முன்னாள் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றிற்கு சீனாவை சேர்ந்த துறைமுகநிறுவனமொன்று பணம் வழங்கியமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இது குறித்த காசோலையொன்றை வெளியிட்டுள்ளதை தொடர்ந்தே இது குறித்த சர்ச்சை மீண்டும் மூண்டுள்ளது.
கொழும்பு இன்டநசனல் கொன்டய்னர் என்ற நிறுவனம் 2012 இல் புஸ்பா ராஜபக்ச மன்றத்திற்கு 19.41 மில்லியன் பெறுமதியான காசோலையை வழங்கியுள்ளது.
மே 21 2012 திகதியிடப்பட்ட குறிப்பிட்ட காசோலை கொமேர்சல் வங்கியில் உள்ள புஸ்பா ராஜபக்ச மன்றத்தின் பெயரிற்கு அனுப்பபட்டுள்ளது.
கொழும்பு இன்டநசனல் நிறுவனம் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியில் கூட்டு முயற்சியில் தொடர்புபட்டுள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிறுவனத்தின் 85 வீத பங்குகள் ஹொங்ஹொங்கை தளமாக கொண்ட சிஎம் போட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பணப்பரிமாற்றம் தொடர்பில் நிதிகுற்றங்கள் தொடர்பிலான விசேட பொலிஸ் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாகவும்,கொழும்பு நீதிமன்றமொன்று இது குறித்த ஆவணங்களை பொலிஸாரிடம் கையளிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் அவ்வேளை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் வங்கிகள் உட்பட பலரிடம் வாக்குமூலங்களை பெற்றிருந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதிக்குற்றங்கள் தொடர்பிலான விசேட பொலிஸ் பிரிவினர் பி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன் விசாரணையை அறிக்கையை இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஏற்கனவே வழங்கிவிட்டனர் ஆனால் அங்கிருந்து ஆலோசனைகள் எவையும் வெளியாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமிக்கவேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கப்போவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தவர்கள் இவ்வாறான அமைப்புகள் மூலம் நிதியை பெற்றுக்கொள்வதில் வல்லவர்கள் ஹெல்பிங் அம்பாந்தோட்டைக்கு என்ன நடந்தது என்பது எங்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.