தமிழ் மக்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள் இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என தேசிய சகவாழ், கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அரசாங்கத்துடன் இணைய முடியாது. கொழும்பிலே தமிழ் மக்களை வெள்ளை வேனில் கடத்திச் சென்ற போது நானும் நண்பன் ரவிராஜூம் பல போராட்டங்களை நடத்தினோம். இன்று பேசும் பலர் அன்றும் இருந்தார்கள். அவர்கள் தெருவிலே இருக்கவில்லை ஓடி ஒழிந்திருந்தார்கள். மக்களை வெள்ளை வேன் கடத்தியது என்றால் அவர்களை விமானங்கள் கடத்தி வெளிநாடு கொண்டுபோய்விட்டது.
இந் நிலையில் நாட்டில் அரசியல் தீர்வு வரும்போது வரட்டும் அரசியல் தீர்வுடன் சேர்த்து அபிவிருத்தியும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம் மக்களைப் போன்று தமிழ் மக்களும் பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.
தற்போது தமிழ் மக்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள் இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்.
தமிழர்கள் காலம் முழுவதும் எதிர்க்கட்சியில் இருக்க முடியாது எழுச்சி பெற வேண்டும் இனிமேலாவது அதிகாரங்களை குவித்துக் கொண்டு அரசாங்கத்தின் பங்காளிகளாக மாற வேண்டும் என்றார்
Eelamurasu Australia Online News Portal