மீண்டும் ஒருமுறை இந்தியா கடைசிக்கட்டத்தில்தான் போராடி வீழ்ந்திருக்கிறது. நம்முடைய பலம், பலவீனத்தை நம்மை விட நம் எதிரி நன்றாக அறிவார் அல்லவா?
இந்தியாவின் சாம்பியன்ஸ் கோப்பைக் கனவை இருமுறை கலைத்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மார்க் நோல்ஸ் நம் அணி பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
கடந்த காமன்வெல்த் போட்டி வெற்றியுடன் சர்வதேச ஆக்கியில் இருந்து ஓய்வு பெற்ற 34 வயது மார்க் நோல்ஸ், பெருமைக்குரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். மும்முறை ஒலிம்பிக்கிலும், இருமுறை உலகக் கோப்பையிலும், நான்கு முறை சாம்பியன்ஸ் டிராபியிலும் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தவர்.
இனி, மார்க் நோல்சின் பேட்டி…
தற்போதைய இந்திய ஆக்கி அணியை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்?
இந்தியா உண்மையிலேயே மிகவும் சிறந்த, உலகின் எந்த அணியையும் வெல்லும் திறன் படைத்த அணி. அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஆனால், அவர்களால் ஒலிம்பிக்கிலோ உலகக் கோப்பையிலோ தொடர்ந்து ஏழு போட்டிகளில் வென்று சாம்பியனாக முடியுமா? அந்த விஷயத்தில்தான், அதாவது தொடர்ச்சியாக வெல்வதில்தான் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். உலகின் மிகச் சிறந்த ஆக்கி அணிகள் தொடர்ந்து நீண்டகாலமாக நன்றாக விளையாடி வருகின்றன. இந்தியாவின் இளம் வீரர்கள் பாராட்டத்தக்க வகையில் விளையாடி வருகிறார்கள். அவர்களின் பெனால்டி கார்னர் அணியும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் அடிக்கடி பயிற்சியாளர்கள் மாற்றப்படுகிறார்கள். இந்நிலையில் அவர்களால் எப்படிச் சிறப்பாகச் செயல்பட முடியும்?
அது உண்மைதான். ஓர் ஆக்கி வீரராக நான் அதை ரசிக்கவில்லை. நானாக இருந்தால், பயிற்சியாளரை அடிக்கடி மாற்றுவதற்குப் பதிலாக, ஓர் அமைப்பையும், நீண்டகாலத் திட்டத்தையும் உருவாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இந்திய அணி ஒன்றிணைந்து நிறைய விளையாடுகிறது. எனவே அவர்கள் தங்களுக்கு என்று ஒரு தரத்தை உருவாக்க வேண்டும். பயிற்சியாளரால் மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. ஆனால் பயிற்சியாளர்களை அடிக்கடி மாற்றியும்கூட, இந்தியா ஒரு நல்ல அணியாகவே நீடிக்கிறது.
ஓர் அமைப்புமுறையைக் கொண்டுவருவதற்கு ஒரு பயிற்சியாளருக்கு எவ்வளவு காலம் அளிக்கப்பட வேண்டும்?
நாங்கள் எங்கள் பயிற்சியாளர்களுடன் நான்காண்டு கால ஒப்பந்தம் போடுகிறோம். ஓர் ஒலிம்பிக்குக்கும் இன்னொரு ஒலிம்பிக்குக்கும் இடைப்பட்ட காலத்தில் வேறு பயிற்சியாளர் மாறுவது கிடையாது. ஒரு பயிற்சியாளருக்கு அந்த அளவு காலகட்டம்கூட இல்லை என்றால் கஷ்டம். அப்போதுதான், புதிய நபர், புதிய அமைப்பு, புதிய வியூகங்களுடன் வீரர்களால் ஒத்துப்போக முடியும். ஆனால், உடனுக்குடன் வெற்றி, நல்ல முடிவுகளை எதிர்பார்க்கும் உலகில் நாம் வாழ்கிறோம். இது ஒரு பயிற்சியாளருக்கு கடினமான விஷயம்தான்.
உலக அளவிலான முக்கியமான ஆக்கி தொடர்களை வெல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும்?
தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். நல்ல சர்வதேச அணிகளுடன் விளையாடும்போதுதான் நாம் நிறையக் கற்றுக்கொள்கிறோம். இந்தியா பாரம்பரியமாகவே தனிநபர் திறனிலும், கோல் அடிப்பதிலும், தற்போது பெனால்டி கார்னரிலும் சிறந்த அணி. ஆனால் உலகின் ‘டாப்’ அணிகள் எப்படி வளர்ந்து வந்திருக்கின்றன என்று அவர்கள் கவனிக்க வேண்டும்.
எதிர்வரும் உலகக் கோப்பை ஆக்கி போட்டி பற்றி…?
தற்போதைய முன்னணி 8 அணிகளில் எந்த ஒன்றாலும் கோப்பையை வெல்ல முடியும். அணிகள் இவ்வளவு சமபலத்துடன் திகழ்ந்த, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற நிலை நிலவிய காலத்தில் நான் ஆக்கி விளையாடவில்லை. பல விளையாட்டுகளில் இது மிகவும் அரிதான நிலை!
சாம்பியன் ஆஸ்திரேலிய வீரரின் அறிவுரைகளை இந்தியா கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.