தாய்லாந்தில் குகை – சிறுவர்களை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்பு!

கடந்த இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் பணியினை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி 10:00 மணிக்கு மீட்பு குழுவினர் குகைக்குள் நுழைந்தனர் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஒரு அதிகாரி கூறினார்.

இன்று காலை, அவசியம் அல்லாத ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முக்குளிப்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மட்டுமே அங்கு உள்ளனர்.

வெளிநாட்டை சேர்ந்த 13 முக்குளிப்பவர்கள் மற்றும் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த 5 முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 தாய்லாந்து

12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் நான்கு நாட்களில் மீட்க வாய்ப்புள்ளதாக மீட்புப்பணி குழுவின் தலைவர் முன்பு தெரிவித்திருந்தார்

தற்போது வரை அங்கு சூழ்நிலை “கச்சிதமாக” உள்ளதாக நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்தார்

கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்த குகையை பார்ப்பதற்காக சென்ற கால்பந்து வீரர்களான இந்த 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் அங்கு நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்குண்டனர்.

குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குகை அமைந்துள்ள சியாங் ராய் மாகாணத்தின் ஆளுநரான நரோங்சக், “குகையில் சிக்கியுள்ளவர்களின் உடல்நிலை, நீரின் மட்டம் மற்றும் வானிலை போன்றவற்றை பார்க்கும்போது, தற்போது முதல் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் அவர்களை மீட்பதற்கான சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது” என்று கூறுகிறார்.