தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியை கச்சிதமாக செய்து முடித்த கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர்.
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்களுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக்குழுவினர் ஆராய்ந்தனர்.
இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட மீட்பு பணியின்போது மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு குகைக்கு வெளியே அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது. கடும் சவால்களைக் கடந்து அனைவரையும் மீட்ட கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர்.