`நான் பெற்ற அன்பு எல்லையில்லாதது!’-புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் `காதலர் தினம்` பட நாயகி சோனாலி பிந்த்ரே, தன் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில், `உங்களது ஆதரவால் நான் தனியாக இல்லை’ எனப் பதிவிட்டுள்ளார்.

புற்றுநோயின் பிடியிலிருந்து நடிகை மனீஷா கொய்ராலா மீண்டு வந்த நிலையில், சோனாலி பிந்த்ரேவும் புற்றுநோயின் பிடியில் சிக்கியிருப்பது பாலிவுட் நடிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், அமெரிக்கா, நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்று வரும் அவர், தன் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில்,`நம்முள் மறைந்திருக்கும் அந்தவலிமையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் வரை நாம் எப்படி வலுவாக இருக்கிறோம் என்று நமக்குத் தெரியாது. யுத்த நேரங்களிலும் ஆபத்தான காலகட்டத்திலும் மக்கள் உயிர்வாழ அற்புதமான விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்.

உயிர்வாழ மனித திறன் அற்புதமாக உள்ளது’ என்று தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் இசபெல் அலண்டேவின் வரிகளை மேற்கோடிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரின் பதிவில், `கடந்த சில நாள்களாக நான் பெற்ற அன்பு எல்லையில்லாதது. புற்றுநோயிலிருந்து எவ்வாறு மீள்வது, அதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளை என்ன என்பதை, என்னிடம் பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

நீங்கள் பகிர்ந்து கொண்ட கதைகள் எனக்கு அதிக வலிமை மற்றும் தைரியத்தைக் கொடுத்துள்ளது. முக்கியமாக, நான் தனியாக இல்லை என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு நாளும் அதன் சொந்த சவால்களையும் வெற்றிகளையும் கொண்டு வருகிறது. அதை நான் நேர்மறை சிந்தனையுடன் எதிர்கொண்டு வருகிறேன். இதுதான் நான் கையாளும் வழி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.