காக்கை செய்வது சுலபம்!

‘காலுக்கு சுள்ளி

கிழிந்த குடைத்துணி சிறகுக்கு

கண்ணுக்கு பப்பாளி விதை

காவென்று ஊதுங்கள் காதுக்குள்

பறந்துவிடும்

காக்கையென உயிர்பெற்று

ஆம், காக்கை செய்வது சுலபம்!’

காக்கை கா…கா… என்று மட்டும் கத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காக்கையின் குர லில் பலவிதமான சத்த பேதங்கள் உள்ளன. சில சமயம் குழந்தையின் மழலை போல் இருக்கும்.

காக்கையின் மிழற்றல் இனிமை. காக்கையின் கரைதல் புதுமை. சில சமயம் அடித்தொண்டையில் இருந்து கர்… கர்… என்று குரல் எழுப்பி நிறுத்திக் கொள்ளும். நள்ளிரவில் விழித்துக்கொள்ளும். விடியவில்லை என்று தெரிந்து கா… கா… என்று கத்திவிட்டு தூங்கிப்போய்விடும். தூக்கம் வராமல் அவதிப்படும் என் போன்றவர்களுக்கு காக்கையின் இந்த ஏகாந்தக் கத்தல் இனிமையாகவே இருக்கும்.

காக்கைமொழி தெரிந்த மனிதரைப் பற்றி பேப்பரில் படித்திருப்பீர்கள். ஒரு மைதானத்தில் நின்றுகொண்டு காக்கைபோல் கத்தி அவற்றை அழைப்பார். ஒரு பெரிய காக்கைக் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொள்கிறது. தோளிலும், தலையிலும் உட்கார்ந்துகொண்டு அவை கூச்சல் போடுகின்றன. அவற் றோடு அவர் பேசுகிறார். கடைசியாக அவர் எழுப்பும் வித்தியாசமான குரலுக்கு கட்டுப்பட்டு அவை பறந்து போய்விடுகின்றன. காக்கைகளோடு நெருங்கிப்(?) பழகி காக்கை மொழி யைக் கற்றுக்கொண்டாராம். காக்கை கள் பாடுவது உண்டு என்கிறார் அவர். இவை எல்லாம் உண்மையோ? பொய்யோ, ஆனால் காக்கை மனிதர்களின் தோழர் என்பதில் சந்தேகம் இல்லை.

காக்கை வம்சம்

காக்கை பற்றி மறைந்த கானுயிர் ஆய்வாளர் எம்.கிருஷ்ணன் ஆங்கிலத் தில் எழுதிய கட்டுரைகள் சுவாரஸ்யமானவை. அண்டங்காக்கை, நாட்டுக் காக்கை, மணிக்காக்கை என்று பல்வேறு விதமான காக்கைகள் பற்றியும் அவற்றின் சுபாவங்களைப் பற்றியும் அக்கட்டுரைகளில் நுணுக்கமாக விவரித்திருப்பார். கிருஷ்ணனைப் போல் காக்கைகளை நாம் கவனிப்பதே கிடையாது. வீட்டில் பித்ரு காரியங்கள் நடைபெறும்போது மட்டும் காக்கை களை அழைக்கத் தவறுவதே இல்லை. செத்துப்போன முன்னோர்கள் காக்கை வடிவில் வருவதாக ஐதீகம். பலசமயம் சோற்று உருண்டையை சாப்பிடும் காக்கையின் முகத்தில் நான் என் முன் னோர் எவருடைய ஜாடையாவது தெரிகிறதா என்று பார்ப்பேன். அதுவும் தலையை ஒருக்களித்துப் பார்க்கும். காக்கைகள் சங்ககாலம் தொட்டே இருந்திருக்கின்றன. சங்க காலப் பெண்பாற் புலவர் ஒருவரின் பெயர் ‘காக்கைப்பாடினியார்’.

காகம் ஒரு துறவி!

அன்னப் பறவை அழகானது. தண்ணீரையும் பாலையும் கலந்து அதன் முன்பு வைத்தால் அது பாலைமட்டும் குடித்துவிட்டு தண்ணீரை வைத்துவிடுமாம். அன்னப் பறவை பற்றிய கற்பனை அன்னத்தைவிட அழகானது. ஆனால், எனக்கு அன்னத்தைவிட காகம்தான் பிடிக்கும்.

காக்கை சர்க்கரைப் பொங்கலையும் சாப்பிடும். செத்த எலியையும் சாப்பிடும். காக்கையிடம் காணப்படும் இந்த சமநிலை உணர்வு, துறவு மனப்பான்மைக்கு இணையானது. அதனால்தான் காக்கை இருக்கிறது. அன்னம் போய் விட்டது.

இயற்கையின் துப்புரவு தொழிலாளி!

காக்கை இயற்கையின் ‘துப்புரவு தொழிலாளி’ என்று பாடப் புத்தகங்களில் புகழ்ந்துவிட்டு அது அழகற்ற பறவை என்று குழந்தைக்குச் சொல்கிறோம்.

பாவம் எதை நம்புவது என்று தெரியாமல் குழந்தை குழம்பிப் போகிறது. ‘கருப்பே அழகு, காந்தலே ருசி’ எல்லாம் பழமொழியோடு சரி. பெண், காக்கை மாதிரி கருப்பு என்று சொல்லி பெண்களை மணம்முடிக்க மறுப் பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

காக்கையின் வண்ணங்கள்

நிஜத்தில் காக்கையின் நிறம் கருப்பு இல்லை கருநீலம். காக்கையின் கழுத்தை உற்றுப் பார்த்தால் தெரியும் அதில் மரகதப் பச்சை, வெளிர் நீலம், டால் அடிக்கும் வர்ணஜாலங்களை நீங்கள் பார்க்கமுடியும். கண்களைச் சுற்றி சிவப்பு வளையம் வேறு.

காக்கைக்கு வண்ணங்கள் இல்லை என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். அது என் வெள்ளைச் சட்டையில் மஞ்சள், பச்சை, பளீர் வெள்ளை ஆகிய வர்ணங்களில் எச்சமிட்டுப் பறக் கும் வரை!

காக்கையும் கவிஞரும்!

’காக்கை கரைந்தால் விருந்துவரும்’ என்று ஒரு நம்பிக்கை உண்டு. கவிஞர் ந.பிச்சமூர்த்தியின் ஒரு கவிதையில் காக்கை கத்துவதைக் கேட்ட வயதான பெண்மணி “எங்கள் வீட்டுக்கு நாங்களே விருந்தாளியான காலத்தில் நீ வேறு கத்தி மானத்தை வாங்க வேண்டாம்” என்பார்.

’நீலவானில் ஒரு காகம் / மெல்லப் பறந்து நீலமாகும்’ என்கிறார் ஒரு கவிஞர். ’காக்கை ஒன்று பறந்து செல்கிறது. எது நிழல்? எது நிஜம்?’ என்று கேட்கிறார் மற்றொரு கவிஞர்.

பாரதியின் காக்கை

தனது கவிதைகளில் சமயம் கிடைக் கும்போதெல்லாம் காக்கையைக் கொண்டாடுகிறார் பாரதி!

’காவென்று கத்திடும் காக்கை – என் றன் கண்ணுக்கினிய கருநிறக் காக்கை’ என்பார் ஓரிடத்தில்.

’காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா’என்று காக்கையி டம் கண்ணனையே தரிசிப்பார் மற்றோரிடத்தில்.

‘காக்காய்ப் பார்லிமெண்ட்’ என்று ஒரு கட்டுரையே எழுதியிருப்பான் எட்டயபுரத்தான்!

‘ஜகத்சித்திரம்’ என்ற வசன கவிதை யில் ஒரு காட்சி. இடம்: மலையடிவாரத்தில் ஒரு காளிகோவில். நேரம்: நடுப் பகல்

கோயிலை எதிர்த்த தடாகத்தின் இடையில் இருந்த தெப்ப மண்டபத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்துகொண்டு காக்கையரசன் சூரியனை நோக்கிச் சொல்கிறான்:

“எங்கோ வாழ்!

நீலமலைகள் நிரம்ப அழகியன.

வானம் அழகியது. வான்வெளி இனிது”

– என்று ஒரு நீண்ட பாடலை அது இசைக்கிறது. எல்லாப் பறவைகளிட மும் ‘மனிதர் இன்பமுறாததன் கார ணம் மனம்தான். மனம்தான் சத்ரு. மனம்தான் அடுத்துக் கெடுக்கிறது. அதைக் கொத்துவோம். கிழிப்போம் வாருங்கள்… காக்கா! காக்கா!’ என்று முழங்குகிறது அந்தக் காக்கை.

பாப்பாப் பாட்டில் ‘எத் தித் திருடம் அந்தக் காக் காய் – அதற்கு இரக்கப் பட வேணும் பாப்பா!’ என்கிறார். ‘காக்கை திருடுகிறதே என்று அதைத் திட்டாதே அதன்மீது இரக்கப்படு’ என்ற பாரதியின் சொற்களில் என்ன ஒரு தத்துவப் பார்வை. அதைக் குழந்தைக் குப் புகட்டிவிடும் துடிப்பு.

‘காலைப்பொழுது’ என்ற தலைப்பில் ‘தென்னை மரக் கிளைமேற் சிந்தனையோடோர் காகம் வன்னமுற வீற்றிருந்து வானை முத்தமிட்டதுவே! தென்னைப் பசுங்கீற்றை கொத்திச் சிறுகாக்கை மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே!’ ஆகா – இது வெறும் அழகியல் மட்டுமன்று; மெய்யியல்!

காக்கை குப்பை மேட்டிலும் உட் காரும். கோயில்மீதும் உட்காரும். காக்கை மனிதர்களோடு தொடர்புகொண்டு வாழும் அற்புதமான பறவை. ஆண்டெனா கம்பிகளில் மழையில் நனைந்தபடி உட்கார்ந்திருக்கும். வீட் டைச் சுற்றி நடைபழகும். மரத்தில் மாநாடு நடத்தும். ரயில்வே நிலையத் தில் கூடுகட்டும்.

காக்கை சனிபகவானின் வாகனம் என்று புராணங்கள் கூறுகின்றன. காக்கையின் வாகனம் எருமை. எருமையின் மீது காகம்! அதன் பாகன்போல காட்சி தரும் காக்கை!

புராணத்தில் ஒரு காக்கையின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. சாபத்தின் காரணமாக ஒரு முனிவர் காகம் ஆகி விடுகிறார். அவர்தான் காகபுசுண்டர். இவர்தான் ராமாயணத்தை சிவன் பார்வதிக்குக் கூறும்போது கேட்டிருந்து அதை கழுகுக்கு கூறியதாக புராணங்கள் சொல்கின்றன.

குழந்தையின் தோழன்

காக்கைதான் குழந்தையின் முதல் தோழன். அதைக் காட்டித்தான் குழந்தைக்கு தாய்மார்கள் சோறு ஊட்டினார்கள். குழந்தைக்குச் சோறூட்டல்… தொட்டுக்கொள்ள காக்கை! கூடவே ‘காக்கா கண்ணுக்கு மைகொண்டு வா’ என்று பாடல்வேறு. இந்தப் பாடலை தாய்மார்கள் பாடிக்கொண்டே இருப்பார்கள்; கேட்கும் குழந்தை ஆச்சரியப்பட்டுக்கொண்டே இருக்கும்.

குழந்தைகளின் கண்களுக்கு தலைமுறை தலைமுறையாக மை கொண்டுவந்து கொடுத்துக்கொண்டே இருக்கின்றன காக்கைகள்!