்படும் மொழி) ஆகிய ஐந்து மொழிகளை நன்கு அறிந்துவைத்துள்ளான். நல்ல மொழி அறிவு இருந்ததால், ஆங்கிலத்திலேயே மீட்புக் குழுவினருக்குத் தங்கள் நிலையைப் பற்றி எடுத்துக்கூறியிருக்கிறான். இதன்மூலம், அனைத்துத் தகவல்களையும் மீட்புக்குழுவினர் தெரிந்துகொண்டனர். இந்தச் சிறுவன் சிரிப்பது போன்ற புகைப்படத்தை தாய்லாந்து கடற்படையினர் வெளியிட்டு, ‘ குகையினுள் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், இந்தச் சிறுவன் புன்னகையுடன் எங்களுக்கு மிகவும் உதவினான்’ எனப் பதிவிட்டுள்ளனர்.