அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு நிர்பந்திக்க வந்திருந்த அமெரிக்க மந்திரியின் அணுகுமுறை வருத்தமளிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி நேற்று பியாங்யாங் வந்திருந்தார்.
சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது.
வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்தது.
வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்ப்பியோ நேற்று பியாங்யாங் வந்தார்.
வடகொரியா அதிபரின் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ ஆகியோர் அவரை வரவேற்றனர்.
முன்னதாக, அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட மைக் பாம்ப்பியோ, வரும் வழியில் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
வடகொரியாவில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர். உலகத்துக்கு அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடகொரியா அதிபரை இந்த பயணத்தின்போது நான் வலியுறுத்துவேன்.
இதற்கு வடகொரியாவும் தயாராக இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதிகமாக சந்திப்பதன் மூலம் நட்புறவும், நம்பிக்கையும் பலப்படும் என்பதால் வடகொரியா தரப்பில் இருந்து உரிய எதிர்வினையை எதிர்பார்க்கிறேன் என பேட்டியின்போது மைக் பாம்ப்பியோ குறிப்பிட்டிருந்தார்.
அவர் புறப்பட்டு சென்ற பின்னர் வடகொரியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ’இருநாட்களாக நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் சார்பில் முன்வைக்கப்பட்ட நிர்பந்தங்களும், நிபந்தனைகளும், கடைபிடித்த பாணியும் மிகவும் வருத்தம் அளிக்கும் மனப்போக்குடன் அமைந்திருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கொரியா தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பகுதியாக மாற்ற வேண்டுமானால் அதற்கான திட்டமிட்ட அணுகுமுறைகளை இருதரப்பினரும் ஒரே நேரத்தில் கையாள்வதுதான் வேகமான வழியாக அமையும்’ என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.