காதலை நிரூபிக்க மாமனாரின் நிபந்தனையை ஏற்று, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பாஜக தலைவர் உயிரிழந்தார். அவரின் இறுதிஆசையின்படி, காதலியின் கண்முன் உடலறுப்புகள் தானம் செய்யப்பட்ட உருக்கமான நிகழ்வு நடந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்தவர் அதுல் லோக்ஹண்டே. இவர் பாரதிய ஜனதா கட்சியின், இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா தலைவராக உள்ளார். லோக்ஹண்டே கடந்த சில ஆண்டுகளாக 27 வயது பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் லோக்ஹண்டேவை தீவிரமாகக் காதலித்துள்ளார்.
ஆனால், இருவரின் திருமணத்துக்கு பெண்ணின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணிடம் வீட்டைவிட்டு வந்துவிடு திருணம் செய்து கொள்ளலாம் என ஹண்டே கூறியபோதிலும், தந்தையைவிட்டு வரமுடியாது என அந்தப் பெண் கூறியுள்ளார். இதனால், அடிக்கடி தனது வருங்கால மாமனாரிடம் தனது திருமணத்தைப் பற்றி லோக்ஹண்டே பேசியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி தனது காதல், திருமணம் குறித்துப் பேசியபோது, பெண்ணின் தந்தை, ‘உன் காதல் உண்மைதான் என்பதை நிரூபி’ எனக் கேட்டுள்ளார். அதற்குத் தான் என்ன செய்யவேண்டும் கேட்கவே, ‘என் வீட்டுக்கு முன்வந்து துப்பாக்கியால் உன்னை நீயே சுட்டுக்கொண்டு காதலை நிரூபிக்க முடியுமா?’ எனக் கேட்டுள்ளார்.
இதையடுத்து, அன்று இரவு காதலியின் வீட்டுக்குச் சென்று காதலியின் தந்தையிடம் லோக்ஹண்டே பேசியுள்ளார். ஆனால், பிடிவாதமாக காதலை நிரூபிக்கத் தயாரா என அவரது காதலியின் தந்தை கேட்டுள்ளார்.
இதையடுத்து, லோக்ஹண்டே தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு காதலை நிரூபித்தார். இதைச் சுற்றும் எதிர்பாராத பெண்ணின் தந்தை, மருத்துவமனைக்குத் தகவல் கூறி ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.
இதற்கிடையே லோக்ஹண்டே காதலியின் வீட்டுக்குச்செல்லும் அரைமணி நேரத்துக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவுகளைச் செய்துள்ளார். அதில், ”நான் இப்போது காதலி வீட்டுக்குச் செல்கிறேன். காதலை நிரூபித்தால், நான் என் காதலியைக் கரம் பிடிக்கலாம் என்று என் வருங்கால மாமனார் சொல்கிறார். அதற்காக என் காதலை நிரூபிக்கும் பொருட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காதலை நிரூபிக்கப் போகிறேன். நான் நிச்சயம் உயிரோடு இருந்து என் காதலியைக் கரம் பிடிப்பேன். ஒருவேளை நான் மரணமடைந்தால், என் உடல் உறுப்புகளை என் காதலியிடம் காண்பித்து தானம் செய்துவிடுங்கள்” என உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.
போபால் நகரில் பன்சால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த லோக்ஹண்டே ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்தாலும், மூளைச்சாவு நிலைக்குச் சென்றார். மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சை அளித்தும் அவர் மூளைச்சாவு நிலைக்குச் செல்வதை தடுக்க முடியவில்லை. இதையடுத்து, லோக்ஹண்டேவின் இறுதிஆசைப்படி, உடல் உறுப்புகளைத் தானம் செய்ய மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர்.
இதற்கு லோக்ஹண்டேவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, லோக்ஹண்டேவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட அவரின் இதயம் காதலியிடமும், அவரின் தந்தையிடமும் காண்பிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏர்ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
லோக்ஹண்டேயின் இதயத்தையும், கண், உடல் உறுப்புகளையும் பார்த்த அவரின் காதலியும், தந்தையும் கண்ணீர்விட்டு அழுது, கதறினார்கள். மற்ற உடல் உறுப்புகள் போபாலில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது.
திரைப்படத்தில் வரும் துயரமான காதல் காட்சிகள் போன்று லோக்ஹண்டேவின் காதல் அமைந்துவிட்டது.
இறுதியாக லோக்ஹண்டேவின் காதல் வெற்றி பெற்றுவிட்டது. காதலியின் தந்தை தோற்றுவிட்டார்.
முன்னதாக, தன் ஃபேஸ்புக் பக்கத்தின் இறுதியில் லோக்ஹண்டே ”அதிகமான சாதி மறுப்புத் திருமணங்களும், மதங்களுக்கு இடையிலான திருமணங்களும் நடக்க வேண்டும். அதோடு, அதிகமான உடலுறுப்புதான இந்தியாவும் உருவாக வேண்டும்” என எழுதியிருந்தார்.