வாட்ஸ்அப் – போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்!

வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் சோதனை செய்யும் புதிய அம்சம் அதன் பயனர்களை போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும். வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யும்.
மேலும் வாட்ஸ்அப்-இல் அனுப்பப்படும் குறுந்தகவல்களில் வலைத்தள முகவரி கொண்டு வலைத்தளம் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சஸ்பீஷியஸ் லின்க் (Suspicious Link) என அழைக்கப்படுகிறது.
 

 
சஸ்பீஷியஸ் லின்க் அம்சம் எப்படி உதவும்?
இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப்-இல் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் வலைத்தள முகவரியை வாட்ஸ்அப் பின்னணியில் சோதனை செய்யும். சோதனையில் ஏதேனும் கோளாறு இருக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயனருக்கு எச்சரிக்கை செய்யும். “வாட்ஸ்அப் ஏதேனும் போலி வலைத்தள லின்க்-களை கண்டறிந்தால், குறிப்பிட்ட குறுந்தகவல் சிவப்பு நிறத்தில் குறியிடப்படும்,” என WaBetaInfo தெரிவித்து இருக்கிறது.
சிவப்பு நிற குறியீடு கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட வலைத்தளம் போலியானதா, அதில் இருந்து மற்ற போலி வலைத்தளங்களுக்கு ரீடைரக்ட் செய்யப்படும் என்பதை பயனர்கள் புரிந்து கொள்ள முடியும். சில சமயங்களில் மூன்றாம் தரப்பு லின்க்-களும் மால்வேர் நிறைந்த வலைத்தளத்துக்கான முகவரியை (லின்க்) அனுப்பலாம்.
வாட்ஸ்அப் பீட்டா 2.18.204 வெர்ஷனில் காணப்பட்டு இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் போலி செய்திகளை முடக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வந்தது குறி்ப்பிடத்தக்கது.
இதுவரை போலி செய்திகளை முடக்க வாட்ஸ்அப் மேற்கொண்ட நடவடிக்கைகள்:
– வாட்ஸ்அப் செயலியில் பயனர்களை பிளாக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனருக்கு அறிமுகம் இல்லாதவர்களை வாட்ஸ்அப்-இல் பிளாக் செய்ய முடியும்.
– க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் க்ரூப்களில் சேர்க்கச் செய்யும் வசதி முடக்கப்பட்டுள்ளது.
– குறிப்பிட்ட க்ரூப்களில் யார் யார் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்களே முடிவு செய்ய முடியும்.
– க்ரூப் அட்மின்களை டீமோட் (Demote) செய்யும் வசதி. இந்த வசதியை கொண்டு ஏற்கனவே க்ரூப் அட்மினாக இருக்கும் ஒருவரை க்ரூப் உறுப்பினராக மாற்ற முடியும்.
– ஃபார்வேர்டெட் (Forwarded) லேபல் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.