வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்த பிறகே அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இன்று தெரிவித்தார்.
வடகொரியா, ஜப்பான், வியட்னாம், ஐக்கிய அரபு அமீரகம், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாடாக அவர், வடகொரியா தலைநகர் பியோங்யாங்கிற்கு கடந்த 5-ம் தேதி சென்றிருந்தார்.
சமீபத்தில், அணு ஆயுதங்களை மிக வேகமாக அழிக்க வடகொரியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அவசரம் காட்டி அழுத்தம் கொடுத்தது. ஆனால், அவ்வளவு வேகமாக அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இதனால், வடகொரிய பயணத்தின் போது கிம் ஜாங் அன்னை சந்திக்காத பாம்பியோ, வடகொரிய உயர் அதிகாரிகளை சந்தித்தார், அவர்களிடம் சமீபத்தில் இருநாடுகளுக்கு இடையே போடப்பட்ட சிங்கப்பூர் ஒப்பந்தம் குறித்தும், அணு சோதனை மையங்களை அழிப்பது தொடர்பாகவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வடகொரியா பயணத்தை முடித்துகொண்டு, பாம்பியோ நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். அங்கு தென்கொரியா மற்றும் ஜப்பான் நாட்டின் வெளியுறவு மந்திரிகள் உடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்த பிறகே அந்நாட்டின் மீது விதிக்கப்படுள்ள பொருளாதார தடைகள் விலக்கிக்கொள்ளப்படும்.
மேலும், சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, அணு ஆயுதங்கள் வடகொரியாவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதா? என ஆய்வு குழுவினர் ஆய்வு செய்து சரிபார்த்த பின்னரே பொருளாதார தடைகள் விலக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என பாம்பியோ தெரிவித்தார்.