சாலையில் போடப்பட்டுள்ள கட்டித்தார் உருகி, வாகனங்களின் டயர்களில் ஒட்டியதால், ஆஸ்திரேலிய வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனங்களை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குயின்ஸ்லாந்திலுள்ள 50-க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இது தொடர்பாக இழப்பீடு வழங்கப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
“இதுபோல நான் இதுவரை பார்த்ததில்லை. நேற்று இது பற்றிய தகவல்கள் வர தொடங்கியவுடன் நம்ப முடியவில்லை” என்று உள்ளூர் மேயரான ஜோ பரோனல்லா பிபிசியிடம் தெரிவித்தார்.
வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழந்துள்ள இந்த சம்பவத்தால், கடந்த வாரம் தார் போடப்பட்ட சாலை சேதமடைந்துள்ளது.
பல குளிரான நாட்களையும், மழையையும் தொடர்ந்து நிலவிவரும் சூடான வானிலைக்கு மத்தியில், பெரிய உருளை வடிவில் தார் காரில் ஒட்டிக்கொண்டது என்று உள்ளூர்வாசி டெபோரா தெரிவித்தார்,
ஒரு வாரமாக ஒழுங்கான வானிலை நிலவவில்லை. சூரிய வெப்பம் அதிகரித்தது. பின்னர் தார் வாகனங்களில் ஒட்டத் தொடங்கியது என்று கூரியர் மெயில் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
இவ்வாறு தார் ஒட்டிவிட்டதால், பல வாகனங்களிலுள்ள டயர்களை மாற்ற வேண்டியதாயிற்று. கார்களின் பம்பர் மற்றும் தகடுகளும் தார் ஒட்டி சேதமடைந்தன.
கேன்ஸ் நகருக்கு தெற்கிலுள்ள அத்தர்டன் டேபிள்லேன்ட்ஸில் அமைந்துள்ள இந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வாகனங்கள் சேதமடைந்துள்ள ஓட்டுநர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று குயின்ஸ்லாந்தின் போக்குவரத்து மற்றும் பிரதான சாலைகளுக்கான துறை தெரிவித்துள்ளது.