ஆஸ்திரேலியாவை வென்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான்!

பகர் சமான், சோயிப் மாலிக்கின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வென்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான்.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஆர்கி ஷார்ட் (76), ஆரோன் பிஞ்ச் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் பகர் சமான், சஹிப்சதா பர்ஹான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். முதல் ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

2-வது பந்தை மேக்ஸ்வெல் வைடாக வீசினார். இதில் அறிமுக வீரரான பர்ஹான் ஸ்டம்பிங் ஆனார். அடுத்து வந்த ஹுசைன் தலாத் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனால் பாகிஸ்தான் முதல் ஓவரில் 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து திணறியது பாகிஸ்தான். அதன்பின் வந்த கேப்டன் சர்பிராஸ் அஹமது அதிரடியாக விளையாடி 19 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.

4-வது விக்கெட்டுக்கு பகர் சமான் உடன் அனுபவ வீரர் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தானை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக பகர் சமான் ருத்ரதாண்டவம் ஆடினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

30 பந்தில் அரைசதம் அடித்த பகர் சமான் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சோயிப் மாலிக் 37 பந்தில் 43 ரன்களும், ஆசிஃப் அலி 11 பந்தில் 17 ரன்கள் விளாச பாகிஸ்தான் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்தரப்பு சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பகர் சமான் தட்டிச் சென்றார்.