வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய தனிப்பட்ட உதவியாளரையும் அழைத்துக் கொண்டு கொழும்புக்குச் சென்றுவர கடந்த 4 ஆண்டுகளில் 22 லட்சம் ரூபாவை வான் பயணங்களுக்காக மட்டும் செலவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் வானூர்திச் சேவையை வழங்கும் ஹெலி ருவர்ஸ் நிறுவனம் கொழும்பு சென்று யாழ்ப்பாணம் திரும்புவதற்கு தற்போது 29 ஆயிரம் ரூபாவை இருவழிக் கட்டணமாக அறவிடுகின்றது.
முதலமைச்சரின் தற்போதைய ஒவ்வொரு பயணத்தின் போதும் அவரது தனிப்பட்ட உதவியாள ருக்கும் சேர்த்து 58ஆயி ரம் ரூபா மாகாண சபை நிதி யில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.
கொழும்புக்குச் சென்றுவருவதற்கு வானூர்தியைப் பயன்ப டுத்துவதற்கான அனுமதியை வடக்கு மாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இருந்த போது முதலமைச்சர் பெற்றுக் கொண்டிருந்தார்.
அதனடிப்படை யிலேயே அவர் தனது வானூர்திப் பய ணங்களை மேற்கொள்கிறார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி யேற்ற தொடக்கத்தில் வாகனத்தி லேயே கொழும்புக்குச் சென்றுவந்து கொண்டிருந்தார். அப்போது வடமாகாண ஆளுநராக இருந்தவரான மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தான் கொழும்பிற்கு வானூர்தி மூலம் சென்று வருவதனால், முதலமைச்சரும் மாகாண நிதியைப் பயன்படுத்தி வானூர்திப் போக்குவரத்தை மேற்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கினார்.
இதையடுத்து 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான 4 ஆண்டுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் 48 தடவைகள் விமானம் மூலம் கொழும்பிற்கு சென்று வந்துள்ளார். இதற்காக 22 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பணம் ஷெலிருவர்ஸ் நிறுவத்திற்குச் செலுத்தப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் 11 தடவைகளும் , 2015ஆம் ஆண்டில் 13 தடவைகளும் , 2016ஆம் ஆண்டில் 15 தடவைகளும் 2017ஆம் ஆண்டில் 9 தடவைகளும் முதலமைச்சர் கொழும்பு சென்று வந்துள்ளார்.
இவ்வாறு பயணித்த 48 தடவைகளும் தன்னுடன் ஓர் உதவியாளரையும் அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு அழைத்துச் சென்ற உதவியாளரின் போக்குவரத்துக்கும் மாகாண சபையின் நிதியே வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வானூர்தி மூலம் சென்றுவருவதற்கு ஆளுநர் வழங்கிய அனுமதியில் அவர் உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வதற்கும் அனுமதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படவில்லை.
அவரது பாதுகாப்புக்காகப் பாதுகாவலர் ஒருவர் அவரோடு செல்வது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே என்கிறபோதும் ஒவ்வொரு தடவையும் அவர் தனது தனிப்பட்ட உதவியாளரையே இவ்வாறு அழைத்துச் சென்றிருக்கிறார்.
2014 , 2015ஆம் ஆண்டுகளில் இருவழிக் கட்டணமாக 35 ஆயிரம் ரூபாவீதம் பணம் செலுத்தப்பட்ட நிலையில் 2016ஆம் ஆண்டு முதல் 58 ஆயிரம் ரூபா வீதம் பணம் செலுத்தப்படுகின்றது.
இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வேறு எந்த மாகாண முதலமைச்சரிற்கும் இதுபோன்ற சலுகை தற்போதுவரையில் வழங்கப்படுவது கிடையாது.