செத்துடலாம்னு தோணுதா?

‘வாழ்க்கையே பிடிக்கல, என்னை யாரும் புரிஞ்சு கொள்ளல , நான் உயிரோட இருந்து யாருக்கு என்ன லாபம் ‘ இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? இப்படிச் சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நண்பரைக் கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தக் கொஞ்சம் படியுங்க.

முதலில் தற்கொலை எண்ணம் என்பது தற்போது அதிகரித்துக் கொண்டு வருகின்ற பெரும் உளவியல் சிக்கல் ஆகும். சிலர் எப்போதும் ஆன்லைனிலேயே இருப்பார்கள். 5000 நண்பர்களை பேஸ்புக்கில் கொண்டிருப்பார்கள். தினம் பத்து பேஸ்புக் பதிவுகள் நூற்றுக்கணக்கான போலோவேர்ஸ் என்று அவர்கள் வாழ்க்கையே வண்ணமயமாக இருப்பதாக நமக்கு தோன்றும்.


உண்மையில் சமூக வலைத் தளங்களில் இருக்கும் இப்படியானவர்களுக்கு நிஜத்தில் தனிமையே துணையாக இருக்கும். இவ்வாறான தனிமையே அவர்களை தற்கொலைக்கு தூண்டிவிடுகின்றது என்பதை சமீபத்திய உளவியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
சரி இவ்வாறான தற்கொலை எண்ணங்களிலிருந்து உங்களையே அல்லது உங்கள் நண்பர்களையோ பாதுகாப்பது எப்படி என்பதற்கு உளவியலாளர்கள் சில வழிமுறைகளைக் கூறுகின்றனர். அவை என்னவென்பதையும் பார்த்துவிடுவிடுவோம்.

*ஒன்றை உணர்ந்துகொள்ளுங்கள் இந்த நிலைமை இப்படியே இருந்துவிடப்போவதில்லை. அது பருவகாலங்கள் போல் மாறிக்கொண்டே இருக்கும். இப்போது கொஞ்சம் சகித்துக் கொண்டால் பின்பு சிரித்துக் கொள்ளலாம்.

*உங்கள் இழப்பு என்பது உங்கள் சார்ந்தவர்களுக்கு வாழ்நாள் துன்பமாக அமையக்கூடும்.

*நீங்கள் செய்வதற்கு நிறைய விடயங்கள் இந்த உலகில் உண்டு என்பதை மறவாதீர்கள்.

*உங்களிடம் வருவதற்காக காத்திருந்த சந்தோசங்கள் உணர்ச்சிகள் உறவுகள் என்பவற்றிற்கு கொஞ்சம் நேரம் கொடுத்து பாருங்கள்.

*இனி வாழவே முடியாது என்று நினைக்கும் அதே அளவு நம்பிக்கையும் வாய்ப்பும் இனிமேல்தான் வாழவேண்டும் என்பதிலும் இருக்கின்றது என்று நம்பித்தான் பாருங்கள்.

தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனடியாகச் செய்யவேண்டியவை
1. கொஞ்ச நேரம் தூங்கி எழும்புங்கள்.
2.எடுக்கும் முடிவை 24 மணித்தியாலங்களுக்கு ஒத்திப் போடுங்கள்.
3.போதைப்பழக்கத்தை பின்பற்றிவிடாதீர்கள்.
4.சோகப்பாடல்களையே மீண்டும்ம் மீண்டும் கேட்பது, சோகமாக வலைத் தளங்களில் பதிவிடுவது போன்றவற்றை நிறுத்திவிடுங்கள்.

இனி தற்கொலை எண்ணம் வருகிறதென்றால் சட்டென்று இவற்றையெல்லாம் நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது சந்தோஷங்களால் மட்டுமே ஆனது என்றால் சொர்க்கம் நரகம் என்ற இரண்டு தோன்றியிருக்காது. வாழ்ந்துதான் பார்ப்போமே? மனிதர்களிடமிருந்து எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு முறைதான்.