நல்ல மாற்றத்தை ஏற்படுத்த யாரால் முடியும்?

ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. இதில் முக்கியமானது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது.

`நம் ஒவ்வொருவராலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ – நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார் அமெரிக்க அரசியல்வாதியும் மேரிலேண்டின் செனட்டராகவும் பணியாற்றிய பார்பரா மிகுல்ஸ்கி (Barbara Mikulski). வீடு, அலுவலகம், சமூகம்… எதுவாகவும் இருக்கட்டும்… ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவது சாதாரண காரியமல்ல. இதில் முக்கியமானது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது. அதற்கு முதலில், `நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வேண்டும்; விடா முயற்சி வேண்டும்; எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் வேண்டும். இதற்கெல்லாம் மேலாக சக மனிதர்களை, உயிர்களை பேரன்போடும் பெருங்கருணையோடும் நேசிக்கிற பண்பு வேண்டும். நேசமும் இரக்கமும் இருக்கிறவர்களால் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நிச்சயம் முடியும். அந்த மாற்றம், இந்த உலகுக்கே நன்மையளிப்பதாக இருக்கும். அந்த உண்மையை எடுத்துச் சொல்லும் கதை ஒன்று…

அது அமெரிக்காவிலிருக்கும் ஒரு சிறு நகரம். ஊருக்கு நடுவே பூங்கா ஒன்று இருந்தது… அதற்கு அருகிலேயே ஓர் ஏரியும் இருந்தது. அவர் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி அந்தப் பூங்காவுக்குப் போகும் பழக்கம் அவருக்கு உண்டு. அங்கே அவருடைய சில நண்பர்கள் வருவார்கள். அவர்களுடன் உரையாடுவார். சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வார். நிறைய நேரம் கிடைத்தால், கையோடு கொண்டு வந்திருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவார்.

பூங்கா

ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் பூங்காவுக்குப் போகும்போதெல்லாம், அங்கிருக்கும் ஏரிக்கருகே பெஞ்சில் ஒரு முதிய பெண்மணி அமர்ந்திருப்பதைப் பார்த்திருந்தார். அந்தப் பெண்மணிக்குப் பக்கத்தில் சின்னதாக ஒரு பெட்டியும் இருக்கும். ஆனால், அந்தப் பெண்மணி அங்கே அமர்ந்து என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவர் கவனித்ததில்லை. வழக்கம்போல ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று அவர் பூங்காவுக்கு வந்தார். அந்த முதிய பெண்மணி ஏரிக்கருகே பெஞ்சில் அமர்ந்திருந்ததையும் பார்த்தார். `இந்த அம்மா இங்கே உட்கார்ந்து என்னதான் செய்றாங்க?’ – அறிந்துகொள்ளும் ஆர்வம் அவருக்குள் எழுந்தது. மெள்ள நடந்து அந்தப் பெண்மணிக்கு அருகே போனார்.

அருகே போனதும்தான் அந்தப் பெண்மணி வைத்திருந்தது சிறு பெட்டியல்ல, அது ஆமைகளைப் பிடிக்கும் கண்ணி என்பதை அறிந்தார். அந்த கண்ணிக்குள் இரண்டு சிறு ஆமைகள் மெதுவாக நடந்துகொண்டிருந்தன. அந்த மூதாட்டி, தன் மடியில் ஒரு ஆமையை வைத்திருந்தார். அதன் ஓட்டை, தன் கையிலிருக்கும் மென்மையான, பஞ்சால் ஆன பிரஷ்ஷால் தேய்த்துக்கொண்டிருந்தார். இவர், அந்தப் பெண்மணியின் முன்னால் போய் நின்றார். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

முகமன் கூறினார். “மேடம்… ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் இங்கே உங்களைப் பார்த்திருக்கேன். உங்களோட பேசணும்னு நினைப்பேன். ஆனா, என்னவோ ஒரு தயக்கம்… ஆமா, இந்த ஆமைகளோட நீங்க என்ன செய்றீங்க?’’ என்று கேட்டார் அவர்.

ஆமை

அந்த மூதாட்டி தன் பொக்கை வாயைத் திறந்து மென்மையாகச் சிரித்தார். பிறகு சொன்னார்… “நான் இந்த ஆமைகளோட ஓடுகளைச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். தண்ணியில இருக்கும்போது, ஆமையோட ஓட்டுல நீர்ப்பாசி (Algae) மாதிரி ஏதாவது அழுக்குப் படிஞ்சுடும். அதனால, ஆமைகளால் சூட்டை உள்வாக்கிக்க முடியாமப் போயிடும். சில நேரங்கள்ல, இந்த அழுக்குகளாலயே தண்ணியில நீந்துற வேகமும் ஆமைக்குக் குறைஞ்சு போயிடும். நீர்ப்பாசி இருக்கே… ஆமையோட ஓட்டைக் கொஞ்சம் கொஞ்சமா பலவீனப்படுத்திடும்…’’

“அடடா… உண்மைதான்.’’ ஒரு சிரிப்போடு சொன்னார் அவர்.

அந்த முதிய பெண்மணி தொடர்ந்துசொன்னார்… “அதனாலதான் நான் ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் இங்கே வர்றேன். சில மணி நேரங்களை ரிலாக்ஸா இங்கே செலவழிப்பேன். இந்த கண்ணியால சில ஆமைகளைப் பிடிச்சு, அதுங்களோட ஓடுகளை சுத்தம் பண்ணுவேன். என்னால முடிஞ்ச ஏதோ ஒரு உதவி… சின்ன மாற்றம்…’’

“அது சரி… உலகத்துல கோடிக்கணக்கான ஆமைங்க இருக்கு. நீங்க சுத்தம் செய்ற ஆமைகளைத் தவிர, மத்த ஆமைகளோட ஓடுகள் நீர்ப்பாசியோடயும் அழுக்கோடயும்தானே இருக்கும்?’’

“ஆமாம். உண்மைதான்.’’ ஆமை

“அப்படின்னா உங்க நேரத்தை நீங்க வேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்கனு அர்த்தம். இந்த ஏரியை விடுங்க… இன்னும் உலகத்துல இருக்குற எத்தனையோ ஏரிகள்ல எத்தனையோ ஆமைகள் இருக்கு… அதுங்களோட ஓடுகளையெல்லாம் யாரும் சுத்தம் செய்யறது இல்லை. இந்தச் சின்ன ஏரிக்கரையில உட்கார்ந்துக்கிட்டு, ஒண்ணு, ரெண்டு ஆமை ஓடுகளைச் சுத்தம் செஞ்சுட்டு, `ஏதோ என்னால முடிஞ்ச மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்றேன்’னு சொல்றீங்களே… வேடிக்கையா இல்லையா மேடம்?’’

இதைக் கேட்டு அந்தப் பெண்மணி மிக மென்மையாகச் சிரித்தார். பிறகு, தன் மடியிலிருக்கும் ஆமையின் ஓட்டை, தன் கையிலிருக்கும் பிரஷ்ஷால் சுத்தம் செய்துகொண்டே சொன்னார்… “இந்த ஆமைக்கு மட்டும் பேசுற சக்தி இருக்குனு வைங்க! அது என்னைப் பத்தி உங்ககிட்ட `இவங்களால ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும், அதுக்காகத்தான் இவங்க போராடிக்கிட்டிருக்காங்க’னு சொல்லும்!

பாலு சத்யா