ஜி.நாகராஜன் தன் மரணப் படுக்கையில் கடைசியாக உச்சரித்தது, ஷெல்லியின் கவிதை வரிகள்: ‘வாழ்வின் முட்கள் மீது நான் விழுந்தேன்! ரத்தம் வடிக்கிறேன்…’. இதை அவர் சொன்னபோது, நான் அருகில் இருந்தேன். அவருடைய வாழ்க்கை பற்றிய தீர்க்கமான சுய அவதானிப்பு. இதை என்னிடமோ, அருகில் இருந்த மற்றொரு நண்பரான சிவராமகிருஷ்ணனிடமோ அவர் சொன்னதாகத் தெரியவில்லை. தன் வாழ்வின் பிரகடனம்போல் இதை உச்சரித்துவிட்டுக் கண் மூடியவரின் உயிர், அந்த இரவின் ஏதோ ஒரு தருணத்தில் பிரிந்தது. 1981-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி காலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையின் பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், அதே நாளின் நள்ளிரவில் மரணமடைந்தார். மறுநாள் காலை மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் மரணத்தை அறிந்தோம். அடுத்து செய்யப்பட வேண்டியது பற்றி நண்பர் சிவராமகிருஷ்ணனும் நானும் திகைத்திருந்த நிலையில், மருத்துவமனை பிணவறையில் உடல் ஒரு நாள் இருந்தது.
பிப்ரவரி 20 காலை 7 மணியளவில் மருத்துவமனை பிணவறையிலிருந்து அவருடைய உடல் நேராக தத்தநேரி சுடுகாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு மிக நெருங்கிய உறவினர்கள் சிலரும் நண்பர்கள் சிலருமாக அதிகபட்சம் 15 பேர் கூடியிருக்க, சில சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு ஜி.என். உடல் எரிக்கப்பட்டது.
விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்க்கை பற்றிய கவனமென்பது இன்று அரசியல் கலை இலக்கியக் கோட்பாட்டுப் பின்புலத்தில் ஒரு படைப்பியக்கமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், 50 ஆண்டுகளுக்கும் முன்னரே அந்த வாழ்க்கை மீதான வசீகர ஈர்ப்போடு அடித்தள மக்களின் வாழ்வை நவீனத் தமிழ் இலக்கியத்தில் கலை நேர்த்தியோடு புனைவாக்கம் செய்தவர் ஜி.நாகராஜன். ‘இந்த வாழ்க்கை இப்படியாக இருக்கிறது’ என்று விலகி நின்று அவதானிக்கும் பார்வையும் அணுகுமுறையும் மிகவும் விசேஷமானவை. தமிழில் லட்சியவாதத்துக்கு எதிரானதும், விளிம்புநிலை மனிதர்களிடம் தனிமனித இயல்புணர்ச்சிகள் சுபாவமாக வெளிப்படுவதன் மூலம் வாழ்வின் அழகு பூரணமாக விரிவதைக் கொண்டாடுவதுமான முதல் குரல் ஜி.நாகராஜனுடையது. இப்படியான தனித்துவமிக்க ஒரு படைப்பாளியின் வாழ்க்கை இவ்வாறாக முடிந்துபோனது. விளிம்புநிலை உலகின் மீது அவர் கொண்டிருந்த வசீகரம், அவருடைய படைப்புலகமாக மட்டும் அமையாமல், அவருடைய சுய வாழ்வையும் விளிம்புநிலைக்கு நகர்த்திக்கொண்டு போனது. அவருடைய படைப்புலகம் அவருடைய வாழ்வுலகமானது. வாழ்க்கையும் படைப்பும் ஒன்றை ஒன்று பாதித்து ஒன்றானது.
பெரும்பாலும் அவருடைய படைப்புலகின் பின்புலமாக இருந்த, தன் வாழ்வின் பெரும் பகுதியை வெவ்வேறு கோலங்களில் வாழ்ந்த அந்த மதுரை நகரில், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எதுவும் தொடங்கப்படுவதற்கு முன்பே, எவ்விதத் துணையுமின்றி மரணமடைந்தார். எனக்குத் தெரிந்தவரை, தன் காலத்திய வாழ்வில் மாறுபட்ட மற்றும் அதிகபட்ச சாத்தியங்களில் தன் வாழ்வை நகர்த்திய ஓர் அரிய மனிதர் ஜி.நாகராஜன். அவர் இந்த உலகைப் பிரிந்தபோது அவருடைய உடமையாக இருந்தவை: ஒரு சார்மினார் சிகரெட் பாக்கெட், தீப்பெட்டி, சிறு கஞ்சா பொட்டலம்.
1969-ல், எனது 17-வது வயதில், ஜி.நாகராஜனிடம் மாணவனாகப் படித்தேன். புகுமுக வகுப்பில் (பியூசி) மூன்றாம் பாடத்தில் தவறி, மதுரையில் பிரசித்திபெற்ற எஸ்டிசி என்ற தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது கணிதப் பாடமெடுத்த ஆசிரியர் ஜி.நாகராஜன். அப்போது, எனக்கு வாசிப்புப் பழக்கமிருந்தாலும் நவீனத் தமிழ் இலக்கியத்தோடு பரிச்சயமில்லை. அவர் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதும் தெரியாது. ஆனாலும், சில நாட்களிலேயே அவர் ஒரு லட்சிய மனிதனாக என் மனதில் இடம்பிடித்திருந்தார். அபாரமாக வகுப்பெடுப்பார். அற்புதமாகப் புரிய வைப்பார். கணிதத்தில் சறுக்கித்தான் பியூசியில் தோற்றிருந்தேன். அதே கணிதத்தில் மிகச் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று பிஎஸ்ஸியில் கணித மாணவனாகச் சேர அவருடைய ஆசிரியத்துவம்தான் காரணம். அப்போது அவருக்கு வயது 40. கம்பீரமும் பொலிவும் கூடி முயங்கிய வசீகரத் தோற்றம். உடல் பயிற்சிகளினால் திண்மம் பெற்ற உடல்வாகு. ஸ்டாலின் மீசை. ராணுவ பாணி முடிவெட்டு. தன்னம்பிக்கை மிளிரும் முகம். ஒவ்வொரு அசைவிலும் அணுகுமுறையிலும் பாந்தமாக வெளிப்படும் லயம். அவரைப் போல் ஆக வேண்டுமென்று ஒரு கனவு மனிதனாக மனம் அவரை வரித்திருந்தது. நாலு முழ அகலக்கரை வேட்டி, வெள்ளை ஜிப்பா, சவரம் செய்த முகமென எப்போதும் பளிச்சென்று இருப்பார்.
அவருடைய ஆடை எப்போதும் புதுசு போலவே தோற்றமளிக்கும். வலது கை நடுவிரலும் சுட்டுவிரலும் சிறு கத்திரிபோல் அமைந்திருக்க, அவற்றின் இடுக்கில் வேட்டியின் பின்புற நடுமுனையை உயர்த்திப் பிடித்தபடி மிடுக்காக அவர் நடக்கும் லாவகத்தை அதிசயித்துப் பார்த்தபடி இருந்திருக்கிறேன். இடதுகை நடுவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே சதா கனலும் சார்மினார் சிகரெட். பின்னாளில், நான் வேட்டி கட்டத் தொடங்கியபோது அவருடைய பாணியில் நடந்து பெருமிதம் கொண்டிருக்கிறேன்.
அதன் பிறகு, ஆறு ஆண்டுகள் கழித்து, 1975-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், தற்செயலாக ஒரு அச்சகத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. என்னைப் பார்த்த உடனே, “நீ என்னோட ஸ்டூடண்ட்தானே” என்றார். நான்தான் அவருடைய தோற்றத்தில் சற்று தடுமாறிவிட்டிருந்தேன். என் லட்சிய ஆண்மகன் பிம்பம் நலிவுற்று, தோற்றம் குலைந்து வாடி வதங்கியிருந்தது. இச்சமயத்தில் அவர் முக்கியமான எழுத்தாளர் என்பதை அறிந்திருந்தேன். நானும் எழுத்துலகில் முதல் எட்டு எடுத்துவைத்திருந்தேன். அன்று கண்ட அவருடைய தோற்றம் வேதனையானது. பளுப்பேறிய வேட்டி, ஜிப்பா. உடல் வெகுவாகத் தளர்ந்துவிட்டிருந்ததில் ஜிப்பா தொளதொள என்றிருந்தது. தயக்கம் சூடியிருந்தது முகம். உடல்மொழியில் மிடுக்கு வெளியேறியிருந்தது. அசைவிலும் அணுகுமுறையிலும் நிச்சயமற்ற தன்மை படர்ந்திருந்தது. கடைசி காலத்திலோ நிலைமை இன்னும் மோசம். லேசாகக் கூன் விழுந்துவிட்டிருந்தது. கடுமையான இருமலும் சளியும் இம்சித்துக்கொண்டிருந்தன. சொறி சிரங்கு என தோல் வியாதியின் அவஸ்தை. ஆனால், அவருடைய அபார நினைவாற்றலும் புத்தியின் தீட்சண்யமும் கடைசி நாள்வரை பிரமிப்பூட்டுவதாகத்தான் இருந்தது.
– சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com