அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து 5 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் உள்ள அன்னாகாவல் துறை நகரில் ‘கேபிட்டல் கெசட்’ பத்திரிகை அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் அங்கு ஒரு மர்ம வாலிபர் புகுந்தார். செய்தி அறை பகுதிக்குள் நுழைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணாடி கதவு வழியாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. என்ன நடக்கிறது என தெரியாமல் திகைத்த ஊழியர்கள் உயிர் பிழைக்க அங்குமிங்கும் ஓடி பதுங்கினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை தேடினர். பின்னர் 60 வினாடிகளில் பத்திரிகை அலுவலகத்தில் பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர்.
அவனது பெயர் ஜரோட் ரமோஸ். இவனுக்கு 35 வயது இருக்கும். சமூக வலை தளங்களில் ‘கேபிட்டல் கெசட்’ பத்திரிகைக்கு மிரட்டல் விடுத்து வந்தார். இந்த நிலையில் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து திடீர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டதற்கான காரணத்தை காவல் துறை வெளியிடவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு இந்த பத்திரிகை மீது இவர் நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அது கிடைக்காததால் ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.
பத்திரிகை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் கூறியுள்ளார்.