`தனியாளா போராடுறேன்’ – ரேவதி

‘ஒரு நடிகையான எனக்கே இப்படி நடக்குது. என் குடும்பத்தினர் நிம்மதியா தூங்கியே ஒன்றரை வருஷமாகுது; யாருக்கும் நிம்மதியில்லை. அதையும் எதிர்த்து நான் தனியாளா போராடிகிட்டு இருக்கேன். இதே சாதாரண ஒரு பெண்ணுக்குப் பிரச்னை வந்தால் எப்படி உரிய நியாயம் கிடைக்கும்? இனி ‘அம்மா’வில் நான் உறுப்பினராக இருந்து என்ன பயன்?’ ” என்று அந்த நடிகை வருந்துகிறார்.

டிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் இருந்து விலக்கிவைக்கப்பட்டிருந்த நடிகர் திலீப்பை, மீண்டும் அச்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்த்திருந்தார், தற்போது தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கும் நடிகர் மோகன்லால். நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து நடிகைகள் கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன், ரீமா கலிங்கல், பாதிக்கப்பட்ட நடிகை ஆகியோர் தங்கள் உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்ய, பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்நிலையில், ‘நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்கக்கூடாது; நடிகைகளுக்குச் சங்கத்தில் என்ன பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது; விரைவில் சங்கக் கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என அடுக்கடுக்கான கோரிக்கைகளை முன்வைத்து ‘டபிள்யூ.சி.சி’ அமைப்பிலுள்ள நடிகைகள் குரல் கொடுத்துவருகின்றனர். இந்த அமைப்பிலுள்ள நடிகை ரேவதி, பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். அவரிடம், இது தொடர்பாகப் பேசினோம்.

“உங்களுடைய ‘டபிள்யூ.சி.சி’ அமைப்பின் கோரிக்கை என்ன?”

“கடந்த ஜூன் 24-ம் தேதி ‘அம்மா’வின் கூட்டம் நடந்தது. அதில் அந்த நடிகரை மீண்டும் உறுப்பினராக்க முடிவெடுத்திருக்கிறார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இப்போ வரை அந்த நடிகர் குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கிறார். வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது. மிக விரைவாகவும், நியாயமான தீர்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தீர்ப்பு எதுவாக இருப்பினும் அதை ஏற்றுக்கொள்வோம். ஒருவேளை நடிகர் திலீப் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வெளியானால், அதன் பிறகு அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. இவ்விவகாரம் தொடர்பாக, ‘அம்மா’வின் வாழ்நாள் உறுப்பினரான நான், சங்கத்திற்கு சில கேள்விகளை முன்வைத்தேன். அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட ஒரு நடிகரை எப்படி மீண்டும் உறுப்பினராகச் சேர்க்கலாம்? பாதிக்கப்பட்ட நடிகையும் ‘அம்மா’வின் உறுப்பினர்தானே. அவருக்கும் அவரின் பிரச்னைக்கும் நீங்கள் என்ன முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? இனி எந்த ஒரு நடிகைக்கும் இதுபோன்ற பிரச்னை வரக்கூடாது என எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறீர்கள்? இந்தக் கேள்விகளை கடிதமாக எழுதி, நானும், நடிகைகள் பத்மபிரியா மற்றும் பார்வதி ஆகியோர் ‘அம்மா’ சங்கத்திற்கு அனுப்பியிருக்கிறோம்.”

ரேவதி

“குற்றம் சாட்டப்பட்ட நடிகரைக் காப்பாற்ற வேண்டும் என ‘அம்மா’ சங்கத்திலுள்ள முக்கிய நிர்வாகிகள் நினைப்பதாக கருதுகிறீர்களா?” 

“அப்படி நினைக்கலை. ஏன்னா, முக்கிய நிர்வாகிகள் ஒருசிலர் மட்டும் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லைனு நினைக்கிறேன். நிறைய நடிகர், நடிகைகளும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கணும். அதற்குச் சான்றாக ஒரு விஷயத்தை சொல்றேன். சில தினங்களுக்கு முன்பு ‘அம்மா’ சங்கத்தின் கூட்டம் கேரளாவில் நடந்திருக்கு. அதில்தான், குற்றம்சாட்டப்பட்ட நடிகரை மறுபடியும் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்க முடிவெடுக்கப்பட்டிருக்கு. அந்தக் கூட்டத்தில் கலந்துகிட்ட நூற்றுக்கணக்கான நடிகர்களில் ஒருத்தர்கூட… அவ்ளோ ஏன்? ஒரு நடிகைகூட பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவா குரல் கொடுக்கலை. அதிலிருந்தே அங்க இருந்தவங்களோடு மனசாட்சியை நல்லா புரிஞ்சுக்க முடியுது. அதுதான் எங்களுக்குப் பெரிய வருத்தம். சினிமா துறையின் செயல்பாடுகளை ஒட்டுமொத்த சமூகமும் கவனிச்சுகிட்டு இருக்குது. அதனால இங்க நடக்கும் பிரச்னைக்கு நியாயமான, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் சினிமாத்துறை மற்றும் மற்ற இடங்களில் பிரச்னை ஏற்படாமல் இருக்கவும், தடுக்கவும் முடியும். அதற்குச் சினிமா துறையினர் ஒருங்கிணைந்து, மனசாட்சிப்படி பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு கொடுக்கணும்.”

“நீங்கள் உட்பட டபிள்யூ.சி.சி அமைப்பிலுள்ள ஒரு நடிகைகூடவா அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை?”

“அதுதான் நாங்க செய்த பெரிய தவறு. பொதுவா ஒரு கூட்டம் நடப்பதற்கு 21 நாள்களுக்கு முன்பே அதில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் பற்றி எல்லா உறுப்பினர்களுக்கும் சொல்லிடுவாங்க. ஆனால், இந்த முறை அப்படி எதுவும் நடக்கலை. அதனால, கடந்த 24-ம் தேதி நடந்த கூட்டம் சாதாரணமான கூட்டமாக இருக்கும்னு நினைச்சுகிட்டோம். அதில்லாம, எங்க குழுவில் உள்ள எட்டு உறுப்பினர்களில், அஞ்சு நடிகைகள் வெளிமாநிலத்தில் இருந்தோம். நிறைய வேலைகள் இருந்ததால, கூட்டத்தில் எங்களால் கலந்துக்க முடியலை. ஆனா, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை கேள்விப்பட்டதுமே, எங்க டபிள்யூ.சி.சி குழுவைச் சேர்ந்த நடிகைகள் ஒண்ணுகூடி விவாதித்தோம். எங்கள் முடிவு மற்றும் கோரிக்கைகளை, உடனே ‘அம்மா’வுக்கு அனுப்பினோம். எங்களுக்கு ஆதரவாக பல அமைப்பினரும் குரல் கொடுத்தார்கள். இதுவரை ‘அம்மா’ உரிய பதிலைச் சொல்லலை. இதற்கிடையே, ‘என் மேல் இன்னும் குற்றச்சாட்டு இருக்கு. அதில் இருந்து நான் விடுவிக்கப்பட்ட பிறகுதான் மறுபடியும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராவேன்’னு நடிகர் திலீப் சங்கத்துக்கு நேற்று கடிதம் எழுதியிருக்காரு. இப்போ கிடைச்ச படிப்பினையில், இனி நடிகர் சங்கத்தில் எந்த ஒரு கூட்டம் நடந்தாலும், நாங்கள் நிச்சயம் கலந்துகொள்வோம்.”

“ ‘அம்மா’ கூட்டத்தில் மட்டுமா? அல்லது ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ உட்பட எல்லா நடிகர் சங்கக் கூட்டத்திலும் கலந்துகொள்வீர்களா?”

(சிரிப்பவர்), “நீங்க கேட்கும் அர்த்தம் புரியுது. எந்த ஒரு நடிகர் சங்கக் குழுக் கூட்டமும் ஒட்டுமொத்த கலைஞர்களின் நலனுக்குத்தான் நடத்தப்படுகிறது. ஆனால், அந்த நேரம் பல வேலைகளில் பிஸியா இருப்பதால்தான் பல நடிகர்களால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போகும். கூட்டத்தில் கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமான குரல் கொடுத்தால்தான் நல்ல மாற்றத்துக்கு வழிகிடைக்கும். எனவே, இனி, நிச்சயம் எல்லா நடிகர் சங்கக் கூட்டத்திலும் கலந்துகொள்ள முயற்சி செய்வேன்.”

“கூட்டத்தில் அந்த நடிகைக்கு ஆதரவாக ஒருவரும் குரல் கொடுக்கவில்லை சரி. இப்போதுவரை தனிப்பட்ட முறையிலும் ஒரு நடிகர், நடிகைகூட அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லையே?”

“அதுதான் எனக்கும் புரியலை. மனிதர்களின் மனநிலை மிகவும் சிக்கலானது. இப்போது மற்ற எல்லா நடிகர், நடிகைகளின் அமைதியும் அவர்களுக்கு நியாயமாகத் தெரியலாம். இன்றைக்கு நடந்ததுபோல, நாளைக்கு இன்னொரு நடிகைக்கு பிரச்னை வந்தால் என்ன பண்ணுவாங்க? அப்போ மறுபடியும் ஃபீல் பண்ணி என்ன ஆகப்போகுது? அந்த நடிகைக்கு அநீதி நடந்தபோது, அவருக்கு நிறைய நடிகர்கள் ‘அம்மா’ சங்கத்தின் மூலம் ஆதரவா இருப்போம்னு சொன்னாங்க. ஆனா, நடிகர் திலீப் இந்தப் பிரச்னைக்குள் சிக்கியதுமே மற்ற நடிகர், நடிகைகள் எல்லோரும் ஆதரவாக இல்லாம, நழுவிட்டாங்க. அதனால் பெரிய அதிர்ச்சி ஏற்படவே, நான் உட்பட எட்டு நடிகைகள் இணைந்து ‘டபிள்யூ.சி.சி’ அமைப்பை ஏற்படுத்தினோம். எங்கள் எட்டு பேரை தவிர, பல சினிமா துணை அமைப்புகளைச் சேர்ந்த 21 பெண் உறுப்பினர்கள் குழுவில் இருக்காங்க. நிறைய விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். அதில் ஒன்றுதான், ‘அவள் கொப்பம் (அவள்கூட)’ என்ற ஒரு ஹேஸ்டேக்கை, சினிமா நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களிலெல்லாம் பிரபலப்படுத்தினோம். இதனால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்கவும், சினிமா உள்ளிட்ட சமூகத்தில் எந்த ஒரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் இதுபோன்றதொரு பிரச்னை வரக்கூடாது எனத் தொடர்ந்து போராடுறோம். இது எங்களோடு முடியப்போகிற விஷயமில்லை. நம்ம அடுத்தடுத்த தலைமுறையினரும் சமூகப் பிரச்னைக்கு குரல் கொடுக்கணும் என்றுதான் நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.”

நடிகைகள்

“பாதிக்கப்பட்ட நடிகைக்கு, ‘அம்மா’ சங்கம் இனி எப்படி உதவணும் என நினைக்கிறீங்க?”

“பாலியல் சார்ந்த பிரச்னை ஒரு பெண்ணுக்கு ஏற்படால், அதனால் அவரது வாழ்நாள் முழுக்க தீராத வலியைத்தான் ஏற்படுத்தும்; பாதிப்பை உண்டாக்கிக்கொண்டேதான் இருக்கும். அதனால் ‘சினிமாத்துறையிலுள்ள எந்த ஒரு பெண்ணுக்கும் பாலியல் மற்றும் பிற பிரச்னைகள் எதுவும் நடக்காது; நடந்தால் அவருக்கு நீதி கிடைக்க முழு ஆதரவு தருவோம்’ என்ற உறுதியை ‘அம்மா’ சங்கம் வழங்க வேண்டும். ‘அம்மா’ சங்கம் இதுவரை நிறைய நல்ல விஷயங்களைச் செய்துவருகிறது. ஆனால், பெண் கலைஞர்களின் பாதுகாப்பில் மட்டும் சிறப்பான ஆதரவை கொடுத்ததில்லை. அதற்குப் பாதிக்கப்பட்ட பெண்களும் முன்வந்து ஆதரவைக் கேட்காததும் ஒரு காரணம். ஆனால், இப்போ தைரியமாக ஒரு நடிகை முன்வந்திருக்கிறார். அதனை வரவேற்று, அவருக்கு உரிய நீதியை ‘அம்மா’ பெற்றுக்கொடுக்கணும்.”

மோகன்லால்

“உங்க அமைப்பின் கோரிக்கையை ‘அம்மா’ சங்கத் தலைவர் நடிகர் மோகன்லாலிடம் சொன்னீர்களா?”

“முயற்சி செய்தேன். ஆனால் அவர்கிட்ட பேசமுடியலை. இன்னிக்கு நிச்சயம் அவர்கிட்ட பேசுவேன். விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக ‘அம்மா’வின் கூட்டம் நடக்கப்போகுது. அனைவரும் கலந்துகொள்ள ஏதுவாக, ஜூலை 13, 14 தேதிகள்ல வைக்க வலியுறுத்தியுள்ளோம். கூட்டத்தில் கலந்துகிட்டு எங்க கோரிக்கைகளை அழுத்தமாக பதிவுசெய்வோம்.”

“பாதிக்கப்பட்ட நடிகைகிட்ட பேசினீங்களா? அவங்க என்ன சொன்னாங்க?”

“ரொம்ப மனசுடைஞ்சு இருக்காங்க. ‘ஒரு நடிகையான எனக்கே இப்படி நடக்குது. என் குடும்பத்தினர் நிம்மதியா தூங்கியே ஒன்றரை வருஷமாகுது; யாருக்கும் நிம்மதியில்லை. அதையும் எதிர்த்து நான் தனியாளா போராடிகிட்டு இருக்கேன். இதே சாதாரண ஒரு பெண்ணுக்குப் பிரச்னை வந்தால் எப்படி உரிய நியாயம் கிடைக்கும்? இனி ‘அம்மா’வில் நான் உறுப்பினராக இருந்து என்ன பயன்?’ என ஆதங்கமாகச் சொன்னார். அவரைச் சமாதானப்படுத்தியிருக்கிறேன்.”

“சினிமாவில் தற்போது அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னையை எதிர்த்துப் பல நடிகைகள் குரல் கொடுக்கிறாங்க. அப்படி குரல் கொடுக்கும் நடிகைகளுக்கு ஆதரவா யாரும் பெரிசா குரல் கொடுக்கலையே?”

“சினிமாவில் அந்தப் பிரச்னை இருப்பது உண்மைதான். இப்போதான் பாதிக்கப்பட்ட நடிகைகள் தைரியமா குரல் கொடுக்கிறாங்க. அது நல்ல செயல்பாடு. இனி அந்தப் பிரச்னைக்கு எங்க அமைப்பு ஆதரவாகச் செயல்படும். இனி இந்தப் பிரச்னைக்கான தீர்வுக்கும், நல்ல முயற்சிகள் தொடங்கும்.”