பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!

ஆஸ்திரேலியா நாட்டில் பள்ளி, பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் பேருக்கு இழப்பீடாக பணம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் பள்ளி, பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆண் – பெண்களுக்கு இழப்பீடாக பணம் வழங்கும் திட்டத்துக்கு அந்நாட்டு சமூக நலத்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் முறையீடு செய்யும் வகையில் தனி அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முகமையின் பரிந்துரையின் பேரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு சராசரியாக 67 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களும், அதிகபட்ச தொகையாக ஒன்றரை லட்சம் டாலர்களும் இழப்பீடாக வழங்க அரசு தீர்மானித்தது.

இதற்கான நிதியை அந்நாட்டின் பல்வேறு மாநில அரசுகளும், கத்தோலிக்க தேவாலயங்களும் அளிக்க முன்வந்துள்ளன.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயங்களை ஆற்றும் மகத்தான திட்டம் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் குறிப்பிட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு நிதி அளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன.

இந்த திட்டத்தின்கீழ் பணம் பெற்று கொள்பவர்கள் தங்களை கொடுமைப்படுத்தியவர்கள் மீது இனி வழக்கு ஏதும் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.