சிரியாவில் பிறவியிலேயே கால்கள் இன்றி முடங்கி கிடந்த தனது குழந்தைக்கு வெளியுலகை காட்டி நடக்க வைத்த தந்தையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிரியாவில் உள்ள அலெப்பி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது மெர்கி (34). இவரது மகள் மாயா மெர்கி (8). இவள் கால் இன்றி பிறந்தாள். பிறவியிலேயே இவளுக்கு முழங்காலுக்கு கீழ் பகுதி இல்லை. எனவே இவலால் நடக்க முடியவில்லை. வெளி உலகை காண முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தாள்.
உள் நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்பி பகுதியில் இருந்து இட்லிப் அகதிகள் முகாமுக்கு மக்கள் குடிபெயர்ந்தார்கள். அங்கும் அவள் கூடாரத்துக்குள் முடங்கி கிடந்தாள்.
அதை பார்த்து மனம் வேதனைப்பட்ட அவளது தந்தை முகமது மெர்கி மிகவும் மெதுவான பொருட்களால் செயற்கை கால் தயாரித்து ஓரளவு நடக்க உதவினார். அதற்கு அதிக செலவானதால் பிளாஸ்டிக் டியூப்பில் ‘டின்கேன்’களை சொருகி கால் தயாரித்து கொடுத்தார்.
அதன் மூலம் கஷ்டப்பட்டு நடந்த மாயா மெர்கியின் காணொளி இணைய தளங்கள் மூலம் வைரலாக பரவி உலக மக்களின் பார்வையை ஈர்த்தது.
இந்த நிலையில் துருக்கி ரெட் கிரசண்ட் என்ற சமூக சேவை அமைப்பு அவளுக்கு உதவ முன் வந்தது. சிறுமி மாயா மெர்கி அவளது தந்தை முகமது மெர்கி ஆகியோரை இஸ்தான்புல் நகருக்கு அழைத்தது.
அங்கு சென்ற சிறுமி மாயா மெர்கியை டாக்டர் மெக்மெட் ஷெகி குல்ரு பரிசோதித்தார். பிறவியிலேயே கால் இன்றி பிறந்ததால் அவளுக்கு முழுமையாக கால் வழங்க முடியாது.
ஆனால் செயற்கை மூலம் தயாரிக்கப்பட்ட கால்களை ஆபரேசன் மூலம் பொருத்தி நடக்க வைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். கடவுளின் விருப்பம் இருந்தால் இன்னும் 3 மாதத்தில் அவளால் நடக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
அவர் மீது நம்பிக்கை உள்ளதாகவும், தனது மகளின் வாழ்வில் புதிய ஒளி பிறக்கும் என்றும் முகமது மெர்கி தெரிவித்தார்.