யாழ்ப்பாணம்–வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற அரசதலைவர் மக்கள் சேவை நிகழ்வின்போது இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரையில் வெளியிடப்பட்ட நான்கு வார்த்தைகள் பெரும் பூகம்பமாக மாறி, ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வானேறி, நாடு முழுவதும் இரவோடிரவாகப் பரந்து அடுத்த நாளில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வையே அதிர்ந்து குலுங்க வைத்துவிட்டன.
அந்த வார்த்தைகள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சியினர், பதினான்கு பேர்கள் கொண்ட அணி, அரச தரப்பினர், மக்கள் விடுதலை முன்னணியினர் என எவரையும் விட்டுவைக்காமல் கொதித்தெழ வைத்துவிட்டன.
பாதுகாப்புப் பிரதியமைச்சர் ருவான் விஜயவர்த்தனா அவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் அதற்கெதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான பைசல் முஸ்தபா அது கட்சியின் கருத்தல்ல எனத் திட்டவட்டமாகத் தனது மறுப்பை வெளியிட்டார். ஜே.வி.பியின் விஜித ஹேரத் தேசத்திடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமென முழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி விஜயசேகரா விஜயகலாவை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற வேண்டு மெனப் பொங்கியெழுந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அது கட்சியின் கருத்தல்ல என்றும் விஜயகலா மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு அரச தரப்பினர், விஜயகலா பேசியிருந்த வார்த்தைகள் தேசவிரோதமானவை என்ற பாணியில் பேச, ஐக்கிய தேசியக் கட்சி அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லையெனவும் வலியுறுத்த நாடாளுமன்றத்தில் அமளிதுமளி தொடர்ந்தது.
விசாரணைகளும் குழப்பங்களும்
இந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் அரசமைப்பின் ஏழாவது விதிக்கு விரோதமானதா என்பது தொடர்பாக சபாநாயகர் ஆராய்ந்து அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், மகிந்த அணியினரோ, விமல் வீரவன்ச அணியினரோ அடங்கிப் போகவில்லை.
தொடர்ந்து குழப்பங்களை விளை வித்ததுடன் ஒரு கட்டத்தில் செங்கோலையும் தூக்க முயன்றனர். ஆனால், நாடாளுமன்றச் சேவகர்களின் தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. எதுவுமே செய்ய முடியாத நிலையில் சபாநாயகர் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தினார். அரை மணிநேரம் கழித்து மீண்டும் சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது சமாந்தரமாகக் குழப்பமும் தொடங்கிவிட்டது.
வேறுவழியின்றிச் சபாநாயகர் சபையை அடுத்தநாள் வரை ஒத்திவைத்தார். நான்கு வார்த்தைகள், செயலல்ல, வாயிலிருந்து வெளியேறிய வெறும் வார்த்தைகள் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தின் கதவுகளை இழுத்துப் பூட்ட வைத்துவிட்டனவென்றால், அந்த வார்த்தைகள் அவ்வளவு வலிமை வாய்ந்தவையா என எண்ணத் தோன்றுகிறது.
சக்தி மிக்க வார்த்தைகள்
‘புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்’ இவைதான் அந்தச் சக்தி வாய்ந்த வார்த்தைகள். இந்த வார்த்தைகள் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தியதுடன் நின்றுவிடவில்லை. சபைக்கு வெளியேயும் பல பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தின. வடமேல் மாகாணசபை உறுப்பினர்கள் இந்த வார்த்தைகளைக் கண்டித்து கறுப்புப் பட்டியணிந்து சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தனர். சிஹல உறுமய உட்பட மூன்று சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் விஜயகலா மீது முறைப்பாடு செய்துள்ளன. இவை தொடர்பாக விசாரிக்கும்படி சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை ஒன்றை வழங்கியுள்ளார்.
விஜயகலாவுக்கான ஆதரவு அணி
இந்த நான்கு வார்த்தைகளாலும் தமது கட்சிபேதங்களை மறந்து பல தரப்பினரும் ஒன்று சேர்ந்துள்ள வேளையில் மனோ கணேசன் மட்டும், ‘‘விஜயகலாவின் கோபம் நியாயமானது’’ என அடித்துக் கூறியுள்ளார். அதேபோன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவும் விஜயகலாவுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரனும் விஜயகலாவின் கூற்று நியாயமானது எனச் சில ஆதாரங்களுடன் கூறியுள்ளார். அதாவது புலிகளின் காலத்தில் சூரியன் அஸ்தமமான பின்பும் ஒரு பெண் நகைகள் அணிந்தபடி பயமின்றி வீதியால் போகும் நிலை இருந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை.
இறுதியில் திருமதி விஜயகலா தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்பு தனது இராஜாங்க அமைச்சர் பதவியைத் தானே துறந்துள்ளார்.
விஜயகலா விடயத்தில் மாத்திரம் ஏன் கவனம்?
நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுப் பின் பிணையில் விடுவிக்கப்பட்ட கலகொட அத்த ஞானசார தேரர் நடத்திய ஊடக சந்திப்பில் ‘ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரமான நரி என்றும் – பிரபாகரன் அதைச் சொல்லும்போது தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இப்போது தாங்கள் பிரபாகரனின் கூற்றை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ரணிலோ, மஹிந்தவோ, மைத்திரியோ நாட்டை ஆளும் தகுதியற்றவர்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
ஞானசாரர் பிரபாகரனைப் புகழ்ந்துரைத்தது பற்றி தற்சமயம் விஜய கலாவுக்கு எதிராக துள்ளிக் குதிப்பவர்கள் எவரும் வாயைத் திறக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகள் காரணமாகவே உருவானதெனவும், அது தோற்கடிக்கப்பட்டாலும் அதன் நியாயத்தை யாரும் மறுத்து விட முடியாதெனவும் தெளிவாகவே தெரிவித்திருந்தார். அங்கு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் பிரபாகரனின் இலட்சியம் மழுங்கடிக்கப்படக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் சம்பந்தர் பற்றியோ, விக்னேஸ்வரன் பற்றியோ எவரும் கண்டனக் குரல்களை எழுப்பவில்லை. ஏன் திருமதி விஜயகலாவுக்கு எதிராக இவ்வளவு பெரும் எதிர்ப்பு என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும்.
விஜயகலா பேசிய உரையின் சாரம்சம் இதுதான்
‘ஒரு ஆறுவயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் பின் கொல்லப்பட்டிருக்கிறாள். ஒரு பெண் கணவனின் முன்னிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள். பெண்ணின் வேதனையைப் பெண்களாலேயே உணரமுடியும். நாம் அச்சமின்றி நிம்மதியாக வாழ வேண்டுமானால் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும். ஒரு அரசியல்வாதியின் செல்வாக்கிலேயே பல மதுக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இன்று பல குற்றங்களுக்குப் போதையே காரணமாயுள்ளது’ எந்தவொரு தமிழரைப் பார்த்தும் இந்த உரையில் ஏதாவது தவறு உள்ளதா? என்று கேட்டால் ஒரு சிறு தவறும் இல்லை என்றே பதில் வரும். ஏன் இதயசுத்தி உள் மாற்றினத்தவர்களும் தவறில்லை என்றே சொல்வர். பொலிஸாரின் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
அரசு மீது நம்பிக்கை அற்றதன் வெளிப்பாடே இது
மல்லாகம் சகாய மாதா கோயிலில் இடம்பெற்ற சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிடால் உயிரிழந்தார். காயப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பொது மக்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. கொக்குவிலில் பல்கலைக்கழக மாணவர்கள் மேல் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சந்தேகநபர்களில் மூவர் அரச தரப்புச் சாட்சியாக மாற்றப்பட்டுப் பிணையில்வி டப்பட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையின் முக்கிய சந்தேக நபர் கொழும்புக்குத் தப்பியோடுவதற்கு உதவியதாகப் பொலிஸ் அதிகாரி தேடப்பட்டு வருகிறார்.
காரைநகரல் சிறுமி ஒருத்தி கடற்படைச் சிப்பாய் ஒருவரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபர் இல்லாமல் வேறு நபர்கள் அடையாள அணி வகுப்புக்கு நிறுத்தப்பட்ட சம்பவமும் அம்பலத்துக்கு வந்திருந்தது. எத்தனையோ கொலைக் குற்றங்கள் தொடர்பானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பல கொலைக் குற்றவாளிகள் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இப்படியான நிலையில் மக்கள் எப்படிப் பொலிஸாரை நம்ப முடியும்? நீதியையும், அமைதியையும், அச்சமின்மையையும் விரும்பும் ஒருவர் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென விரும்புவதில் என்ன பிழை?
விஜயகலாவைக் குற்றவாளியாக்கி விரல் நீட்டுவோர் விடுதலைப் புலிகள் காலத்தைப்போன்று சட்டவிரோதச் செயல்களை ஒழிக்கமுடியுமென உத்தரவாதம் செய்ய முடியுமா?
அந்த நாலு வார்த்தைகளைக் கண்டு துள்ளிக் குதிக்கும் பேர் வழிகள் கொலை, களவு, பாலியல் வன்புணர்வு, வாள்வெட்டுக்கள் போன்ற சட்டவிரோதக் குற்றங்களை இல்லாதொழிப்பார்களா? அது சாத்தியமில்லை? ஏனெனில் அவர்களில் பலரும்தான் இப்படியான குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளுக்கு முகம் கொடுப்பவர்கள். எப்படியிருப்பினும் இவர்கள் தங்கள் எதிர்ப்பின் மூலம் அந்த வார்த்தைகளின் வலிமையை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதே உண்மை.
நன்றி- உதயன்