தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு ஒப்பிட்டு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பேசியிருந்தார். அது வரவேற்கப்படவேண்டிய விடயம்.
தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களுக்குத் தீர்வாக எதைக் கொடுக்க முயன்றாரோ, அந்தக் கொள்கையில்தான் கஜேந்திரகுமாரும் போராடி வருகின்றார். இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா தெரிவித்தார். வவுனியாவில் செய்தியாளர்களை நேற்றுச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் வழக்குத் தொடுத்தமை உண்மையில் வருத்தத்துக்குரிய விடயம். மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரைப் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கின்றார்.
அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே அவரை எதிர்க்கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு கூறும்போது, விலகாமல் கங்கணம் கட்டித் திரியும்போது முதலமைச்சரைப் பதவி விலகக் கோருவது வேடிக்கையானது.
புதிய அரசமைப்பில் எதுவும் இல்லை என்று முதலமைச்சர், கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கூறியபோதும், கூட்டமைப்பு அதில் அதிகாரங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. இது ஏமாற்றுகின்ற விடயமாகும்.
முதலமைச்சரின் புத்தக வெளியீட்டில், தமிழ் மக்களின் தீர்வுக்காக தமிழ்க் கட்சிகள் மற்றும் தமிழ்த் தலைமைகள் ஒன்றிணையவேண்டும் என்று சம்பந்தன் ஐயா கூறியிருந்தார். இது மக்களை ஏமாற்றும் செயற்பாடு. ஒன்றிணையவேண்டும் எனக்கூறிக் கொண்டு நிலக்கீழ்(அண்டகிறவுண்ட்) வேலைகள் செய்யும் கீழ்த்தரமான நடவடிக்கை எடுக்கும் கட்சியுடன் இணைவது என்பது சாத்தியப்படாத விடயம்.
எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றிணைக்கின்றதோ இல்லையோ, தமிழ் மக்கள் ஒன்றிணையவேண்டும். கேலிக் கூத்தான அரசியல்வாதிகளைப் புறம் தள்ளி நேர்மையானவர்கள் தலைமையை ஏற்கும் நிலைக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள்.
<p>நீதியரசர் விக்னேஸ்வரன் எமக்குத் தலைமைத்துவம் தரவேண்டும். அவரோடு கஜேந்திரகுமாரும் இணைந்து தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தர முன்வரவேண்டும் . என்றார்.